Wednesday 10 June 2020

அனுராதபுர கால நீர்ப்பாசன வளர்ச்சியும் மகாசேனனின் நீர்ப்பாசன பணிகளும்



அறிமுகம்


இலங்கை வரலாறானது தலைநகரங்களைக் அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுவது சிறப்பானதாகும். இவ்வாறான அரசியல் வரலாற்றில் அனுராதபுரத்திற்கு தனிச்சிறப்பிடம் வழங்கப்படுகின்றது. அனுராதபுரத்தில் பண்டுகாபயன் ஆரம்பித்த இராசரட்டை நாகரீகம் 12ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் ஆக்கிரமிப்புடன் முற்றுப் பெற்றது. அனுராதபுரம் ஏறத்தாழ 1300 வருடங்கள் தலைநகராக இருந்தது. அத்தோடு முதன்முதலாக தோன்றிய இவ் இராசதானி நீண்டகாலம் நிலைத்திருந்த இராசதானியாகவும் காணப்படுகின்றது. பண்டுகாபயன் எனும் அரசனே அனுராதகம எனும் நகரை மையப்படுத்தி அனுராதபுர இராச்சியத்தை அறிமுகப்படுத்தினான். பண்டுகாபயன் தொடக்கம் ஐந்தாம் மகிந்தன் வரையிலான அரசியல் வரலாற்றினை அனுராதபுரம் கொண்டிருந்தது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது இராசதானியான அனுராதபுர இராசதானியின் சிறப்பாக கூறப்படுவது நீர்ப்பாசன தொழினுட்பவியல் வளர்ச்சி மிக உன்னத நிலையினை அடைந்தமையாகும். இவ் வளர்ச்சக்கு பங்காற்றியவர்களில் சமகால மன்னர்களைக் கூறலாம்.

          புராதன இலங்கை நாகரிகத்தின் முக்கியமான அம்சமாகக் கருதக்கூடியது இந்நாட்டில் வளர்க்கப்பட்ட விவசாயமுறையும், நீர்ப்பாசன பொறிமுறையுமாகும். பொதுவாக உலக நீர்ப்பாசனவியல் வரலாற்றிலே ஈழத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசனவியல் பொறிமுறையின் வலைப்பின்னலமைப்பு சிறந்த இடத்தினை வகிப்பதாக வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர். உலகிலே முதல்தரமான நீர்ப்பாசனவியல் பொறிமுறை நுட்பத்தில் சீனாவே சிறந்த பெறுபேற்றினை அடைந்திருந்தது. அதன் பின்னர் இரண்டாம் இடத்தில் இலங்கையே அச்சாதனையைக் பொறுத்து சிறந்த பெறுபேறினைப் பெற்றிருந்தமையைக் அறிஞர் எடுத்துக்காட்டியுள்ளார்.

          பேராசிரியர் நீடம் என்பவர் இலங்கையில் இராஐரட்டையில் வளர்ச்சி பெற்றிருந்த நீர்ப்பாசனவியல் தொழினுட்பமுறையை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றின் விஞ்ஞான அம்சங்களைக் எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனுராதபுரத்திலும் அதற்குப் பின்னரும் விவசாயத்துறையிலே குறிப்பிடத்தக்க முன்னேற்றமும், மேலதிக உற்பத்திமுறையும் ஈட்டப்படுவதற்கு இந்நீர்ப்பாசனவியல் நிறுவன அலகுகளே இருந்தன.

           முற்பட்ட அனுராதபுரத்தின் பெரும்பாலான காலப்பகுதி முழுவதிலும் பன்மடங்கு உணவுப்பெருக்கம் ஏற்பட்டிருந்தமைக்கும் வானுயர ஓங்கி எழுப்பப்பட்டிருந்த பிரமிட்டுக்களை ஒத்த தாதுகோபங்களினது தோற்றத்திற்கும் இந்நீர்ப்பாசனவியல் அலகுகளே மூலங்களாகவிருந்தன. இவ்வாறு இலங்கையில் வளர்த்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசனவியல் வரலாற்றினையும் அத்தோடு தொடர்புபட்ட விவசாயமுறைகளையும் அறிந்துக்கொள்ள உதவும் இலக்கிய மூலாதாரமாக விளங்குவது மகாவம்சமாகும். அதுமட்டுமன்றி ஆதி பிராமிசாசனங்களும் நீர்ப்பாசன நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்பாகத் தகவல்கள் தருவதனைக் காணலாம்.

     கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து குறிப்பாக தேவநம்பியதீசன் காலத்திலிருந்து கிடைக்கும் சாசனச்சான்றுகள் பெருமளவிற்கு தொடர்ச்சியான வகையில் நீர்ப்பாசன அலகுகளின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

    கி.மு 1ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கைப் பிராமிச்சாசனங்களில் குளங்கள், கால்வாய்கள், வயல் நிலங்கள  பற்றிய செய்திகள் அதிகளவில் இடம்பெயறத் தொடங்குகின்றன. மன்னராலும், தனிப்பட்ட மக்களினாலும் பௌத்த சங்கத்திற்கு வழங்கப்பட்ட தானங்களுள் பெரும்பாலானவை இக்குளங்களும், கால்வாய்களும், நெல்வயல்களுமாக இருப்பதனைக் காணலாம். பறங்கியாற்றின் குறுக்கே அணைக்கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட இராட்சதக்குளம் அவ்வாறே கி.முற்பட்ட நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டதாக கொள்ளப்படுகின்றது. பின்னர் காலம் செல்லச்செல்ல இத்தகைய குளங்களிலிருந்தும்  கால்வாய்களிலிருந்தும் பெறப்பட்ட நீர்வரியின் ஒருபாகம் பௌத்தசங்கத்தின் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டிருந்தமை பற்றிச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறான தகவல்களைக் அடிப்படையாகக் கொண்டுதான் புராதன இலங்கையின் நீpர்ப்பாசனவியல் பொறிமுறையின் சிறப்பியல்புகளைக் வெளிக்கொணர முடிகின்றது. அனுராதபுரத்திலும் புத்தளத்திலுள்ள பொம்பரிப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வுகளின் முடிவுகள் நீர்ப்பாசவியலின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

மன்னராலும் தனிப்பட்ட மக்களாலும் பௌத்த சங்கத்திற்கு வழங்கப்பட்ட தானங்கள் கால்வாய்களும் நெல்வயலுமாகும். காலம் செல்ல செல்ல இத்தகைய குளங்களிலிருந்தும் கால்வாய்களிலிருந்தும் பெறப்பட்ட நீர்வரியின் ஒருபாகம் பௌத்த சங்கத்தின் தர்மநடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டிருந்தமை பற்றி சாசனங்களில் குறிப்பிடப்படுகின்றன.

நீர்ப்பாசன வளர்ச்சி


      இலங்கை நாகரிகம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமாகி வளர்ச்சியடைந்தது. கி.மு 6ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர்களாலேயே இந்நாகரிகம் உருவானது. அவர்கள் நதிக்கரையில் தமது குடியேற்றங்களைக் அமைத்துக்கொண்டதுடன் நதியின் நீரைப்பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். காலப்போக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக நீரைச் சேமித்து வைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. எனவே நீர்ப்பாசன அமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் முன்வந்தனர்.

     நீர்ப்பாசனமுறையொன்றின் தேவைக்கான காரணங்கள்

  • மக்களின் பிரதான ஐீவனோபாயமாக நெற்செய்கை விளங்கியமை.
  • ஆற்றுநீர் நெற்செய்கைக்கு போதாமை.
  • மழைவீழ்ச்சி வருடத்தில் பருவக்காலங்களில் மாத்திரம் கிடைத்தமை
  • கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி போதியதாக இல்லை.
  • சனத்தொகை அதிகரிப்பினால் விவசாய நிலங்கள் விஸ்தரிக்கப்பட்டமை.

         அந்தவகையில் அனுராதபுர இராசதானியில் மன்னர்கள் சிறப்பிடம் பெற காரணமாக அமைந்ததில் அம்மன்னர்கள் ஆற்றிய நீர்ப்பாசனத்திற்கான பங்களிப்பு முதன்மையானதாகும். இலங்கையில் குடியேறிய ஆரியர்கள் நீர்ப்பாசன முறைகளைக் அறிந்தவர்களாயிருந்தனர். இலங்கையின் நதிக்கரைகளை மையமாகக் கொண்டு ஆதி ஆரியர் குடியேற்றங்களைக் அமைத்தனர். இவர்கள் நெற்செய்னை முறையைக் அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினர். காலப்போக்கில் ஏற்பட்ட சனத்தொகை பெருக்கமானது நீர்ப்பாசனம் பற்றிய எண்ணப்பாட்டினை ஏற்படுத்தியது. எனினும் ஆரியர் வழிவந்த சிங்களவர் நுட்பமும், சிக்கலும் நிறைந்த பாரிய நீர்த்தேக்கங்களையும், பல மைல்களுக்குச் செல்லும் கால்வாய்களையும் பின்னரே இலங்கையில் விருத்தி செய்தனர்.

         ஆரம்பத்திலே இலங்கை வந்த ஆரியர் மல்வத்து ஓயா, கலா ஓயா, தெதுறு ஓயா, மகா ஓயா, களனிகங்கை, வளவகங்கை, மாணிக்ககங்கை போன்ற ஆறுகளுக்கு அண்மையான பகுதியினிலே குடியேறினர். இவ்வாறு குடியேறிய பின்னர் நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தயொரு நாகரிகத்திற்கு வித்திட்டதெனலாம். ஆற்று நீரைப்பயன்படுத்தி விவசாயம் செய்வதன் பொருட்டு ஆரியர் ஆறுகளுக்கு அண்மையில் குடியேறினர். ஆரம்பத்தில் இந்த ஆற்று நீர் நெற்பயிர்ச்செய்கைக்கு போதியதாக காணப்படவில்லை. சனத்தொகை பெருக பெருக உணவுப்பொருட்களின் உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியமாயிற்று. நீர் வழங்க வேண்டிய நிலங்களின் பரப்பும் அதிகமாயிற்று. ஒரு வருடகாலத்தில் இருந்த மழைநீர் வருடம் முழுவதிற்கும் போதுமாக காணப்படாமையினால் கோடைக்காலத்தில் பயன்படுத்தும் பொருட்டு அதனை சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகவே மனித முயற்சியால் நீரைப் பெறும் முறைகள் ஏற்பட்டன.

         ஆரம்பத்திலே சிறிய குளங்களைக் கிராமப்பகுதியிலே அவர்கள் கட்டியிருந்தனர். இப்படியான குளம் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய கூட்டத்தை சேர்ந்த அனுராதன் என்பவன் கட்டியதாக மகாவம்சம் கூறுகின்றது.      

         புராதன காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பில் பல சிறந்த வாய்ப்புக்களைக் கொண்டிருந்தது. இலங்கையின் நதிகள் நீர்ப்பாசனத்திற்கான உயிர்நாடியாக அமைந்தன. இவை வற்றாத நதிகளாகவும், கிளை நதிகளைக் கொண்டும், இரு பருவக்காற்றுக்கள் மூலம் மழை பெறும் நதிகளாகவும் காணப்பட்டமையானது நதிகளை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன விருத்திக்கு வழிசமைத்தது. சமகாலத்தில் நீர்ப்பாசன அறிவும், தரைத்தோற்ற சிறப்புக்களும் ஒன்று சேர்ந்து நீர்ப்பாசன உருவாக்கத்திற்கு வித்திட்டுக்கொடுத்தன. அத்துடன் அனுராதபுர மன்னர்கள் கையாண்ட இராஐகாரிய முறையானது  நீர்ப்பாசன விருத்தியினைத் துரிதப்படுத்தியது.

புராதன நீர்ப்பாசன தொழினுட்பத்தில் குளக்கட்டு, அலைதாங்கி, கலிங்கல்,கலிங்கல் தொட்டி,வான்கதவு, உள்வான் கதவு, உயர் அணை, கலிங்கற்கட்டு, நீரேந்துப்பிரதேசம், சிறுகுளங்கள் ஆகிய பகுதிகளைக் கொண்டு காணப்படும்.

பிரதான குளத்தில் சேறும் வண்டலும் சேர்வதைக் தடுக்கும் முகமாக சிறிய குளங்களைக் அமைத்தலும் அதற்கான ஒரு கால்வாயை அமைத்தலும் புராதன நீர்ப்பாசன தொழினுட்பத்தின் பண்பாகும். பாய்ந்தோடும் நீரை குறுக்கே மறித்துக் கட்டி குளக்கட்டை அமைப்பதற்கு இரு எச்சக்குன்றுகளின் பாறைச்சுவடுகளைக் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மின்னேரியா குளத்தின் குளக்கட்டானது குவாட்சைட் பாறை பரந்துள்ள அமைப்பிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எச்சக்குன்றுகளோ பாறை தொடர்களோ இல்லாதவிடத்து நிலத்தின் அமைப்புக்கேற்ப குளக்கட்டுக்கள் அமைக்கப்பட்டன. உதாரணமாக மன்னார் மாவட்ட இராச்சத குளக்கட்டானது 7 மைல் நீளத்தில் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டது.

பண்டைய நீர்ப்பாசண தொழினுட்பத்தைக் அறிந்துக் கொள்ள அல்லது சிறந்த உதாரணமாக அமைவது பாரிய குளங்களில் இருந்து நிரைத் திறந்து விடுவதற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட  வியூகம் “மடைக்கதவு” சிறப்பாக அமைகின்றது. இதனை விசாலமான கற்பாறைகளைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க உயரத்தில் மடைக்கதவு அமைக்கப்பட்டு இருக்கும். பண்டைய கல்வெட்டுக்களில் மடைக்கதவு சம்மந்தமாக கூறப்பட்டுள்ளது. இதே போன்று கற்றூண் “தண்ணீர் விளக்கு” என்னும் பதத்தால் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்ட இருந்தது.

நதிகளை மறித்து அணைக்கட்டி அந்நீரைக் குளங்களுக்கு கொண்டு செல்லுதல் மிகப் பழைமையான தொழினுட்பமாகும். கி.மு2ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில்; “அடிக” எனும் பெயரால் குறிப்பிடப்படும் அதிகாரி ஒருவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவன் கால்வாய்கள் அமைப்பதில் ஈடுபட்ட ஒருவனாவான்.

குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான தொழினுட்பத்தைக் கொண்டு அதனைப் பாதுகாத்தனர். அதாவது கிணறுகளைக் வெட்டும் போது முறையான திட்டமிடல் முறை காணப்பட்டது. பெரிய மட்பாண்டங்கள் பலவற்றை கிணற்றுக்குள் புதைத்து கிணற்றின் சுவரை மூடியுள்ளனர். இதனை “ ஊராகெட” கிணறுகள் எனப்படும்.

       குளத்தில் எழும் நீரலையினால் குளக்கட்டு அரிப்பெடுக்காமல் பாதுகாக்க குளக்கட்டின் உட்புறத்தே கருங்கற்களைப் பரவி அலைத்தாங்கி அமைக்கப்படும். புராதன குளங்களில் நுணுக்கமான முறையில் நீர் கசியா வண்ணம் கருங்கல்லினால் கலிங்கல்(மடைக்கதவு) அமைக்கப்படிருந்தமை சிறப்பம்சமாகும். கலிங்கல் தொட்டி என்பது இலங்கைக்கு நீர்ப்பாசன தொழினுட்பத்தின் உயர்தரமான நிர்மாணமாகும். கலிங்கல்தொட்டியினுள் நீர்க்கட்டுப்பாட உபகரணம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இது  மொஹல  எனப்படும்.

        கால்வாய்களுடன் தொடர்பான தொழினுட்பத்தை பார்க்கும் போது மிகவும் சாய்வான ஒரு பிரதேசத்தினூடாக கால்வாயை  அமைக்கும் போது நீரின்  வேகத்தை குறைப்பதற்காக கருங்கல்லினால் அத்திவாரம் அமைக்கப்பட்டது. அத்துடன் சிறிய கற்றூண்களை கால்வாயின் உள் பகுதிகளில் இடையிடையே பொருத்தப்பட்டது.

  • எலகர அணையிலிருந்து மின்னேரியா குளத்திற்கு நீரைக்கொண்டு செல்லும் எலகர கால்வாய்

     புராதன காலத்தில் சுரங்கவழி நீர்ப்பாசன தொழினுட்பமும் வளர்ச்சியடைந்தது. குழாய்கள் மூலம் குளத்து நீரை பொய்கை,பூங்கா என்பவற்றிற்கு விநியோகிக்கப்பட்டது.

  • திசாவாவி நீரை ரன்மசு உயன பூங்காவிற்கும் குட்டம் பொய்கைக்கும் விநியோகித்தமை

     
      வயல் நிலங்களுக்கு நீரைப்பெற்றுக் கொள்வதற்காக அருவிகள் ஆறுகள் என்பவற்றை மறித்துக் கட்டப்படுவது அணைக்கட்டாகும். இவ்வணைக்கட்டை சிற்றணைக்கட்டு என்பர். இலங்கையின் ஆரம்பக்காலத்த்தில் சிறிய நீரோடைகளைக் மறித்து சிற்றணைக்கட்டுகளைக் கட்டுவதன் ஊடாக பெற்ற அனுபவத்தால் ஆறுகளைக் மறித்து பாரிய நீர்த்தேக்கங்களைக் அமைப்பது வரையிலான தொழினுட்பம் வளர்ச்சியடைந்தது. இலங்கையில் அணைக்கட்டு அமைக்கும் தொழினுட்பத்தைப் பார்க்கும் போது தற்காலிக, நிரந்தர அணைக்கட்டுக்கள் என இருவகை காணப்பட்டன. வவுனியா மன்னார் சந்திக்கு அருகே மல்வத்து ஓயாவை மறித்துக் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு நிரந்தரமான அணைக்கட்டாகும் இந்நீர்த்தேக்கத்தில் இருந்து ஆரம்பமாகும் கால்வாய் மூலம் 17 மைல் நீளத்திற்கு யோத வாவிக்கு(இராச்சத வாவி) நீர் கொண்டு செல்லப்பட்டது.

இலங்கையில் குளங்களும் கால்வாய்களும் அமைக்குதொழினுட்பத்துடன் பொய்கைகள் அமைக்கும் தொழினுட்பமும் வளர்ச்சி அடைந்தது. அபயகிரியின் யானைப்பொய்கை குளிப்பதற்காக அமைக்கப்பட்ட பெரியதொரு பொய்கை ஆகும். அனுராதபுர ரன்மசு பூங்காவின் பொய்கை நீராடுவதற்கும் நீர் விளையாட்டிற்கும் பயன்பட்டதாகும்.

கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 10ஆம் நூற்றாண்டுகளுக்குமிடைப்பட்ட காலத்தில் இலங்கையின் புதிய நீர்ப்பாசன நிறுவனங்களினை அமைப்பதை விட மன்னர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பெருங்குளங்களையும்,  நீர்ப்பாசனக் கால்வாய்களையும் புனரமைப்பதிலும் பாராமரிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். ஏனெனில் கி.பி 7 அம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்புகளாகும். இதனால் இலங்கை நீர்ப்பாசன வளர்ச்சிபெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புத்ய நீர்ப்பாசன நிறுவனங்களைக் உருவாக்கி பாசன மேம்பாட்டுத் திட்டங்களைக் பாராமரிப்பதே பொருத்தமானதாக பிற்பட்ட அனுராதபுர ஆட்சிக்கால மன்னருக்குப் புலப்பட்டமையினால் புதிய நீர்ப்பாசன பொறிமுறை நிலையின் வளர்ச்சி இலங்கையில் தடைப்பட்டது.

சேவைக்கடப்பாடுகளால் உபரி உற்பத்தி உறிஞ்சப்படுதல் அரசனுக்குச் செய்யும் சேவையான ராஜகாரியம் எனப்பின்னர் அழைக்கப்பட்டது. இத்தகைய கோவி நடவடிக்கைகள், நீர்ப்பாசன வேலைகள் கட்டிட நிர்மாணம் ஆகிய பொது நடவடிக்கைகள் ஒவ்வோரு சாதாரண மனிதனையும் ஈடுபட வைத்தது. 2ஆம் நூற்றாண்டுக்குரிய மஹாதூப கட்டிடம் பற்றி மகாவம்சம் தரும் விவரணம், சேவை, உழைப்பு , பொதுவேலைக்கு ஆட்கள் திரட்டப்பட்டது என்பதை காட்டுகின்றது.

இவ்வாறு அனுராதபுர காலத்தில் தொடர்ச்சியான வகையில் பெருங்குளங்களும் கால்வாய்களும் அமைக்கப்பட்டு நீர்ப்பாசன பொறியமைப்பின் மூலம் மேலதிக விவசாய ஈட்டம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு நிலையின் செழிப்பினை அனுராதபுரத்திலும் ராஜரட்டையின் பல்வேறு பிராந்தியங்களிலும் வானுயர அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்களின் மேற்கட்டுமானம் நன்கு துலாம்பரப்படுத்தியுள்ளன. இந்நிலையின் வளர்ச்சிக்கு விவசாய ஈட்டத்தோடு உள்நாட்டு வெளிநாட்டு வாணிபத் தேட்டமும் அடிப்படையாக அமைந்தது.

 பிற்பட்ட அனுராதபுர காலத்தில் (கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதி) இராசரட்டையின் நீர்வள நாகரிகத்தில் ஒரு தேக்கநிலை காணப்பட்டதே ஒழிய அவற்றின் பொறிமுறைத் தொழினுட்பவியல் வளர்ச்சி பெற்றுச் சென்றுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். கி.பி 11ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு இராசரட்டையில் வளர்த்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசன பொறிமுறையமைப்பின் அதியுச்ச வளர்ச்சிநிலைக்கு பிற்பட்ட அனுராதபுர காலத்தினூடாக வழங்கப்பட்ட நீர்ப்பாசனபொறிமுறை அறிவின் அடிப்படையான காரணமென்பதனை மறுக்கமுடியாது. இதனை விட நிலமானியச் சமூகமொன்றின் உச்சவளரச்சியே காரணமாகும் இதனை பல்வேறு வகையான வரலாற்று மூலங்களும் உறுதிபடுத்துகின்றன.  

அந்தவகையில் அனுராதபுர நீர்ப்பாசன வளர்ச்சியைக் அடிப்படையாகக் கொண்டு இரண்டு கட்டங்களாக வகுத்து ஆராயலாம்.

  • முந்திய அனுராதபுரகாலம்
  • பிந்திய அனுராதபுர காலம்

         முந்திய காலக்கட்டமானது  ஆரம்பம் முதல் முதலாம் உபதிஸ்ஸன் வரையான மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை விளக்கும் அதேவேளை பிந்திய அனுராதபுர காலமானது தாதுசேனன் முதல் ஐந்தாம் மகிந்தன் வரையிலான காலத்தினை உள்ளடக்கியுள்ளது. ஆரம்ப காலக் குளங்கள் கால்வாய்கள் அளவில் சிறிதாகக் கட்டப்பட்டன. இவை பற்றி கல்வெட்டுக்களும் காலவேடுகளும் கூறுகின்றன. குளங்களும் ,கால்வாய்களும் பௌத்த சங்கத்திற்கு தானமாக வழங்கப்பட்டமை பற்றியும் பிராமிச் சாசனங்களில் கூறப்பட்டுள்ளது. பண்டையக் குளங்களில் விவசாயத் தேவை நிமிர்த்தம் அமைக்கப்பட்ட கிராமக்குளங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான குளங்கள் அமைப்பதில் கமிக,பருமக முதலிய கிராமத் தலைவர்கள் முன்னோடியாக விளங்கினர். இவர்கள் மூலம் சிறுகுளங்கள் அமைக்கப்பட்டன. கி.மு 1 ஆம் நூற்றாண்டிளவில் ஏற்பட்டுக்கொண்ட சனத்தொகை பெருக்கமானது நீர்ப்பாசனமுறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தது. சமகாலத்தில் கிராமியக் குளங்கள், சிறியகுளங்களையடுத்து பெரிய குளங்களை வெட்டும் பணிகள் தொடங்கியது.

         நீர்ப்பாசனமானது அனுராதபுர இராச்சியத்தில் வளர்ச்சியைத் தொடங்குகின்றது. கிராமப் பகுதிகளே குளங்களை அமைக்கும் வேலைகளை கி.மு 6ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு கி.மு 1ஆவது நூற்றாண்டு வரை படிப்படியாகக் அபிவிருத்தியடைந்தன. எனினும் கி.மு 1ஆம் நூற்றாண்டளவில. மகாவலிகங்கை போன்ற பேராறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் நீரை எடுத்துவரும் முறைகள் ஆரம்பிக்கப்பட்டதென்றும் வம்சக்கதைகளும் கல்வெட்டுக்களும் ஆதாரம் காட்டுகின்றது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் திஸ்ஸவாவியை தேவநம்பியதீசன் அமைத்தான் என்பது ஐதீகம் அச்சிறிய குளம் காலப்போக்கில் அளவில் பெரியதாகி புனராக்கம் பெற்றது.

 கி.மு 3ஆம் நூற்றாண்டில் நீரப்பாசன வேலைகளில் இருவகைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஒருமுறையின் படிசிற்றாறுகளும் கிளை ஆறுகளுக்கும் குறுக்கே கற்கள் கொண்டு நிரந்தரமான சிறிய அணைக்கட்டுக்களையேனும் மரங்களையும் களிமண்களையும் கொண்டு தற்காலிகமாக அணைகளையேனும் அமைத்து ஆற்று நீரானது வாய்க்கால் மூலம் வயல்களுக்கு பாய்ச்சப்பட்டது. இரண்டாவது முறையின் படி கிராமப்புற குடியேற்றங்கள் அமைந்திருந்த பகுதிகளுக்கு தாழ்வான பகுதிகளிலே வயல்களுக்கு நேராக நீர்பாய்ந்து செல்வதற்கு ஓழுங்கு செய்யப்பட்டன.

ஊர்க்குளங்கள் ஊர்பொதுச்சொத்தாக  அனுபவிக்கப்பட்டன. கி.பி முதலாம் நூற்றாண்டு காலப்பகுதி முதல் நீர்ப்பாசன பொறிமுறையானது ஒரு திட்டமிட்ட வகையில் இலங்கையில் பல பாகங்களிலும்  விரிந்து வளர்ச்சி பெற்றது. இதுவரைக்காலமும் ஊர்க்குளங்களாக இருந்த குளங்கள் பெருங்குளங்களாக மாற்றம் பெற்றன. கி.மு முதலாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த நீர்ப்பாசனவளர்ச்சியை விட கி.பி முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஏற்பட்டுக்கொண்ட வளர்ச்சியானது சிறப்பாய் அமைந்தது. இத்தகைய பரந்தளவிலான நீர்ப்பாசன பொறியியல் நுட்பத்தினை மகாசேனனே முதலில் உருவாக்கினான். குளங்களினை அமைப்பதில் அனுராதபுரகால மன்னர்கள் ஆற்றிய பணியானது விவசாயத்தில் தன்னிறைவை அடைய வழிவகுத்தது. எனவே மனனர்களது பங்களிப்பு தொடர்பாக நோக்குவது மிகவும் முக்கியமானதாகும்.


மன்னர்களும் அவர்களது நீர்ப்பாசன பணிகளும்


 அனுராதபுர இராசதானியின் முதல் மன்னான பண்டுகாபயன் என்பான் நிறுவிய பசவக்குளத்துடன் (அபயவாவி) ஏற்பட்டுக்கொண்ட நீர்ப்பாசன வளர்ச்சியானது பிற்பட்ட மன்னர்களது வியத்தகு நீர்ப்பாசன தொழினுட்ப முன்னேற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை. இதனைவிட காமினிவாவி, ஜயவாவி ஆகிய குளங்களைக் இவன் அமைத்தான். எனினும் அபயவாவி மட்டுமே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பசவக்குளத்துடன் ஏற்பட்ட இந்த வளர்ச்சி முதன்முதல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்ப்பாசனம்  என்ற பெயரை அந்தக்குளம் பெற உதவியது.

பண்டுகாபயன் இட்டுக்கொடுத்த வழியானது தேவநம்பியதீசன் உள்ளிட்ட சில மன்னர்கள் சிறிய அளவில் நதிகளை ஆதாரமாக்க கொண்டு குளங்களைக் நிறுவுவதற்கும் பிற்பட்ட கால மன்னர்கள் பெரியளவிலான குளங்களை அமைப்பதற்கும் வழிகாட்டியது. பண்டுகாபயன் பின்னர் தேவநம்பியதீசனால் திஸாவாவியை கட்டினான். சத்தாதிஸ்ஸ ( கி.மு 140 – 122) மன்னன்  18 குளங்கள்   அமைத்தாக வம்சக்கதைகள் கூறுகின்றன.

இளநாகன் காலத்தில் திஸ்ஸ வாவியும் தூரதிஸ்ஸ வாவியும் கட்டப்பட்டன. இரண்டாம் முகலானால் பதவியாக்குளம், பத்பஹன் குளம் (நாச்சியாத்தீவுக் குளம்) அமைக்கப்பட்டன. நீர்ப்பாசனவியலில் பெரும்புரட்சியை ஏற்படுத்திய மன்னனாக காணப்படுபவன் வசபன் (கி.பி 62 – 106) மன்னனாவான். அவனால் 11 குளங்களும் 12 கால்வாய்களும் அமைக்கப்பட்டதாக மகாவம்சத்திலலும் வம்சக்கதைகளிலும் குறிப்புண்டு. எனினும் அவற்றுள் குறிப்பிடப்படிருப்பது எலகர கால்வாய் மட்டுமாகும். இதற்கு அவனின் ஆட்சிக்கால அமைதியான சூழ்நிலையே காரணம் என குறிப்பிடப்பட்டன. இவன் அமைத்த குளங்களில் மானாங்கட்டிய(மாணின்விட்டி அல்லது மகாநிக்கவட்டி), மகாவிலாச்சிய(மாயென்), நொச்சிப்பொத்தான ஆகியவை சிறப்பானவையாகும். அவற்றுள் பெரும்பாலானவை தற்காலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரியக்குளங்களை அமைக்கும் தொழினுட்பத்தை அறிமுகப்படுத்திய பெருமை இவனையேச் சாரும். இத் தொழினுட்பத்தைப் பின்பற்றியே பிற்கால ஆட்சியாளர்களால் பெரிய குளங்கள் அமைக்கப்பட்டது.

        அவனால் அமைக்கப்பட்ட கால்வாய்களில் எலகர கால்வாய் முக்கியமானதாகும். இக்கால்வாய்கள் மூலமாகவே இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னர் அம்பன்கங்கையில் இருந்து நீர்ப்பாய்ச்சப்பட்டது. அம்பன் கங்கைக்கு குறுக்காக அணை கட்டி அதிலிருந்து வடதிசைக்கு நீரைக்கொண்டு செல்வதற்கு கட்டப்பட்ட இக் கால்வாய் 30 மைல் வரை நீளமாக இருந்தது. நீர்ப்பாசன ரீதியிலான தொழினுட்பம் இவனின் காலத்தில் கணிசமான அளவில் வளர்ச்சியடைந்தது. வசபன் மன்னன் கட்டுவித்த குளங்களானவை இதுவரை அமைக்கப்பட்டவற்றை விட பெரியளவிலானவையாகும். அதுமட்டுமல்ல இதுவரை பயன்படுத்தப்படாத தொழினுட்பம், நீர்ப்பொறிமுறைநுட்பம் என்பன முதன்முறையாக வசப மன்னன் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டமையைக் காணலாம்.

 எலஹர எனும் இடத்தில் அம்பன் கங்கைக்கு குறுக்கே அணைகட்டி எலஹர கால்வாய் மூலம் கவுடுளு, மின்னேரியா, கந்தளாய் எனும் குளங்களுக்கு நீர் வழங்கப்பட்டது.

வசப மன்னனது சிறப்பாக அமைவது இவன் பயன்படுத்திய சுரங்கவழி நீர்ப்பாசன முறையாகும். றண்மசு பூங்காவுக்கு சுரங்க வழியாக நீரைக் கொண்டு சென்றான்.

கி.பி முதலாம் நூற்றாண்டிற்கும் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் கட்டப்பட்ட குளங்கள் பல சாசனங்களிலும், மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் மகாவம்சத்தில் குறிப்பிடப்படாத 150 குளங்களினதும், கால்வாய்களினதும் பெயர்களை சாசனச் சான்றுகள் தருகின்றன. அந்தவகையில் கி.பி 3ஆம் நூற்றாண்டில் இவ்வளவு பெருந்தொகையான குளங்கள் கட்டப்படிருந்தமையில் இருந்து  நீர்ப்பாசன நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது.

கி.பி முதலாம் நூற்றாண்டில் அடையப்பட்டிருந்த நீர்ப்பாசன பொறிமுறையறிவினை விட கி.பி 1 ஆம் நூற்றாண்டில் மிகவும் உயர்ந்ததும் மிகப்பரந்ததுமான இலங்கையின் பலபாகங்களில் இத்தகைய பரப்பளவில் கூடிய நீர்பபாசன பொறிமுறை கையாளப்பட்டிருந்தன.இத்தகைய நீர்ப்பாசன பொறிமுறை அமைப்பின் வலைப்பின்னலை முதன்முதலாக மகாசேன மன்னனே உருவாக்கினான்.(இவனது கால நீர்ப்பாசன வளர்ச்சி பற்றி பிற்குறிப்புகளில் காணலாம்) இவ்வகையில் இலங்கையின் நீர்ப்பாசனவியல் பொறிமுறை வரலாற்றில் கி.பி 3ஆம் நூற்றாண்டு ஓரு மைல்கல் ஆக விளங்குகின்றது.

2ஆம் முற்பகுதி தொடக்கம் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்பட்ட காலம் இலங்கை தமிழ் இராச்சியப்படையெடுப்புக்களால் பாதிக்கப்படாததால் அந்நீண்ட சமாதான காலத்தில் மன்னர்கள் கிராம குள அமைப்பிலிருந்து பாரிய நீர்த்தேக்கங்கள் அமைக்க எத்தனித்தனர். பின் வந்த நூற்றாண்டுகளில் இப்பொழுது அடையப்பட்டிருந்த நீர்ப்பாசன பொறிமுறையறிவே தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இக்காலப்பகுதியில் மகாசேனன் மன்னனின் வழியைப் பின்பற்றி பல்வேறு மன்னர்களும் பெருங்குளங்களைக் அமைப்பதனைக் காணமுடிகிறது. கி.பி 4ஆம் நூற்றாண்டில் அவ்வாறான ஓர் அரும்பணியை ஆற்றியவனாக முதலாம் உபதீசன் என்ற மன்னன் தோப்பாவாவி,தம்புத்துளு வாவி போன்ற குளங்களைக் அமைத்தான். இக்குளங்களைக் விசாலித்து பிற்காலத்தில் 1ஆம் பராக்கிரமபாகு பராக்கிரம சமுத்திரத்தை அமைத்தாக சூளுவம்சம் குறிப்பிடுகின்றது. இவன் 6 குளங்களைக் அமைத்தான். அதிலே 3 குளங்களையே புதியதாக நிறுவியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கி.பி 5ஆம் நூற்றாண்டில் அத்துறை பொறுத்து தாதுசேனன் மன்னனும் அரும்பணியாற்றியவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.

தாதுசேனன் (கி.பி 455-473) மன்னனுடைய ஆட்சிக்காலம் இலங்கையின் அரசியல், பண்பாட்டு, பொருளாதார வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு கட்டத்தினைக் குறித்து நின்றது. மகாசேனன் மன்னனால் அமைக்கப்பட்ட மின்னேரியாவை விட பெரியதொரு நீர்ப்பாசனக்குளம் ஒன்று தாதுசேனனால் அமைக்கப்பட்டிருந்தது. அத்தவகையில் கலாஓயாயை மறித்து அணைக்கட்டி பெரியதொரு நீர்ப்பாசன குளமான கலாவாவி அமைக்கப்பட்டது.கலாஓயாவை மறித்து அணைகட்டியதால் இக்குளம் கட்டப்பட்டுள்ளது. இவர் தனது இரண்டு கைகளால் இக்குளத்தின் நீரை அள்ளி எறிந்து இதுவே நான் சேர்த்தது வைத்திருக்கும் சொத்து எனக் கூறினார்.

 இதன் விஸ்தீரணம் 6380 ஏக்கராகும். அத்தோடு இவனால் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் 18 குளங்களின் பெயர்கள் சூளவம்ச முதலாம் பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பாடுலகா, ஹம்பத்தி, மகாதித்த ஆகிய குளங்கள் குறிப்பிடத்தக்கதாகும. பாதுக வாவியும் மாதத்த வாவியும் இன்னும் பல குளங்கள் தொடர்பாகவும் வரலாற்று மூலாதாரங்களில் கூறப்பட்டுள்ளது. மாதத்த வாவி என்பது இன்று தம்புள்ள – கெககிராவ பாதையின் அருகே அமைந்துள்ள மாத்துகம (மடாட்டுகம) வாவி எனக் கருதப்படுகிறது. பாதுலக வாவி அன்னும் அடையானம் காணப்படவில்லை. அத்துடன் கட்டுக்கரைகுளம் எனும் குளத்தினையும் அமைத்தான். பலலு வாவியினை இணைத்து கலா – பலலு நீர்த்தேக்கத்தை அமைத்ததாக பூஐவலிய கூறுகிறது.

 கலாவாவியையும் திஸ்ஸவாவியையும் இணைத்து ஜயகங்கை ( யோதஅல, மகாகங்கை) என்ற 54 மைல்  நீளமான 40 அடி வரை அகலமான கால்வாயை இம்மன்னன் அமைத்தான். அந்தவகையில் ஜயகங்கை கால்வாய் மூலம் கலாவாவி நீரை அனுராதபுரத்தில் அமைந்த குளங்களுக்கு வழங்கியமை.சில குளங்களை இணைத்து பாரிய குளங்களைக் உருவாக்கியமை என்பன இவன் கால நீர்ப்பாசன வளர்ச்சியாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் இவ்வாறான நீர்ப்பாசனவியல் நிறுவனங்களைக் அமைத்துக்கொடுத்த மன்னனாக இரண்டாம் மகெல்லன் என்பவன் ஆவான். இவனால் அமைக்கப்பட்ட பெருங்குளங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது நாச்சடுவக்குளம் (பத்பஹன் குளம்) ஆகும். அத்துடன் பதவியாக்குளம் இவனால் அமைக்கப்பட்டது. இதே நூற்றாண்டில் இன்னொரு மன்னனான முதலாம் அக்கபோதி என்பவன் கட்டிய குளங்களுள் குருந்துவாவி (தண்ணிமுறிப்புக்குளம்) குறிப்பிடத்தக்கதொன்றாக விளங்குகின்றது. அத்துடன் சிறிவட்டமானக வாவி என்ற குளமும் இவனால் அமைக்கப்பட்டது. அத்துடன் நீர்ப்பாசன அமைப்பின் சிறந்த நிர்மாணமான மகாவலிகங்கைக்கு குறுக்கே அமைக்கப்பட்ட மினிப்பே அணை கால்வாய் சிறப்பு வாய்ந்த தொழினுட்பமாகும். இக்கால்வாய் ஊடாக மேட்டு நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்பட்டது.

கி.பி 7ஆம் நூற்றாண்டில் 2ஆம் அக்கபோதி மன்னனால் கிரித்தலே வாவி, கந்தளாய் வாவி என்பன அமைக்கப்பட்டது. அவனால் அமைக்கப்பட்ட பெருங்குளங்களுள் சிறப்பு பெறுவது கங்காதடல வாவி ஆகும். இவ்வாபி இன்று கந்தளாய் என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றது. கந்தளாய் குளத்தின் தோற்றம், வரலாறு, அதன் சிறப்புக்கள் பற்றி தட்க்ஷண கைலாச மானியத்திலும் பல சுவையான செய்திகள் இடம்பெற்றுள்ளன. கண் + தளை என்ற இரு பதங்களின் இணைப்பே கண்தளை என்றாகி இன்று கந்தளாய் என வழங்குவதாக தட்க்ஷண  கைலாச மானியத்தை ஆதாரம் காட்டி குறிப்பிடுவர்.

பாய்ந்தோடும் ஓடையை அல்லது நதியை மறித்து அணைக்கட்டொன்றைக் கட்டுவதன் மூலம் குளம் உருவாக்கப்பட்டது. குளத்திற்கான நேரடி நீரேந்து பிரதேசம் தவிர்ந்த வெளிவாரியான பகுதிகளிலிருந்தும் நீரைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. குளம் அமைந்துள்ள பகுதிக்கு சமீபமாக அமைந்திருந்த ஓடை அல்லது நதியின் மூலமும் குளத்துக்கான நீர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.    

 உதாரணம் -:

  • மாகல்ல வாவி – தெதுறு ஓயாவின் ரிதிபெந்தி கால்வாய் மூலம் நீரைப் பெற்றுக்கொண்டது.
  • தப்போ வாவி – மீஓயாவின் மூலம் நீரைப் பெற்றுக்கொண்டது.


      இத்தகைய ஏராளமான குளங்களைக் அனுராதபுர மன்னர்களால் கட்டப்பட்டிருப்பதானது இலங்கையின் நீர்ப்பாசன வளர்ச்சியின் உன்னத நிலையினை அனுராதபுர இராசதானிக்காலம் பெற்றிருப்பதனைக் காணலாம். அத்துடன் இலங்கையில் கட்டப்பட்ட குளங்களில் சில யாரால் கட்டப்பட்டன என்று அறியப்படவில்லை. இவ்வாறான குளங்களாக தப்போ வாவி (புத்தளம்) வாகல்கடவாவி , பாவற்குளம் (வவுனியா),வவுனிக்குளம், ஒறிவில வாவி என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை சிதைவுற்ற நிலையில் இருப்பதுடன் எக்காலத்தில் கட்டப்பட்டது என்பது தொடர்பான தகவலும் கிடைக்கவில்லை. அனுராதபுரத்திற்கு பல மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு சிறப்பான பங்களிப்பினை வழங்கிய போதும் வசபன், மகாசேனன், தாதுசேனன், 2ஆம் முகலன், 1ஆம்,2ஆம் அக்கபோதி முதலானோரே முக்கிய இடம் பெறுகின்றனர். மேலும் இவ்வரசர்கள் இட்டுக் கொடுத்த வழியானது எதிர்காலத்தில் நிலைபெற்ற பொலனறுவை மற்றும் ஏனைய இராசதானிகளில் நீர்ப்பாசனம் விருத்தியடைய உதவிற்று எனலாம்.

மகாசேனனின் நீர்ப்பாசன பணி

 

இலங்கையின் நீர்ப்பாசன பணிக்கு பெரும் சேவையாற்றிய மன்னனாக வரலாற்றில் அதிகம் பேசப்படுபவனாக மகாசேனன்  குறிப்பிடப்படுகிறான். அந்தவகையில் மகாவம்சத்தின் 37ஆவது ( XXXVII) இறுதி அத்தியாயத்தில் 4 செய்யுள்களில் (அத்தியாயம் 37, செய்யுள் 47-50)   மன்னன் மகாசேனன் வரலாறு தரப்பட்டுள்ளது. மகாசேனனின் தந்தை  கோத்தபாயன். ஐெட்டதீசன் இறந்ததன் பின்னர் அவனது இளைய சகோதரனான மகாசேனன் மன்னனானான். கி.பி 273-302 வரை அவனது ஆட்சி 27 வருடங்கள் நீடித்தது. இவன் சகல கலைகளிலும் வல்லவனான மகாயானிஸ ஆசிரியன் சங்கமித்தன் கீழ் கல்விகற்று அவன் மதக்கொள்கையையும் ஆதரித்தான். மகாசேனன் பௌத்த மத வரலாற்றில் வைதீக திருச்சபையுடன் மோதி அபகீர்த்தியைப் பெற்றுக் கொண்டாலும் இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் முன் எம் மன்னராலும் செய்யாத சேவையை செய்து பெரும் புகழை ஈட்டிக் கொண்டான். மகாசேனன் மன்னனால் ஆயிரம் குளங்கள் கட்டப்பட்டதாக மகாவம்சத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம குள அமைப்பில் இருந்து பெரியநீர்த்தேக்கங்களும் நீர்ப்பாசனததிட்டங்களும் அமைக்க முதல் முயற்சி கி.பி 1ஆம் நூற்றாண்டில் வசபனால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இம்முயற்சி இடைக்காலத்தில் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படாததால் அழிந்து போக கி.பி3ஆம் நூற்றாண்டில் இன்றைய தொழில்நிபுணரும் பார்த்து பிரமிக்கத்தக்க அளவு பாரிய நீர்ப்பாசனத்திட்டமொன்று மகாசேனனால் உருவாக்கப்பட்டது.

கி.பி முதலாம் நூற்றாண்டில் அடையப்பெற்றிருந்த நீர்ப்பாசன பொறிமுறையறிவினை விட கி.பி 1ஆம் நூற்றாண்டில் மிகவும் உயர்ந்ததும் மிகப்பரந்த பரப்பளவில் அமைக்கப்பட்ட நீரியல் நுட்பங்களும் கையாளப்பட்டிருந்தன. வட இலங்கையின் பல பாகங்களில் இத்தகைய பரப்பளவில் கூடிய நீர்ப்பாசன பொறியமைப்பு கையாளப்பட்டிருந்தன. இத்தகைய விசாலமான நீர்ப்பாசன பொறியமைப்பின் வலைப்பின்னலை முதன்முறையாக மகாசேன மன்னனே உருவாக்கினான். அவன் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக 16 பெருங்குளங்களையும் ஒரு பெருங்கால்வாயையும் அமைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மினிஹிர (மின்னேரியா), ஜலூறா, காணு, மகாமணி, கோகவத்தை, தர்மராமா, கும்பலா, வாகனா, இரத்மலந்தை, திசவட்டகமன, வேலன்கவித்தி, மகாகலைசீரா, மகாதரகலை, காலபாசனம், மொறக்கா ஆகிய பதினாறு நீர்ப்பாசனக்குளங்ளைக் கட்டுவித்தான். மணிகிரவாவி எனப்படும் மின்னேரியாக்குளம் 4670 ஏக்கர் விஸ்தீரணத்துடன் இம்மன்னனால் அமைக்கப்பட்டது. இப்பரந்த வாவியிலிருந்து 4000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கப்படுகின்றது.கௌடுலு வாவியும் மகாசேனனால் அமைக்கப்பட்டது.

மகாகங்கையிலிருந்து 20 மைல் நீளமான பப்பதந்த என்ற பெரும் கால்வாயையும் கட்டுவித்தான். பதவியாவையும் இவனே கட்டுவித்தான் என அவ்விடத்தில் வழங்கும் வரன் முறை கூறும். அதை அவன் பெருப்பித்திருக்கலாம். ஆளிஸார-எலகரக்கால்வாய் 25 1/2 மைல் நீளத்திற்கு இம்மன்னனால் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இத்தகைய வாவியை பயன்படுத்தி தான் பிற்காலத்தில் மகாசேனன் மின்னேரியா குளத்ததை அமைத்தாக மகாவம்சம் கூறுகிறது. பாரிய குளங்களாக அனுராதபுரத்தின் நீர்ப்பாசனம் மாறுவதற்கு காரணமாக இருந்தவர் மகாசேனன்.

மகாசேனன் மன்னன் மின்னேரியா குளத்திற்கு நீரைப்பெற்றுக் கொள்வதற்கான திலவத்துக அல்லது தல்வத்து  எனும் கால்வாயை அமைத்தான். கவுடுலு வாவியானது  மேலும் நீர்வழங்கலின் பொருட்டு சிறு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டது. இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள எலகர-மின்னேரியா- கவுடுலு திட்டமானது இலங்கை வரலாற்றில் ஒரு பெருந்திருப்பத்தை ஏற்படுத்திய திட்டமாகும். அத்துடன் மல்வத்து ஓயா, யான் ஓயா, மகாவலிகங்கை ஆறுகளுடன் சேர்ந்த திட்டங்களும் ஒன்று சேர்ந்து ராஐரட்டையின் விளைவைப் பெருக்கி பொருளாதாரம் மேம்படக் காரணமாகியது. இலங்கை வரலாற்றில் இத்தனை தொகையான குளங்களைக் வெட்டி உருப்படியான சிறந்த நீர்ப்பாசன திட்டங்களைக் அமைத்து மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த மன்னனாக மகாசேனன் காணப்படுகிறான்.

இம்மன்னனால் ஆக்கப்பட்ட இவ்விரும்பணிகளால் மக்கள் அவனை “மின்னேரியா தெய்வம்” என்றும் “ஹஜ்ரஜ் ஜீரு பண்டார” என்றும் இன்று வரை போற்றி மதித்து வணங்கி வருவதனை காணலாம். அத்துடன் மகாசேனன் ஆஸ்திகனாகவும் நாஸ்திகனாகவும் விளங்கினான் என மகாவம்சம் புலம்பும். மகாசேனன் தனது நீர்ப்பாசன வேலைகளால் நாட்டிலே தன் புகழை நிறுவினான். எனினும் காலவேட்டின் ஆசிரியர் அவனுக்குரிய இடத்தை வழங்கவில்லை. புத்தர் பிரான் நிருவாணமடைந்து 844 ஆண்டுகள் கழித்து இவன் மரணமடைந்தான். இவனின் மரணத்தோடு மகாவம்ச காலவேடு முடிகிறது. இவ்வகையில் இலங்கையின் நீர்ப்பாசனவியல் பொறிமுறை வரலாற்றில் கி.பி 3ஆம் நூற்றாண்டு ஒரு மைல்கல் ஆக விளங்குகின்றது.

முந்திய அனுராதபுர கால மன்னர்களுள் நீர்ப்பாசன பணிகளையாற்றியவர்களுள் இவனுக்கு இணையானோர் எவருமில்லை. பிராந்திய அனுராதபுர கால மன்னர்களும் இவனது சாதனைகளை வீழ்த்த முடியவில்லை.

நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட வெற்றி கலாச்சார துறையிலும் கட்டடக்கலையிலும் தொழினுட்பமேன்மையில் ஒரு மறுமலர்ச்சி தோன்றுவதற்கு வழிவகுத்தது. எனவே இப்பின்னணியில் நீர்ப்பாசனத்தினை சமூக பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சிக்கான ஒர சக்தியாக நோக்கலாம். புராதன நீர்ப்பாசனம் மற்றும் அதன் சமூகவியல் தாக்கம் என்பனவற்றை முறையாக ஆராயாது இந்நாட்டு மக்களின் பண்பாடு குறித்தோ அல்லது சமூக வரலாறு குறித்தோ சரியான புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வது அனேகமாக சாத்தியமில்லை. அதே நேரத்தில் காலத்தால் அழியாதிருந்த பல நீர்ப்பாசனக் கட்டமைப்புகளின் திடீர் அழிவுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தைச் சேர்ந்த நடவடிக்கை அடிப்படையாக இருந்து என்பது மிகவும் துக்ககரமான விடயமாகும்.

  எனினும் புராதன இலங்கையின் தலைச்சிறந்த நீர்ப்பாசன முறையை உலகத்தின் எந்தவொரு புராதன நாகரிகத்துடனும் ஒப்பிட முடியாத வகையில் நீரைச்சேகரித்தல், குளங்களை அமைத்தல், அணைகளை கட்டுதல், ஆற்றினை திசைதிருப்புதல் போன்ற தொடர்பாக எம்மூதாதையரின் அறிவு தன்னிகரற்றதாகும். இன்று நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக தொல்லியல் திணைக்களமும் இலங்கைத்தீவெங்கும் காணப்படுகின்ற பண்டைய நீர்ப்பாசனத்துடன் தொடர்புடைய சகல அம்சங்களையும் பாதுகாக்கும் பொறுப்பினை மேற்கொள்கின்றது. தற்போது 34,000ற்கும் மேற்பட்ட பாரிய நீர்த்தேக்கங்களும் பெருந்தொகையான பெருந்தொகையான கிராமிய குளங்களும் அவற்றோடு இணைந்த கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், மதகுகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட எமது பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புக்களை இலங்கை தொல்லியல் திணைக்களம் இன்று எமது பாரம்பரிய மூதாதையினர் எமக்காகச் விட்டுச்சென்ற மரபுரிமைச் சின்னங்களை அடையாளப்படுத்தி நிகழ்கால எதிர்கால சந்ததியினரிடமும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறது.    

       
எ.கே.சஞ்சுதா









3 comments:

  1. அனுராதபுர இராச்சியம் (Anuradhapura Kingdom) அல்லது அனுராதபுர இராசதானி என்பது பண்டைய இலங்கையின் இரண்டாவது இராச்சியம் ஆகும். கி.மு. 377 ஆம் ஆண்டில் பண்டுகாபய மன்னானால் இவ்விராச்சியம் நிறுவப்பட்டது. இது இலங்கையில் அதிக காலம் ஆட்சியில் இருந்த இராசதானி ஆகும். அவனே அனுராதபுரத்தைத் தலைநகரமாக மாற்றினான். அனுராதபுரத்தின் ஆட்சியாளர்கள்

    ReplyDelete

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...