Thursday 18 June 2020

அர்த்தசாஸ்திரம் குறிப்பிடும் சமூக நிலை

                                                 


இந்துசமய மரபில் வேதகாலம் தொட்டு அரசியல், சமூகம், பொருளியல் பற்றிய சிந்தனைகள் நிலவிவந்துள்ளன. வேதகாலத்திற்கு முந்திய சிந்துவெளிக்காலத்திலும் இவை நிலவினாலும் இவை பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளது. அந்தவகையில் வேதகாலம் தொட்டு நிலவி நிலவிவந்துள்ள புராதன இந்தியாவின் இந்துசமய சார்பான அரசியல், சமூகம், பொருளியல் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் நூலாகவே அர்த்தசாஸ்திரம் விளங்குகின்றது. இதனை கௌடில்யர் கி.மு 4ஆம் நூற்றாண்டில் எழுதினார். சில அறிஞர்களின் கருத்துப்படி இந்நூல் ஒரு தொகுப்பு நூல் என கருதப்படினும் இதன் முக்கியமான பகுதியாவது மௌரிய பெருமன்னன் சந்திரகுப்தனின் காலத்தியதெனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்;றனர். எவ்வாறாயினும் நூலாசிரியர் தமக்கு முற்பட்ட கால சமகால அறிஞர்களும் ஞானிகளும் அரசியல், பொருளியல், சமூகவியல் பற்றி கூறியுள்ள கருத்துக்களையும் தமது அனுபவ வாயிலாக பெற்ற கருத்துக்களையும் தொகுத்தும் பகுத்தும் தமக்கேயுரிய பாணியிலே கூறியுள்ளார். .இந்நூல் 15 அதிகாரங்களையும் 150 அத்தியாயங்களையும் 6000 சுலோகங்களையும் கொண்டுள்ளதென நூலிலே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

   அர்த்தசாஸ்திரத்திலே பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளது. அரசர், அமைச்சர், ஆலோசனையாளர்கள் ஆகியோரின் கடமைகள், சபை கூடுவது, அரசாங்கத்தின் பல்வேறு கிளைகள் அல்லது இலாக்காக்கள், வர்த்தகம், வியாபாரம், நகர நிர்வாகம், கிராம நிர்வாகம், நீதி, நீதிமன்றங்கள், சமூக பழக்கவழக்கங்கள், பெண்ணுரிமைகள், வயது முதிர்ந்தோரையும் திக்கற்றவர்களையும் காப்பாற்றுவது, விவாகம், விவாகரத்து, வரிவிதிப்பது, தரைப்படை, கடற்படை, யுத்தம், சமாதானம், இராஜதந்திரம், விவசாயம், நூல் நூற்றல், நெசவு, கைத்தொழில், அனுமதி சீட்டு கொடுப்பது, சிறை நிர்வாகம், ஆண், பெண் என்கின்ற தனிநபர்கள் முதலிய பல வி~யங்கள் பற்றி அந்நூலில் பேசப்பட்டிருக்கின்றன.


   அந்தவகையில் அர்த்தசாஸ்திரம் குறிப்பிடும் சமூக நிலை தொடர்பில் ஆராயும் போது, அர்த்தசாஸ்திரத்தில் முதலாம் அத்தியாயத்தில் நான்கு குலங்கள் மற்றும் அக்குலத்துக்கு தரப்பட்டு இருக்கும் கடமைகள், வாழ்வின் நான்கு நிலைகள், தர்மத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்பன பற்றி எடுத்துக்கூறுகின்றது.


ஒரு சமூகமானது குலத்தால் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவுகளைக் கொண்டது என அர்த்தசாஸ்திரம் கூறுகின்றது. இதில் எந்தக்குலம் தாழ்;ந்தது என கூறமுடியாது என அது மேலும் தெரிவிக்கின்றது. மனித உடலில் அங்கங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அது போல மேற்கண்ட குலங்கள் நான்கும் சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த அந்தக் குலங்களுக்கு என்று சமூகம் ஒரு. ஒரு பொறுப்புக்களைத் தந்துள்ளது. அவை பின்வருமாறு:


பிராமணர்களுக்கு கற்றல், கற்பித்தல், மதச்சடங்குகளை செய்தல் அது மட்டும் இல்லாமல் நெருக்கடியான நேரங்களில் அரசர்களுக்கு ஆலாசனை கொடுத்தல் போன்ற பொறுப்புக்கள் தரப்பட்டு உள்ளதாக அர்த்தசாஸ்திரம் கூறுகின்றது. மேலும் பிராமண சமூகத்தவருக்கு சமூகவியல் அந்தஸ்தினையும் முதன்மைத்துவத்தினையும் வழங்கியுள்ளமையைக் காணலாம் அதாவது கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்: “ பிராமணர்கள் தங்கள் மரபு முறைப்படி வாழ்க்கை நடத்துவதை அரசன் தீமை செய்யக்கூடாது. அவர்களுக்கு பெரிய தண்டனைகளை வழங்கக்கூடாது.” என்று அரசர்கள் பிராமணர்களை போ~pக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.மேலும் துறவிகளையும், பிராமணர்களையும் சித்திரவதை செய்யக்கூடாது எனவும் அந்நூல் அறிவுறுத்துவதைக் காணலாம். அதேநேரத்தில் “இராஜதுரோகம் செய்த பிராமணரை நீரினுள் அமிழ்த்தி தண்டிக்க வேண்டும்” என்று கூறுவார். இதன் மூலம் பிராமணர்கள் தமக்குரிய ஆன்மீக கடமைகளை மட்டுமே ஆற்றுதல் வேண்டும் என்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை புலனாகும். 

 
சத்தரியர்கள் ஆயுதம் ஏந்தி நாட்டை எதிரிகளிடம் இருந்த காத்தல் அரசிற்குத் தேவைப்பட்டால் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கொடுத்தல். போன்றவை சத்திரியர்களின் கடமைகள் என அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கிறது.


வைசியர்கள் வாணிபம் செய்தல்.பொருள் சேர்த்தல், கால்நடை மேய்த்தல் மற்றும் சமூகத்தைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல் போன்றவை வைசியர்களின் கடமைகளாக அர்த்தசாஸ்திரம் விவரிக்கின்றது.
சூத்திரர்கள் வேளாண்மை, கால்நடை மேய்த்தல், கைவினைஞர்கள்,பாடுதல் நடித்தல் மேலும் பல கலைத்தொழில்களை செய்யும் குலமாக இந்த சூத்திரர்களை அர்த்தசாஸ்திரம் விவரிக்கின்றது.


 ஒரு ஆரியன் மற்றொரு ஆரியனை அடிமைப்படுத்துவது கூடாது. என்னும் பழைய கொள்கைகளையும் அர்த்தசாஸ்திரம் வற்புறுத்துகின்றது. வெளிநாடுகளிலிருந்து கொணரப்பட்டோ அல்லது உள்நாட்டிலோ சில ஆடிமைகள் இருந்தார்கள் என்று தெரிகின்றது. ஆனால் ஆரியர்களைப் பொறுத்தவரையில் ஒருவர் மற்றொருவருக்கு அடிமையாகாமல் கண்ணும் கருத்துமாய் பார்த்து வந்தார்கள். மேலும் அடிமைகள் பற்றி நோக்கும் போது அடிமையொழுக்கம் இல்லையென அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகின்றதாயினும் குறித்த சில சூழ்நிலைகளில் எவ்வருணத்தானாயினும் ஒருவர் அடிமையாகலாம். என்கிறது. பெரும்பாலான அடிமைகள் தாழ்ந்த சாதியினரென்பதில் ஐயமில்லை. மேலும் பிள்ளைகளை அடிமைகளை விற்றலுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சொத்தினை ஆள்வதுக்கும் அதனை முறையாகப் பெறுவதற்கும் ஓய்வு நேரங்களில் கட்டுப்பாடின்றி உழைத்துப் பணம் சேர்க்கவும் அடிமைகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேல்வருணத்தைச் சேர்ந்த அடிமைகளை இழிவான கருமங்களைச் செய்யுமாறு கட்டாயப்படுத்த முடியாது. அடிமைப்பெண்களின்  கற்பு பாதுகாக்கப்பட வேண்டும். தன் அடிமை பெண்ணொருத்தியை கற்பழிக்கும் தலைவன் அவளை விடுதலை செய்வதோடு அவளுக்கு வீடு அமைத்துக் கொடுக்க வேண்டும். தலைவன் அவளது நல்லிணக்கத்தை பெற்று உடலுறவு கொள்ளுவானாயின் அவனால் ஒரு பிள்ளை பிறக்குமாயின் தாயும் பிள்ளையும் விடுதலை பெறுவர். அர்த்தசாஸ்திரத்தில் காணப்படும் இத்தகவல்கள் ஏனைய பண்டைய நாகரிகங்களில் இல்லாத தனித்துவமாகப் பண்பாகும்.


சாணக்கியர் காலத்துப்பெண்கள் இன்றைய பெண்களை விட அதிக உரிமை பெற்றிருக்கவில்லை. மறுமணம், சொத்துரிமை போன்றவற்றில் பெண்கள் நிலை சிறப்பாக இருந்துள்ளது. ஆயினும் எல்லோரிடமும் பணிந்து நடப்பது, ஆண்களையே சார்ந்திருப்பது, வழிவழியாகப் பின்பற்றி வந்த மரபுகள் கட்டுபாடுகள் போன்றவை அவர்களை உரிமையற்றவர்களாக வைத்திருந்ததையே காட்டுகின்றன. 


பிராமணர்கள் வெள்ளை நிற உடையையும் சத்திரியர்கள் சிவப்பு நிற உடையையும் வைசியர்கள் மஞ்சள் நிற உடையையும் சூததிரர்கள் கறுப்பு நிற உடையையும் அக்கால சமூகத்தில் அணிவது வழக்கம். இதுவே வர்ணாஸ்ரமம் என அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கின்றது. இந்த நான்கு குலங்களும் சமூகத்துக்கு இன்றி அமையாதவை எனவும் அது மேலும் தெரிவிக்கின்றது.


இக்கால சமூக அமைப்பில் மௌரியரின் ஆட்சிமுறைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் அதிகார வர்க்கம் சத்திரிய வம்சத்தவர்களே என்னும் வருண தரும மரபை மாற்றி சூத்திரர்கள் ஆள்குடிகளாக அமைத்தமை முக்கிய சமூகவியல் புரட்சியாகும்.
அத்துடன் அர்த்சாஸ்திரத்திலே இன்றைய மனித சமூகத்திற்கு தேவையான உண்மைகளை குறிப்பிடுகின்றது. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள். 5 – 15 வயது வரை தவறு செய்தால் தடியால் தண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். 


சாணக்கியர் கால நிலக்கொள்கை மற்றும் வரிவிதிப்பினை பற்றி நோக்கும் போது, உற்பத்திக்கான பிரதான மூலம் நிலமே ஆகும் விவசாய நிலங்களிலுள்ள புதிய குடியிருப்புக்கள் அரசுக்குரியவை. அவையுள்ள நிலங்கள் பின்வருமாறு வழங்கப்படும்.

•    வரியிறுப்போருக்கு வாழ்நாள் முழுவதுமாக வழங்கப்படுபவை.
•    அரசின் கிராமப் பணியாளர்களால் சில வேளைகளில் பயிரிடப்படுவதற்கு வழங்கப்படபவை
•    வணிகர்களுக்கு குத்தகைக்கு விடப்படுபவை.


பயிரிட முடியாத நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்படும். புரோகிதர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். அவர்களின் கல்வி, தவம் முதலியவற்றிக்காகவும் காட்டின் சில பகுதிகள் ஒதுக்கப்படும். சொத்தில் உரிமையாளன் தனது விருப்பமான விலையைக் கூறி 3 முறை அறிவிக்கலாம். வாங்குபவர்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு ஓர் உயர்ந்த விலை நிர்ணயமானால் அறிவித்த விலைக்கும் விற்கப்பட்ட விலைக்கும் உள்ள வேறுபாட்டுத் தொகை கருவூலத்தில் உடனடியாக செலுத்தப்பட வேண்டும். விற்பனை பேரத்தில் வெற்றி பெற்றவர் விற்பனைக்கான வரியைச் செலுத்தும் படி இருக்கும். 


ஒருவர் சமூகத்திற்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் தண்டிக்கப்படுவர். குடும்பத்தைக் கவனிக்காதவர்களுக்கும் , மனைவிக்கும் வயது வராத பிள்ளைக்கும் போதிய அளவு பொருளாதார வசதிகள் செய்யாது துறவறத்தை மேற்கொள்வோருக்கும் தண்டனை வழங்கும். சுயநலவாதிகளும் சமூக விரோதிகளும் தண்டிக்கப்படுவர். குற்றம் செய்யும் பிராமணர் கூட தண்டனையிலிருந்து தப்பமுடியாது. குற்றங்கள் அறியாமையினாலும் ஒழுங்கின்மையினாலும் விளையும் ஒழுக்க்கேடுகளாகும். கற்காத மனிதன் தனது குற்றங்களினால் ஏற்படும் கெடுதலான விளைவுகளை புரிந்துகொள்ள மாட்டான் என அர்த்தசாஸ்திரம் கூறுகின்றது. பதவிக்குரிய தகுதிகளின் கீழ் சூதாடுதல் அதிக ஆபத்துடையதாகும். கடுமையான விளைவுகளைக் கொண்ட பெரும் தீங்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல் ஆகும். அதனைத்தொடர்ந்து பெண் மேலும் சூதாடுதல் மற்றும் இறுதியாக வேட்டையாடுதல் ஆகியன இடம்பெறுகின்றன.
மணவாழ்வும் அர்த்தசாஸ்திரம் கூறும் எட்டு வகைத் திருமண முறைகள் பற்றி நோக்கும் போது, திருமண பந்தம் தான் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையை இணைத்து முழுமை அடையச்செய்கிறது. எனவே இந்தத் திருமண பந்தம் தான் ஒருவர் வாழ்க்கையில் முக்கிய கட்டமாகும். இந்துச் சமூகத்திருமணங்களின் பொதுவான விதிமுறைகள் திருமணம் செய்து கொள்கின்ற ஆணும், பெண்ணும் ஒரே குலத்தைச் சார்ந்தவராயிருக்;க வேண்டும் என்பதே ( அதே சமயத்தில் ஒரே கோத்திரமாக இருத்தல் கூடாது.) பொதுவாக அர்த்தசாஸ்திரத்தில் எட்டு வகையான திருமண பந்தங்கள் விளக்கப்பட்ட உள்ளது. அவை பின்வருமாறு:


1.ப்ரமா : நன்கு அலங்கரிக்கப்பட்ட மகளை ஒரு தந்தை திருமணம் செய்து கொடுத்தல்.

2.ப்ரஜாபத்யா : பெண்ணின் தந்தையிடம் சம்மதம் பெறாமல் பெண்ணும் ஆணும் புனிதச்      சடங்குடன் மனம் செய்து கொள்ளுதல்.

3.ஆர்ஷா : கணவன் தன் மனைவியின் தந்தைக்கு இரண்ட பசுக்களைக் கொடுத்து, அதன் மூலம் நடந்த திருமணத்தை முறைப்படுத்திக் கொள்ளுதல்.

4.தைவா : பலிபீடத்தின் குருவாய் செயலாற்றுபவருக்குப் பெண்ணை கொடுத்தல்.

5. காந்தர்வ : இரகசியமாய் காதல் திருமணம் செய்து கொள்ளுதல்.

6. ஆசுரா : ஏதேனும் பரிசுக்குப் பதிலாய் பெண்ணை அளித்தல்.

7.ராட்சஸா : திரமணம் செய்யும் பொருட்டு பெண்ணை வலுக்கட்டாயமாய் கடத்திச் செல்லுதல்.

8.பைசாஸ : ஒரு பெண்ணை உறங்கிய நிலையில் அல்லது மயங்கிய நிலையில் கவர்ந்து செல்லுதல்.


பெண்ணின் தந்தையின் சம்மதத்தோடு நடைபெறும் முதல் நான்கு வகைத் திருமணங்கள் சட்டத்துக்கு உட்பட்டவை. மற்றவை பெண்ணின் பெற்றோர் ஒப்புக்கொண்டால் மட்டுமே சட்டபூர்வமானதாகும். கலப்பினங்களை சார்ந்தவர்கள் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம். அதில் தவறில்லை. 


திருமணத்தின் போது  அளிக்கப்படும் வரதட்சணை மற்றும் பரிசுகள் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் விளக்கங்களை நோக்கும் போது, சம்மதத்தை கொடுப்பதற்காக வழங்கப்படும் வரதட்சணை தந்தையாய் இருவருக்கும் அல்லது ஒருவர் இல்லாத நிலையில் மற்றொருவருக்கும் சென்று சேரும். பெற்றோர் தமது இந்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு முறை மட்டுமே வரதட்சணையைப் பெறலாம். வற்புறுத்தி பெறப்படும் வரதட்சணை திருட்டுக்கு சமன் மறுமணத்தின் மூலம் பெறப்படுகின்ற இரண்டாம் வரதட்சணை முதல் மனைவியைச் சேரும். அனைத்து வகைத் திருமணங்களிலும் பெண்ணைத் திருப்திபடுத்துவதற்காக வழங்கப்படும் பரிசுகள் தவிர்க்கப்படுவதில்லை. 


 உயர் குலங்களைப் பொறுத்தவரை திருமண ஒப்பந்தம் என்பது பாணிக்கிரகணம் எனப்படும்.     பாணிக்கிரகணம் என்பது பெண்ணை பெற்ற தந்தை அவளது கையை பிடித்தவாறு மாப்பிள்ளையிடம் திருமணத்தின் பொழுது ஊர் அறிய உலகம் அறிய ஒப்படைப்பார். இதில் மணமகன் - மணமகள் இருவரில் யாரிடம் பால் சார்ந்த குறைபாடுகள் இருந்தாலும் திருமணத்தை ரத்து செய்ய முடியும். உயர்குடி தவிர மற்ற ஜாதிகளைப் பொறுத்தவரை மணமக்கள் உடல் உறவு கொண்டு திருமணத்தை முழுமையாக்கும் வரை இடையில் எந்த நெரத்திலும் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். ஓர் அணின் மூலம் பெண் கருவுற்ற நிலையில் அவர்களுக்கு இடையேயான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயலாது.
பெண்ணின் பாலியல் ரீதியான குறைப்பாட்டை மறைத்துத் திருமணம் செய்வது தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதே போல மணமகனின் குறைப்பாட்டை மறைப்பது இருமடங்கு அபராதம் மற்றும் தண்டனைக்குரியதாகும். ஏற்கனவே ஒருவரை மணந்த பெண்ணை மற்றொருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முயற்சிப்பத குற்றமாகும். 


ஒரு பெண் பருவம் எய்திய மூன்று வருடத்திற்குள் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பது தந்தையின் கடமையாகும். பருவம் எய்திய 3 வருடத்திற்குப் பிறகும் கன்னியாகவே திகழும் ஒரு பெண் தன் தந்தை அளித்த எந்த நகையையும் ஏற்காது தான் விரும்பியவரை மணம் முடித்தல் குற்றம் அன்று.பெண் பன்னிரண்டு வயதிலும், ஆண் பதினாறு வயதிலும் மணம் முடிப்பதற்கான பக்குவம் அடைகின்றார்கள்.


      கணவனுக்கு முன் மனைவி இறப்பாளாயின் அவளது சொத்துக்கள் கீழ்க்கண்டவாறு பங்கிடப்படும்.

•    மகன்கள் மற்றும் மகள்களுக்கு சமபங்கு
•    மகன்கள் இல்லாவிடில் மகள்களுக்குச் சமபங்கு
•    குழந்தைகள் இல்லாவிடில் கணவனைச் சேரும்.

அர்த்தசாஸ்திரம் குறிப்பிடம் மொளரிய கால விவாகரத்து சட்டதிட்டங்களை நோக்கும் போது, ஒரு கணவன் தீய குணங்களைப் பெற்று இருந்தாலும், அந்நிய தேசத்தில் நீண்ட காலம் தங்கி விட்டு இருந்தாலும், இராஜதுரோகியாக இருந்தாலும், மனைவிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கணவன் மனைவியின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும் ஆண்மை அற்றவனாக இருந்தாலும் அவகுடைய மனைவி அவனைக் கைவிடலாம். 


மானுட வாழ்வின் சிறந்த குறிக்கோள்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. அவை முறையே தர்மா, அர்த்த, காமா. மோட்சா ஆகியனவாகும். தர்மா ஒருவன் தன்னுடைய மூதாதையர்களுக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நேர்மையயாக இருத்தலை தர்மம் குறிப்பிடுகின்றது. ஒருவன் தன் வாழ்வில் கடைப்பி;டிக்க வேண்டிய கோட்பாடுகளை அத பேசுகிறது. ஏனெனில் ஒரு சமூகம் பல குடும்பங்களைக் கொண்டது. ஒரு குடும்பம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களைக் கொண்டது. ஆக ஒவ்வொரு தனிமனிதனும் தர்மத்தை கடைப்பிடித்தால் அது ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும். சமூகம் எந்த அளவுக்கு தர்மத்தை மதிக்குமோ அந்தளவுக்கு அது பாதுகாப்பாக இருக்கும். அதுவே அச்சமூகத்தில் தர்மத்துக்கு ஊரு நேர்கின்ற போது அந்த சமூகம் தன்னைத்தானே குழி தோண்டிப்புதைத்துக் கொண்டு விடும் என்கிறது அர்த்த்சாஸ்திரம். காமா ஒரே கோத்திரம் அல்லாத ஆனால் அதே குலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு இன்புறுவது. அதன் மூலம் தனக்கென வாரிசுகளையும் ஏற்படுத்திக் கொள்ளுதல். அவர்களுக்காக தனது சொந்த விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்வதைக் குறிக்கும்.


மோட்சா எனப்படுவது சிறந்த குறிக்கோளாக கருதப்படுகின்றது. அர்த்த எனும் பதம் பொருட் செல்வத்தைக் குறிக்கும்.  


அத்துடன் வாழ்வின் நான்கு நிலைகள் பற்றியும் அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் அவசியம் நான்கு நிலைகளைக் கடந்தே தீரவேண்டும். அதுவே மானுட விதி. அவை முறையே:

1.    பிரம்மசார்யம்
2.    கிரஹஸ்தன் (அல்லது குடும்பஸ்தன்)
3. வனப்ரஸ்த்தம் ( துறவுக்கு முந்திய நிலை அல்லது துறவறத்துக்காக  தன்னை தயார்படுத்திக கொள்ளுதல்.
4.    துறவு நிலை அல்லது சந்நியாசி நிலை

பிரம்மசார்யம் சமய நூல்களைக் கற்றல், சமயச்சடங்குகளுக்காக யாகம் செய்தல், புனித நீராடுதல், எவ்வி உடைமைகளுமின்றி வாழுதல், தன்;னையே ஆசிரியருக்கும் மற்ற குருமார்களுக்கும் அர்ப்பணித்தல். சக மாணவர்களுடன் வெறுப்பு, விருப்பு கடந்த நிலையில் பழகுதல் போன்றவை அர்த்சாஸ்திரம் கூறும் ஒரு பிரம்மச்சாரியின் கடமைகள் ஆகும். 


கிரஹஸ்தன் தனக்குரிய தொழில் புரிந்து சம்பாதித்தல், ஒரே கோத்திரம் அல்லாத ஆனால் அதே குலத்தைச் சேர்ந்த பெண்ணை மணப்பது, கடவுளை மட்டம் இன்றி முன்னோர்களையும் விருந்தினர்களையும் வணங்குவது, தன்னை சார்ந்தவர்களுக்காக தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை தியாகம் செய்தல் போன்றவை அர்த்சாஸ்திரம் கூறும் கிரஹஸ்தனின் கடமைகள் ஆகும்.


வனப்ரஸ்த்தம் என்பது வெற்றுத்தரையில் உறங்குதல், புனித நீராடி யானம் செய்தல், பிறரைச் சார்ந்தோ தான தர்ம்த்திலோ வாழாமல் காட்டில் இருந்து சேகரிததப்பொருட்களை கொண்டு வாழ்தல் போன்றவை ஒரு வனப்ரஸ்த்தியின் கடமைகள் என அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. 

       
துறவு நிலை என்பது முற்றிலும் புலன்களை அடக்குதல், அனைத்து உடைமைகளையும் துறத்தல், உலக பந்தங்களைத் துறத்தல், ஒரே இடத்தில் தங்காமல் பல இடங்களுக்குச் செல்லுதல், உள்ளத் தூய்மையுடன் இருத்தல். எப்பொழுதும் தெய்வத்தின் தன்மையை தன்னகத்துள் உணர்ந்து இருத்தல் போன்றவை ஒரு துறவு நிலையில் இருப்பவனின் கடமைகளாக அர்த்தசாஸ்திரம் விளக்கிக் கூறுகிறது.


இது தவிர அனைவருக்கும் பொதுவான கடமைகள் இருப்பதாக கூறுகிறது அர்த்தசாஸ்திரம் அவை அகிம்சை, உண்மை, தூய்மை, தீய எண்ணங்களில் இருந்து விடுபடுதல், இறக்கம் மற்றும் சகிப்புத்தனமை போன்றவை ஆகும்.
 ஒருவர் தனது சொந்த குலத்துக்குரிய மதத்திற்குரிய தர்மத்தைக் கடைப்பிடித்தல் மிக அவசியம் ஆகும். 


அர்த்தசாஸ்திரம் 11 அத்தியாயத்தில் கூறும் சொத்துரிமைச்சட்டங்களை நோக்கும் போது, மரபு வழிச்சொத்துக்களின் பங்கீடு அப்பகுதியில் உள்ள சாதி, கிராமபழக்கவழக்கங்களைச் பொருத்;ததாகும். தந்தை உயிருடன் இருக்கும் போது மகன்கள் மூதாதையர் சொத்துக்கு உரிமை கொண்டாட இயலாது. தந்தை தன் வாழ்நாளிலே மூதாதையர் சொத்துக்களை மனக்களுக்கு பங்கிட்டு அளிக்கலாம். அவ்வாறு செய்கையில் அவர் ஒருவருக்குச் தனிச்சலுகை காட்டுவதோ சரியான உரிமை உடையவரைக் காரணமின்றி தவிர்த்தலோ கூடாது. தந்தை உயிருடன் இருக்கும் போது மூதாதையர்களின் சொத்து பங்கிடப்படவில்லை எனில் அவருடைய இறப்பிற்குப் பின் சொத்துக்கள் பங்கிடப்படலாம். சுயமாய் ஈட்டியச் சொத்துக்களுக்கு மரபுவழிச் சட்டங்கள் பொருந்தாது. 


அர்த்தசாஸ்திரத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் சமூகத்தின் குற்றங்களுக்கான அபராதங்கள் என்பன பற்றி குறிப்பிடுகின்றது. அபராதங்களையும் அதனைப் பொறுத்து ஈட்டுத்தொகையையும் 3 வகையாகப் பிரிக்கிறார்..

•    குறைந்த தர அபராதம் - 48 முதல் 96 பணம்
•    இடைத்தர அபராதம் - 200 முதல் 500 பணம்
•    உயர்தர அபராதம் - 500 முதல் 1000 பணம்


தாமிரம், வெண்கலம், கண்ணாடி, தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றனவற்றை கவரும் கள்வனுக்கு குறைந்த தர அபராதம் விதிக்கப்படும.; நிலம், வீடு, பணம், பெரிய மிருகங்கள், நல்ல துணிகள் போன்றவற்றை கவரும் கள்வனுக்கு இடைத்தர அபராதம் விதிக்கப்படும். ஒரு ஆண் அல்லது பெண்ணின் சுதந்திரத்தை வழுக்கட்டாயமாக பறித்தல் அல்லது அவ்வாறு செய்யுமாறு ஒருவரைத் தூண்டுதல் போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு உயர்தர அபராதம் விதிக்கப்படும். பிரச்சினையை சமாளிக்க சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு முறைகளைப் கையாளும் படி இந்திய கலாச்சாரம் கூறுகின்றது. இதனை சாணக்கியர் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளுதல், பரிசளித்தல், எதிரிகளுக்கு இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தல், எதிரிகளுக்கு எதிராக இராணுவ பலம் உபயோகித்தல். என்று அவர் வேறுவிதமாக வகைபடுத்திக் கூறுகிறார். 
 

களவு மற்றும் பாலியல்சம்மந்தமான குற்றங்களும் அதனைச்சார்ந்த விசாரணை முறைகளும் அதற்கான தண்டணை முறைகளும் அர்த்தசாஸ்திரம் 11ஆவது அத்தியாயத்தில் விவரிக்கின்றது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திற்கு “தண்டநீதி” என்ற பெயரும் உண்டு. இதற்குக் காரணம் கௌடில்யர் காலத்தில் கடுமையான தண்டணைகள் அளிக்கப்படுவதன் மூலம் சமூக ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. தண்டணைகள் எளிமையாகவோ மிகக் கடுமையாகவோ இருக்ககூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப தண்டணைகளை மாற்றலாம். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்க கருணைகாட்ட வேண்டும். அறியாமையில் செய்த தவறுகளுக்கு எளிய தண்டணைகள் அளிக்கப்பட வேண்டும். என்பன போன்ற விதிமுறைகளை கௌடில்யர் விளக்கிக் கூறுகின்றார். 



 இந்து மரபுடன் தொடர்புடைய கட்டிட சிற்பக் கலைகள் வளர்ச்சி தொடர்பாகவும் அறியமுடிகிறது. புதைபொருள் மூலாதாரங்களை விடவும் இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இக்கால இந்து கலைகளின் வளர்ச்சியைப் பற்றி அறியவேண்டியுள்ளது. அர்த்தசாஸ்திரம் இந்துகடவுளருக்குரிய ஆலயங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அத்துடன் நாட்டியம்,நாடகம், இசை முதலான கலைகள் பற்றி கூறுகிறத. இக்கலைகளை அரசர்கள் கண்டும் கேட்டும் அகம் மகிழ்ந்தார்கள் என்று அந்நூல் கூறுகின்றது. மேலும் அதில் வாத்தியம், வீணை,குழல்,மிருதங்கம், பாடல் என்பன பற்றி பல இடங்களில் காணப்படுகின்றது. இதன்வாயிலாக இசைகருவிகளுடன் இணைந்த இசைக்கலையின் வளர்ச்சியினை அறியமுடிகிறது. மௌரிய காலத்தின் முற்பகுதியிலே சமூகத்திலே வாழ்ந்தவர்களுக்கு எழுதப்படிக்க தெரியும் எழுதியிட்ட பத்திரங்களையும் அவற்றை வைக்கும் சேமிப்பு அறைகளையம் பற்றி கௌடில்யர் தமது அர்த்தசாஸ்திரத்திலே குறிக்கிறார்.



     எனவே தொகுத்து நோக்கும் போது, அர்த்தசாஸ்திரத்திலே வைதீக இந்துசமய சார்பான அரசியல், சமூகம், பொருளியல், சட்டம். முதலியன பொதுவாக விபரிக்கப்படினும் சில இடங்களில் ஒழுக்கவியலுக்குப் புறம்பான கரத்துக்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் நூல் முடிவிலே “ மனித குலம் உயிர் வாழுவதற்கான பிழைப்பூதியமே அர்த்தம். மனித குலம் கொண்டுள்ள பூமியும் அர்த்தமே. பூமியை வெற்றுப்பெறுவதற்கும் பாதுகாத்தலுக்குமான உபாயத்தினைக் கூறும் அறிவியலே “ அர்த்தசாஸ்திரம்” என ஆசிரியர் இதற்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார். நாட்டுக்கும் அரசனுக்கும் கூறப்பட்ட அறநெறிகளின் தொகுப்ப என்று இந்நூல் அறியாவிட்டாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கான ஒழுக்கலாறுகளையும் வரையறை செய்துள்ள நூல் இது என்பது உண்மை. 


     சாமானிய மக்களை பொறுத்தவரை .இந்த அர்த்தசாஸ்திரம் அவர்களுக்க ஒரு கலங்கரை விளக்காக அமையும். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், நேர்முக மறைமக எதிர்ப்புகளில் இருந்து வெற்றி பெறும் விதம் போன்றவை இதில் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது. ஒரு பெண் சமூகத்தில் எப்படி நடந்துக் கொண்டால் இச்சமூகம் அவளை உயர்த்தும் என்றும் பெண்களுக்கு உள்ள கடமைகளையும் அக்கடமைகளை செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் அழகாக இந்த நூலில் சாணக்கியர் எடுத்துக்கூறியுள்ளார். 

சுரேஸ்குமார் சஞ்சுதா






No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...