Thursday 9 July 2020

வன்னியின் மாதரசி ஆனைகட்டிய அரியாத்தை





வன்னி மண்ணின் வரலாறு இங்கு கோலாச்சிய பண்டாரவன்னியனின் வீர வாலாற்றின் மூலம் உலகத்திற்கு தெரியவந்தது. இந்த மண்ணுக்கும் சொந்தமான பெண்கள் உலகத்தின் ஏனைய சரித்திர நாயகிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களல்லர் என்பதை “ஆனைகட்டிய அரியாத்தை” என்ற வன்னிய வீரப்பெண்மணி உணர்த்திருக்கிறாள்.

இந்தவகையில் பலவீர தீர, கலாசார விழுமியங்கள் மிகுந்த எண்ணற்ற வரலாறுகளை உள்ளடக்கிய வன்னி மண்ணின் சரித்திரத்தை ஆராய்வதில் மூன்றாவது பகுதியாகவே ஆனை கட்டிய அரியாத்தை எனும் தலைப்பிலான எனது கட்டுரை அமைகின்றது.

ஈழத்தமிழரின் முதல் வீராங்கனை என வர்ணிக்கப்படும் ஆனை கட்டிய அரியாத்தையின் வரலாற்றை பல்முனை ஆய்வுகளின் மூலம் சிறந்ததொரு வரலாற்றுப் பதிவாக நூலாசிரியர்  மெற்றாஸ்மயில் வெளிக்கொணர்ந்துள்ளார்.

“வேலப்பணிக்கர் ஒப்பாரி” எனும் நாட்டார் வழக்கியலை ஆதாரமாகக் கொண்டு வெளிவந்துள்ள ஆனையை அடக்கிய அரியாத்தையின் வரலாறு வன்னியப்பகுதியில் “அரியான் பொய்கை”, “வேழம்படுத்த வீராங்கனை” எனும் பெயர்களில் பிரபல்யம் மிக்க நாட்டுக் கூத்தாக திகழ்ந்து வருகின்றது.

கற்பரசி கண்ணகியை வழிபடும் வன்னித் தமிழ்பெண்களும் கற்பரசிகளே என்பதை ஆனை கட்டிய அரியாத்தை வெளிப்படுத்திகின்றாள்.

“வேலப்பணிக்கர் ஒப்பாரி” எனும் நாட்டார் இலக்கியத்தின் தலைவிதான் அரியாத்தை எவருமே பிடிக்கமுடியாத யானையை அடக்கிப் பிடித்துக் கொண்டு வந்த ஒரு பெண் அவள். அத்தகைய பெண்ணுடைய வரலாறு இன்று எண்ணப்படவேண்டியது. அந்தவகையில் ஈழத்தின் முதல் தமிழ் வீர மகள் அரியாத்தை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்தவகையில் ஆனைகட்டிய அரியாத்தையின் வரலாற்றினை நோக்குவோம்.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பிரிவாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுழமுனை என்ற இடத்தை இராசதானியாகக் கொண்ட பண்டாரவன்னியனின் மூதாதையார்களில் ஒருவரான சின்னவன்னியன் அட்சி புரிந்த காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கதை இது. நாட்டுமக்கள் எந்த குறையும் இன்றி சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். திடீரென ஆண்டான் குளத்தை அடுத்துள்ள கண்டல் காட்டில் புயல்போல புகுந்தது ஒரு யானை. அது பதினாறு அடி உயரமுள்ளது. மலையைப்போன்றது அதன் அமைப்பு. அந்த யானை மதங் கொண்டு அக்கிராம மக்களை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது.

அந்த யானையின் வெறித்தனத்தால் வயல்கள் எல்லாம் நாசமாகின. தென்னை, பலா போன்ற கனி மரங்கள் சின்னாப்பின்னமாகின. குவித்த நெற்போரை எல்லாம் யானை தின்று தள்ளி கொட்டில்கள் குடிசைகளை எல்லாம் பிடுங்கி எறிந்தது. அதனிடம் அகப்பட்டு மாண்ட குடிமக்களின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காது. யானையின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னன் சின்னவன்னியனிடம் முறையிட்டனர். மன்னன் மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த யானையை பிடிப்பதாகவும் உறுதியளித்தான். உடனே அவன் ஏழு ஊர்ப்பணிக்கர்களுக்கும் ஓலை எழுதி வரவழைத்தான். ஆனால் பணிக்கர்காரர்களாகிய ஆனை மறிகாரர்கள் யாவரும் ஆலோசி;த்து அந்த யானையை ஏழுமுழ யானை, கோபமுள்ள யானை, மழை முகிழ் போல் பிளிறிக்கொண்ட நிற்கின்றது. அந்த யானையை அடக்கவென்று சென்று இறந்தவர்கள் பலர். யானையைக் கண்டு மட்டும் பயந்து வந்தவர்கள் பலர். அந்த யானையை மட்டும் எங்களால் பிடிக்க முடியாது. எம்மை மன்னிக்க வேண்டும் என்று கூறினர்.

சின்னவன்னியனும் மக்களுக்கு யானையை பிடிப்பதாகக்  வாக்கு கொடுத்துவிட்டேன். கட்டாயம் பிடித்தாக வேண்டும். உங்களில் யார் வீரன் என்று சொல்லுங்கள.; அவன் மட்டும் சென்று யானையைப் பிடிக்கட்டும் என்றான் சின்னவன்னியன்.

அந்த யானையை பிடிக்கும் அற்றல் உடையவன் இந்த வேலப்பணிக்கன்தான். எங்கள் எவராலும் முடியாது என்றனர் என்று ஒரு பாகன் சொல்லி முடிக்கும் முன் அங்கிருந்த நீலப்பணிக்கன் எனும் அரியாத்தையின் மைத்துனன் என்பவன் ம்…. வேலப்பணிக்கனா? இவனா இந்த யானையைப் பிடிக்கப்N;பாகின்றான். இவன் வெறும் கோழை. இவன் மனைவி அரியாத்தை தான் அந்த யானையைப் பிடிப்பாள் என்று இடைமறித்தான்.

நீலப்பணிக்கன் என்பவன் அரியாத்தையை திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு இருந்தவன். ஆனால் அரியாத்தையின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் வெட்கமடைந்தவன் எந்த வழியிலாவது வேலப்பணிக்கனைப் பழிவாங்க வேண்டும் எனக் காத்திருந்தான். இப்போது எல்லோர் முன்னிலையிலும் அவனை அவமானப்படுத்தினான். இதைக்கேட்ட வேலப்பணிக்கர் விரைவாக வீட்டுக்கு வந்து கவலையோடு இருந்தான். அரியாத்தை காரணங்கேட்க அரச சபையில் நடந்ததைக் கூறினார். அரியாத்தை ஏனக்கு வந்த அவமானத்தை நீக்க நான் சென்று அந்த மதயானையை அடக்கி கட்டிவருவதாக கூறிப் புறப்பட்ட அனுமதி தரும்படி வேண்டினாள். வேலப்பணிக்கரும் வேறு வழி தெரியாமல்;  சகுனங்கள் சரியில்லை என்றும் மறுநாள் காலையில் செல்லும்படியும் கூறினர். அவளும் அதற்குச் சம்மதித்து மறுநாள் காலையில் எழுந்து வீரபத்திரரை தஞ்சம் என நினைத்து வேலப்பணிக்கர் கொடுத்து வழியனுப்பிய மான்வார்க்கயிற்றையும் கைதடியையும் எடுத்துக்கொண்டு அந்த யானை நிற்பதாகக் கூறப்பட்ட இடத்தை நோக்கிக் கயிற்றுடன் சென்றாள்.

வழியில் நாகபாம்பு ஒன்று சீறிப் படமெடுத்து வழிமறித்தது. நடுநடுங்கிய அவள் நாகதம்பிரானை நினைத்து வழிபட்டு “பணிக்கர்மார் எல்லோரும் ஆனைகட்டப் பயந்து விட்டனர். பெண்ணாகிய நான் அந்த ஆனையைக் கட்டப் புறப்பட்டிருக்கிறேன். நான் ஒரு பத்தினியாக இருந்தால் எனக்கு அருள் செய்யவேண்டும்” என்று சொல்ல நாகபாம்பு புற்றுக்குள் சென்றுவிட்டது.

காட்டில் அலைந்து திரிந்து அந்த மத யானையைக் கயிறு போட்டுப் பிடித்த அரியாத்தை அந்த யானை மீதே ஏறி அரண்மனையை நோக்கி வந்தாள். யானை போட்ட பிளிறல் சத்தம் அரண்மணை வரை கேட்கிறது. அரியாத்தையை வரவேற்பதற்காக அரண்மனை விழாக்கோலம் பூண்டது. பட்டத்து அரசியோ அந்த யானையை தனது பட்டத்து யானையாக்கும் ஆவலோடு காத்திருந்தாள். அரியாத்தை மன்னன் மன்னன் தலை வணங்கி விட்டு அரண்மனைக்கு அருகிலுள்ள அந்த யானையை ஒரு அத்தி மரத்தில் கட்டி வைத்தாள். அதன் பின் சின்னவன்னியனாரின் அழைப்பின்பேரில் சென்று மரியாதை வரிசைகள் எல்லாம் பெற்றாள். மன்னன் அவளை அழைத்து இன்றிலிருந்து நீ “வேழம் படுத்த வீராங்களை” என்று அழைக்கப்படுவாய் என்று புகழாரம் சூட்டினான். அரசியோ அவளது வீரத்தை பாராட்டி விலை மதிப்பற்ற பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தாள்.

ஆனால் நீலப்பணிக்கனோ..? அவனது வஞ்சக மூளை வேறுவிதத்தில் வேலை செய்தது. எங்களால் முடியாததை இவள் செய்வதா? இதன் மூலம் வேலனைக் கொள்ளலாம் என்றால் இவள் அதைக் கெடுத்து விட்டாளே. இவளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கருவியவன் அரியாத்தையைக் கொல்லும் சதியோடு தன் மனைவியிடம் சென்றாள். தனது மனைவியிடம் நஞ்சுப் பொடியைக் கொடுத்து அதை எப்படியாவது வெற்றியோடு திரும்பி வரும் அரியாத்தை உடையில் பூசும்படி சொன்னான்.

விருந்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அரியாத்தையை நீலப்பணிக்கனின் மனைவியான நீலகேசரி இடைமறித்து பாராட்டு வழங்குவதுபோல் அரியாத்தையின் ஆடையைத் தொட்டு தனது வேலையை சரியாகச் செய்து முடித்தாள். ஏதும் அறியாத அரியாத்தையோ நீலகேசரியிடம் விடைபெற்று வீடு நோக்கிச் சென்றாள். அரியாத்தையின் தலையோ சுற்றுகிறது . அப்போது அரண்மனையில் இருந்த தன் கணவன் சகுனங்கள் சரியில்லாததால் மன்னனிடம் விடைபெற்று வீடு சென்றான். அங்கே அரியாத்தை துடிதுடித்துக் கொண்டு புலம்பினாள். “அந்த யானையை அவிழ்க்குமாறும் யானை அப்படியே நின்று இறந்து விட்டால் பெரும் பழி வந்துவிடும் என்றும் என்னைப்போல் கற்புடையாள் ஒருத்தியால்தான் அந்த யானையைக் கட்டவிழ்த்துவிட முடியும். ஏழு சுருள் வெற்றிலையும் எடுத்துச் சென்று கும்பிட்டு தெண்டனிட்டு அந்தக் கொம்பன் யானை முன் நின்றால் கட்ட அவிழ்க்க காலைக் கொடுக்கும். கட்டை அவிழ்த்தாலும் அது தண்ணீர் குடியாது” என்று பலவாறாகச் சொல்லிப் புலம்பினாள். வேலப்பணிக்கரின் வலது தொடையிலே சாய்ந்து படுத்துக் கொள்கிறாள். அவளது உயிர் பிரிகிறது. அவளுக்கு என்ன நடந்தது என்று அறியாமல் வேலப்பணிக்கர் அழுது புலம்பி யார் தன் மனைவியின் இறப்புக்குக் காரணம் என்று அறியாதவராய்த் துடிதுடித்து அவளுடனே உடன்கட்டை ஏறி உயிர்துறக்கிறார். இதுவே வேலப்பணிக்கன் ஒப்பாரி கூறும் அரியாத்தையின் வரலாறு.

குமாரபுரத்திலுள்ள (முல்லை மாவட்டம்) குமுழமுனைக் கிராமத்தில் மதயானையைக் வென்ற மாதரசி வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தையின் வீரவரலாறு ஒப்பாரியாகப் பாடப்பட்டுள்ளது. பெரிய வெளியிலமைந்துள்ள கண்டல் என்னும் இடத்தில் மதயானையைக் கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால்; அந்த இடம் இன்றும் “கொம்பன் படுத்த கண்டல்” என அழைக்கப்படுகிறது. என்கிறார் குமுழ மருதன். இப்பிரதேசம் கரிக்கட்டுமூலை எனத் தற்போதைய உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஒரு பகுதியாகப் பெயர் பெற்று விளங்குகின்றது. அந்த யானையை எவரும் அவிழ்த்துவிடாததால் அது அந்த இடத்திலேயே இறந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

அடங்காப்பற்றெனப் புகழ்சூடி யாருக்கும் அடங்காத வன்னியர்களினாலே ஆட்சி செய்யப்பட்ட வன்னி மண்ணிலே வளர்ந்து வன்னி மண்ணின் பெருமைக்கே தன் வாழ்வை அர்ப்பணித்த அரிவை நல்லாள் அரியாத்தை குமுழமுனை, அளம்பில், செம்மலை ஆகிய இடங்களின் இடையிலே அமைந்துள்ளதாகிய “அதிரியங்கோட்டில்” தன் கணவனுடன் வாழ்ந்ததாக வேழம் படுத்த வீராங்கனை என்ற நாட்டுக் கூத்தை எழுதிய அரியான் பொய்கை கை. செல்லத்துரை அவர்கள் தன் முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார்.

வேலப்பணிக்கன் ஒப்பாரி ஒல்லாந்தர் காலத்திலே 17ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. ஈழவரலாற்றிலே எத்தனையோ சாதனை படைத்த விPரர் வரலாறு உண்டு. ஆனால் வேலப்பணிக்கன் ஒப்பாரி இலக்கியம் காட்டும் வீராங்கனைப்போல் வரலாற்றில் இல்லை.

அரியாத்தையின் கதை முல்லைத்தீவு பகுதி மக்களின் செவிவழிக் கதை மரபில் இது எந்த வடிவில் வழங்கப்படுகிறதென்பது எனக்கு தெரியவில்லை. ஒரு பெண் ஆனையை அடக்கியது உண்மைக் கதையாக கொள்ளலாமா? எனும் வினா எம்மவர் மத்தியில் எழலாம். வேலன்பணிக்கர் ஓப்பாரியில் வரும் கதையை பலர் கற்பனை கதையாக எண்ணுகிறார்கள். யானைக்கு கிட்ட ஒரு பெண் போகமுடியுமா? என்று எண்ணுகிறார்கள்.

ஆனையை மடக்கிப் பிடிப்பதற்கு ஓர் ஆண் ஆனைப்பாகனால் முடியுமானால் ஆனையை ஒரு பெண் கட்டினாள் என்பதை ஏன் நம்பமுடியாது. ஆனையைக் கட்டுவதற்கு சில ஆனைப்பிடிப்பவர்கள் மந்திரதந்திர உபாயங்களைக் கைக்கொண்டிருந்தனர் என்பதை நாம் கண்கூடாக அறிகின்றோம். அப்படியானால் ஆனையுடன் போரிடக்கூடிய தைரியம் இல்லாவிட்டாலும் தெய்வபலமுள்ள கற்புடைய ஒருத்தி தனது மனோபலத்தினால் ஆனையைக் கட்டினான் என்ற கதையை ஏன் உண்மைக் கதையாக நம்பமுடியாது.
அரியாத்தை தனது கற்பின் மகிமையால் யானையைக் கட்டினாள் என்று சிலர் வாதிடுகின்றனர். அக்கூற்று மறுக்கப்பட வேண்டியது. அவள் யானையைக் கட்டுவதற்கு கற்பும் ஒரு பங்களிப்பைச் செய்ததே தவிர அதுமட்டும் அவள் வீராங்கனையாவதற்குரிய தொன்றல்ல.

ஒருவராலும் பிடிக்க முடியாத மத யானை ஒன்றை எப்படி அரியாத்தை அடக்கினாள் என்பதில் எல்லோருக்கும் குழப்பமிருந்தாலும் யானையை அரியாத்தை பிடித்தாள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றார்கள்.

எனவே இந்த ஒப்பாரிப்பாடலில் வரும் “ஆனை கட்டிய அரியாத்தை” ஈழத்தில் முதலாவது வீரப்பெண் என்பதையும் இவ்வாறான வரலாற்றுச் சான்றுகளை உடைய மரபவழி இலக்கியங்களை ஆராய்ந்து எமது பழம் பெருமைகளைப் புதியவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதையும் எம்மவர் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அரியாத்தையின் மரணம் எவ்வாறு நடந்தது என்பதற்கும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நான் கட்டுரையில் மேற்குறிப்பிட்டபடி நீலப்பணிக்கனின் சதிதான் காரணம் என்று “வேழம் படுத்த வீராங்கனை” என்ற நாட்டுக் கூத்து நூல் கூறுகின்றது. குறிப்பாக ஒருவர் அரியாத்தையைப் பற்றிக் கூறும்போது யானையைப் பிடித்து வந்து பரிசு பெற்ற அரியாத்தை தனது கணவனுக்குக் கிடைக்கவேண்டிய பரிசும் பெயரும் புகழும் தனக்கு கிடைத்து விட்டதே. அதனால் தனது கணவனுக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி தானாகவே வெற்றிலையில் “நஞ்சை” வைத்துச் சாப்பிட்டு இறந்ததாகக் கூறுகின்றார்.

மேலும் அரியாத்தை அம்மையாரின் வழித்தொன்றல்கள் நாமென்று பெருமை பாராட்டும் வம்சாவழியினர் இன்றும் செம்மலை என்னும் கிராமத்தில் உள்ளனர். அவர்களிடத்திலே அரியாத்தை அம்மையாரின் அடையாளச்சின்னங்கள் சில உள்ளன. அவையாவன கந்தையான நிலையில் உள்ள பட்டுச்சேலை, மைனாப்பூ என்று சொல்லப்படும் எறி ஈட்டி , அரையினிடமாகக் கட்டுகின்ற மூலிகை வளையங்களோடு கூடிய அரைப்பட்டியொன்று, கொம்போடு கூடிய வார்க்கயிறு ஒன்று, அவர் கொண்டு சென்ற மந்திரக்கோல் ஒன்று என்பன இன்னும் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இன்னும் பல பொருட்கள் சிதைந்துவிட்டன என்றும், அவற்றுள் சில இப்பொழுதும் குமுழமுனைக்கு வடக்கே அமைந்துள்ள “ஆண்டான் குளத்தில்” நடைபெறும் ஐயனாருடைய மடைக்குக் கொண்டு செல்லப்பட்டு அம்மடையில் வைத்து வழிபட்டு வருவதும் வழக்கத்தில் உள்ளது.

கணவனோடு உடன்கட்டை ஏறிய கற்பரசிகளைத்தான் சரித்திரத்திலும் காவியங்களிலும், புராண, இதிகாசங்களிலும், சிற்றிலக்கியங்கள், பிரபந்தங்களிலும் படித்திருக்கின்றோம். ஆனால் தனது மனைவியில் இறந்த உடலை எறிகின்ற சிதையில் பாய்ந்து உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்துக் கொண்ட ஒர் கணவனை எந்தச் சரித்திரமும் சொல்லவில்லை. எந்தக் காவியமும், எந்தப் புராண இதிகாசங்களிலும், சிற்றிலக்கியங்களிலும், பிரபந்தங்களிலும் சொல்லவில்லை. செவிவழிக்கதையாவும் கேட்கவில்லை.

எமது இளைய தலைமுறையினர் பலபேருக்கு அரியாத்தை எனும் ஒரு பெண் இருந்தார். அவர் இப்படி ஒரு செயலைப் புரிந்தாhர் என்பதே தெரியவில்லை. ஆனாலும் அரியாத்தையின் வரலாறு வரையறுத்துக் கூறக் கூடியதாக இல்லாவிட்டாலும் பண்டாரவன்னியனுக்கு முன் ஆட்சி புரிந்த அவன் முன்னோர்களில் ஒருவனான சின்னவன்னியன் காலம் என்பது வரலாறு ஒப்புக்கொண்ட உண்மையாகும். அவன் காலம் இன்றைக்கு 300 ஆண்டகளாகுமெனக் கருதுவதால் இவள் காலமும் 17ஆம் நூற்றாண்டு எனக் கூறலாம்.

எமது தமிழினம் அந்தக் காலத்தில் இருந்தே வீரமரபுடைய இனமாக, வீரசாதனை புரிகின்ற இனமாகத்தான் இருந்துவருகிறது. ஆனால் அவர்களைப் பற்றிக் கூறும் வீரகாவியங்கள் மிகமிகக் குறைவு. அவர்கள் வீரசெயல்கள் புரிந்த இடங்கள் வரலாற்றுச் சின்னங்களாகப் போற்றி பாதுகாக்கப்படவில்லை. அரியாத்தை யானை கட்டியதாகச் சொல்லப்படும் அத்திமரம் இருந்த இடம் எதுவென்று ஒருவருக்குமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒர் நினைவுச்சின்னம் கூட இல்லை. மாறாக அழிந்து, காடுகள் வளர்ந்து போய், பற்றைகளும் முட்களுமாக இருக்கின்றது.

அழிந்தபோன எமது வீரவலாறுகள் எல்லாவற்றுக்கும் புத்துயிர் கொடுத்து உலவவிட வேண்டிய பெரும் பொறுப்பு ஒன்று எமக்கு இருக்கின்றது. காலவெள்ளத்தால் அள்ளுண்டு போயுள்ள வீரவரலாறுகளைத் தேடி எடுத்து எமது அடுத்த தலைமுறையினரிடம் சமர்ப்பிக்கவேண்டிய பாரிய கடமை எமக்கு எல்லோருக்கும் உண்டு.

தமிழ் மூச்சு

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...