Friday 8 January 2021

இந்திய தேசிய விடுதலை உணர்விற்கு மகாத்மா காந்தியின் பங்களிப்பு

 

1947. ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகின்றது. அந்நாள் “இந்தியா புதிய தேசத்தின் உதயநாள்” என்று சொன்னால் மிகையாகாது. ஏனென்றால் இறையாண்மை கொண்ட நாடாக திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரங்கணக்கான புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லலாம். இந்தியா சுதந்திரம் பெற்று சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து சுதந்திரமாக தாய் மண்ணில் இந்தியர்கள் சுதந்திரக்காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முதன்முதல் காரணம் அந்நாட்டு தேசிய தலைவர்களும் போராட்ட வீரர்களுமே.

இந்தியாவின் அரசர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி மனப்பான்மையும் ஒற்றுமையின்மையும் ஏகாதிபத்தியம் தோன்றக் காரணமாகும். ஆங்கிலக்கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதி பெற்று சூரத்தில் தனது வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது. கி.பி 1664 இல் பிரேஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழு 16ஆம் லூயியின் அமைச்சராக விளங்கிய கால்பெர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் தங்கள் வணிகத்தளங்களை ஏற்படுத்தியது. அதன் காரணமாக கர்நாடக போரின் விளைவால் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பிரான்சின் செல்வாக்கை அடி;யோடு அழித்தனர். அதன் பின்பு 1857 இல் பெருங்கலகம் ஏற்பட்டது. இதனை அடக்கியப் பின்பு ஆங்கில அரசு மகாராணி விக்டோரியா அவர்களின் பெயரினால் 1858 இல் வெளியிடப்பட்ட விக்டோரியா பேரறிக்கை மூலம் கிழக்கிந்திய வணிகக்குழு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. விக்டோரியா மகாராணி இந்தியாவை தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.  இன்று முதல் 1947 இல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா ஆங்கில அரசின் கீழ் ஒர் குடியேற்ற நாடாக விளங்கியது. இக்காலத்திலே “மகாத்மா காந்தி” என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகனதாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரபோராட்ட வீரர் என்ற வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றார். “சத்தியாகிரகம்” என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இவர் “விடுதலைப்பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். அத்துடன் “மகாத்மா” என்னும் பட்டத்தை காந்திக்கு வழங்கியவர் “இரவீந்திரநாத் தாகூர்” 

விடுதலை போராட்ட காலத்தில் மக்களிடையே நாம் அனைவரும் பாரத தேசத்தை சார்ந்தவர்கள் என்ற உணர்ச்சி உருவாகி வளர்ச்சி பெற்றது. அது தீவிரவாதம், மிதவாதம் என்ற இரு கிளைகளாகக் கிளர்ந்தெழுந்தது. மிதவாத இயக்கத்தின் தலைவர் அண்ணல் காந்தியடிகள் ஆவார். 

மோகனதாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி இந்தியாவின் குஐராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும் புத்தலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஐராத்தி ஆகும். இந்திய தேசிய விடுதலை உணர்விற்கு மகாத்மா காந்தியின் பங்களிப்பினை ஆராய்வோம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி ஈடுபடுவதற்கான காரணங்களை ஆராயும் போது தென்னாபிரிக்காவில் 1893 – 1914 வரை அவர் பெற்ற அனுபவம் ஆகும். காந்தி தன்னுடைய பதினெட்டாவது வயதில் “பாரிஸ்டர்” எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாகக் முடித்து பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றனார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்ஆபிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்று வரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்ஆபிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும் ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது “வெள்ளையர் இல்லை” என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னல்களுக்கும் அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கரஸ் என்ற கட்சியினைத் தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஐோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில் அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சினையில் வெற்றிக்கண்ட மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதும் கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது. தென்ஆபிரிக்காவில் காந்தி அமைத்த பத்திரிகை “இந்தியன் ஓப்பீனியன்” ஆகும்.

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாகக் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தி அவர்கள் 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திலகரின் மறைவுக்குப் பின் மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயற்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் சத்தியாத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, இரண்டாம் உலக போர் என சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியொடு நகர்ந்த காலங்கள் இவை.

இந்தியாவின் காந்தியின் முதல் அரசியல் சோதனை போராட்டமாக “சம்பிரான் சத்தியாகிரகம்” அமைந்தது. சம்பிரான் சத்தியாகிரகம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

20ஆம் நூற்றாண்டில் சின்தட்டிக் சாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இண்டிகோ அதன் சந்தை மதிப்பை இழந்தது. ஆனால் தோட்ட அதிபர்கள் இண்டிகோ விவசாயிகளை விடுவிக்காமல் நிலக்குத்தகையை அதிகரித்தும் மேலும் சட்டபூர்வமற்ற வழியில் விடுவிக்க கட்டணம் வசூலித்தனர். இதனை எதிர்த்து இராஜ்குமார் சுக்லாவும் ஷம்பீர் முகமதுவும் காந்தியை அழைத்தனர். காந்தி சம்பரானுக்கு இராஜேந்திரபிரசாத், மாஸ்ஹர் - உல் - ஹீக் கிருபாலானி மற்றும் மகாதேவ்தேசாய் உடன் சென்று விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அரசு காந்தியை எதிர்த்தது. பின்னர் அவரையே விசாரணை குழுவிற்கு உறுப்பினராக நியமித்தது. தின்காத்திகா முறை ஒழிக்கப்பட்டது. விவசாயிகளிடம் முறையற்று வசூல் செய்யப்பட்ட தொகையில் 35% ஊதிய உயர்வை அளிக்க முன்வந்தனர். 

கேதா சத்தியகிரகம் 1918 காந்தி தலைமையில் ஏற்பட்டுக்கொண்டது. கேதா மாவட்டத்தில் (குஜராத்) ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயிகள் வரிதள்ளுபடியை அரசிடம் வேண்டினர். ஆனால் அரசு வரியை தள்ளுபடி செய்யாமல் வரிவசூல் செய்ய பலாத்தகாரத்தை பயன்படுத்தியது. காந்தி விவசாயிகளிடம் வரிகொடுக்க வேண்டாம் என்று அழைப்பு விடுத்ததால் ஆங்கில அரசு பலத்தை பயன்படுத்தி பின்னர் வரிவசூலை நிறுத்தி வைக்க இரகசிய ஆணையை பிறப்பித்தது. ஆகையால் குஜராத் விவசாயிகளிடம்; காந்தியின் புகழ் பெருகியது.

இந்த போராட்டங்களுக்கு காந்திக்கு வெற்றியை தேடிக்கொடுத்ததால் அவர் அகில இந்திய தலைவர் நிலையை அடைந்தார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 

எட்வின் மாண்டேகு என்று புதிய இந்திய விவகாரத்துறை செயலர் இந்திய தேசியவாதிகளை அமைதிபடுத்த 1917 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் நாள் அரசின் நிர்வாகக் கொள்கையை ( ஆகஸ்டு அறிக்கை ) அறிவித்தார். 1919 ஆம் ஆண்டுச்சட்டத்தின் படி மாநிலங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து சென்னை, வங்காளம், பம்பாய், ஐக்கிய மாகாணம், பஞ்சாப், பீகார், மத்திய மாகாணம், அஸ்ஸம் ஆகிய எட்டு மாநிலங்களில் இரட்டையாட்சி அமுல் செய்யப்பட்டது. மத்தியில் இரண்டு அவைகள் உடைய சட்டசபை உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் அவை, மத்திய சட்டமியற்றும் சபை. இலண்டனில் புதிதாக இந்திய உயர் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது.

உலகப்போர் முடிந்தவுடன் பயங்கரவாதத்தை அடக்கும் முயற்சியில் நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில் 1917 டிசம்பர் 10ஆம் நாள் ஒரு குழு அமைந்தது. அந்த குழு 1918 ஏப்ரல் 15ஆம் நாள் அறிக்கையை சமர்பித்தது. இதன் பரிந்துரையின் படி 1919 மார்ச் 18ஆம் நாள் சட்டம் இயற்றப்பட்டது. இவ்ரௌலட் சட்டத்தை “கறுப்பு மசோதா” என்றும் அழைத்தனர். இவ்சட்டத்தை காந்தியடிகள் எதிர்த்து சாத்வீக போராட்டத்தை தொடங்கினார். 1919 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் சத்தியாகிரக நாளாக நாடெங்கும் அனுசரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் சென்னையில் வைத்து சத்தியாகிரக நாளை ஏப்ரல் 6க்கு தள்ளி வைத்தார்.

ரௌலட் சட்டத்தினை எதிர்த்து நடந்த சத்தியாகிரகத்தை ஒட்டி பஞ்சாப்பின் புகழ்மிக்க தலைவராகிய டாம்கட் சைபுதீன் கிடசுலுவும் டாக்டர் சத்திய பாலும் நாடுகடத்தப்பட்டனர்.  இதனை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கடுமையான அடக்கு முறைகளை கையாண்டதோடு மனித உரிமைகள் மிக கொடிய முறையில் மீறப்பட்டது. அரசின் கீழ்த்தரமான அடக்குமுறைகளை கண்டித்து 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பைசாகி தினத்தன்று ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் மூன்று பக்கம் மூடிய பூங்காவில் பொது கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டம் சடைபெற்று கொண்டிருக்கும் போது ஜெனரல் டயர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட உத்தரவிட்டார். அரசின் அறிக்கையின் படி 379 பேர் இறந்தனர். ஆனால் 1000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியா முழுவதிலும் இந்த கொடூரச்செயல் கண்டிக்கப்பட்டது. இரவீரந்திர நாத் தாகூர் “நைட்ஹீட்” பட்டத்தை துறந்தார். இப்படுகொலை பற்றி விசாரணை செய்ய ஒழுங்கின்மை விசாரணை குழுவை நீதிபதி ஹண்டர் பிரபுவின் தலைமையில் அமைத்தது. குழுவின் 7 உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாவார். காங்கிரசும் விசாரணை குழுவை நியமித்தது. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ், மகாத்மா காந்தி அதன் உறுப்பினர்களாவார். 

செவ்ரஷ் உடன்படிக்கை துருக்கியை தூண்டியதால் இந்திய முஸ்லீம்கள் பிரிட்டிஷ் பேரரசின் மீது கோபமும் வெறுப்பும் கொண்டனர். அதன் விளைவே கிலாபத் இயக்கமாகும். கிலாபத் இயக்கம் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டது.

முதல் உலகப்போருக்கு முன்பு இருந்த நிலையிலேயெ துருக்கியில் பேரரசின் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

துருக்கி சுல்தானின் சமயத்தலைமை ஆட்சி அதிகாரம் இரண்டும் முன்பிருந்தபடியே உறுதிசெய்யப்பட வேண்டும்.

 கிலாபத் மாநாடு 1919 செப்டம்பர் 21 ஆம் நாள் லக்னோவில் நடைபெற்றது. அலி சகோதரர்களும் முகமது அலி, ஷவுக்கத் அலி மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் அம்மாநாட்டின் முக்கிய தலைவர்களாவார். 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் கிலாபத் தினமாக நாடு முழுவதும் அழைப்பு விடுவிக்கப்பட்டது. 

 இரண்டாவது கிலாபத் மாநாடு டெல்லியில் 1919 ஆம் ஆண்டு நவம்பர் 23, 24 ஆம் நாள் நடைபெற்றது. இதில் காந்தியடிகள் கூட்டத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். காந்தியின் அறிக்கையின்படி கிலாபத் மாநாடு நியமித்த குழு ஒத்துழையாமை திட்டத்தை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் படி நடவடிக்கையை எடுக்க கல்கத்தாவில் லாலா லஜபதிராஜ் தலைமையில் 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் சிறப்புகூட்டம் கூட்டப்பட்டது. ஒத்துழையாமை நிறைவேற்றப்பட்டது.

ரவ்லத் சட்டத்தை எதிர்த்தும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 மாண்டெகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச்சட்டம் எனும் இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுதலை வெளிக்காட்டவும் இச்சீர்திருத்த சட்டத்தின் பயனின்மையை ஆங்கியேலயருக்கு உணர்த்தவும் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை (கி.பி1920 - கி.பி 1922) 1920ஆம் ஆண்டு தொடங்கினார். இவ்வியக்கம் மூன்று படிநிலைகளில் கடைபிடிக்கப்பட்டது. 

முதற்கட்டமாக ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும் பட்டங்களையும் விருதுகளையும் துறந்தனர். அதன்படி காந்தி “கெய்சர் இ ஹிந்தி” எனும் பட்டத்தை துறந்தார். இரண்டாவது கட்டமாக வேலைநிறுத்தம் உட்பட பெரும் போராட்டங்களை நடத்தினர். அனைத்து அரச அலுவலகங்கள் , பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்ட மன்ற நடவடிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் இருப்பது பிரிட்டிஷ்காரர் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. 

மூன்றாவது கட்டம் மற்றும் கடைசிக்கட்டமாக வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரிசெலுத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒத்துழையாமை இயக்கம் முழுவீச்சில், கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற முறைகளில் நாடுமுழுவதும் தீவிரமாக நடைபெற்றது. வன்முறைகள் தலைவிரித்தாடின.

ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தியடிகள் எத்தகைய வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எனினும் வன்முறைகள் பல இடங்களில் தொடர்ந்தன. 1922 ஆம் ஆண்டு ஜனவரி 5 உத்தரபிரதேசத்தில் “சௌரி சௌரா” (கோராக்பூர்) என்னுமிடத்தில் ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் போது காவலர்கள் விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் கோபமடைந்த விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக காவல் நிலையத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர். இதனைக் கண்ட வருத்தமடைந்த காந்தியடிகள் ஒத்தழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட்டார். பர்தோலியில் 1922ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் கூடிய காங்கிரஸ் செயற்குழு காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்த்pயதை ஏற்றுக்கொண்டது. ஆனால் காந்தியடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.இதனால் தேசிய இயக்க நடவடிக்கைகள் சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

காந்தி இந்து – முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றிக்காக பாடுபட்டார். 

1920 ஆகஸ்ட் 31 அன்று காந்திஜி காதி பிரதிக்ஞை எழுத்தக் கொண்ட அதனை இவ்வாறு எழுத்தில் பதித்தார். “இன்றைய தினத்திலிருந்து  நான் கையால் நூற்ற கதர் ஆடையையும், கதர் குல்லாவையும் மட்டுமே அணிவேன்.”

இந்தியாவுக்கு ஓராண்டுக்குள் சுதந்திரம் தராவிட்டால் சத்தியாகிரகம் தீவிரமடையும் என 1928இல் அறிவித்தார். ஓராண்டு கெடு முடிந்ததும் 1929 டிசம்பரில் இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி சத்தியாகிரகம் அறிவித்தார் காந்தி.

முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாக் கொண்ட காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். பிரிட்டிஷ் அரசு பல லட்சக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வரும் உப்பு மீது ஆங்கில அரசு வரி விதித்தது. இது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதித்தது. எனவே இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் “தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா? ” எனக்கருதி சத்தியாக்கிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து காந்தியடிகள் மார்ச் 12. 1930 ஆம் ஆண்டு சட்டமறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார். 1930. மார்ச். 02 சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆச்சிரமத்திலிரந்து தினமும் 12 மைல்கள் நடந்து 3 வாரத்தில் 241 மைல் தூரத்தில் உள்ள  (சுமார் 400 கி.மீ ) பயணம் மேற்கொண்டு 23 நாள் பயணத்திற்கு பிறகு குஜராத் கடற்கரை பகுதியில் உள்ள  தண்டியை வந்தடைந்தனர். இவ்தண்டி யாத்திரை உப்புச் சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்டது. வழி நெடுகிலும் ஆயிரங்கணக்கான மக்கள் காந்தியடிகளுடன் சேர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டனர். இது உரிமைக்கும் வலிமைக்கும் உள்ள போராட்டம் என்று அழைத்தார். தண்டி கடற்கரையில் உள்ள உப்புக்கல்லை எடுத்து இந்த உப்புக்கல்லை கொண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தினை ஆட்டப் போகின்றேன் என்று உறுதிமொழி எடுத்தமை குறிப்பிடத்தக்கது.  

தண்டியில் கடல் நீரிலிருந்த உப்பு காய்ச்சி விநியோகித்து ஏப்ரல் 6ஆம் நாள் உப்புச் சட்டங்களை மீறினார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது. மட்டுமல்லாமல் போராட்டம் தீவிரம் அடைய காந்தி உட்பட பல்லாயிரங்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்பு சரோஜினி நாயுடு தலைமையேற்று அவரும் தர்சனா உப்புமண்டி முற்றுகையில் கைது செய்யப்பட்டார்.  ஆனால் போராட்டம் திவிரமடைவதைக் கண்ட ஆங்கில அரசு வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.  தமிழ்நாட்டில் சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் திருச்சியிலிருந்து தொண்டர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு தஞ்சாவூர் கடற்கரைப்பகுதியில் வேதாரண்யத்தில் உப்பு சட்டங்களை மீறி உப்புக் காய்ச்சினார். டி.பிரகாசமும், கே. நாகெஸ்வராவும் மெரினா கடற்கரையில் உப்பு சத்தியாகிரகம் செய்தனர். “உப்பு சத்தியாகிரகம்”  என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம். 

சட்ட மறுப்பு இயக்கத்தை ஆங்கில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இந்திய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஆங்கில அரசு ஈடுபட்டது. இதனால் 1930 ஆம் ஆண்டு லண்டன் நகரில் முதல்; வட்டமேசை மாநாட்டை கூட்டியது. 1930 நவம்பர் 12 முதல் 1931 ஜனவரி 19 வரை முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. 89 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக் டொனால்டு தலைமை தாங்கினார். சட்டமறுப்பு இயக்கம் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது. 

முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே பிரிட்டிஷ் அரசு இர்வின் பிரபுவை காந்திஜியை சந்திக்க இந்தியாவிற்கு அனுப்பியது. இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்முடிவில் 1931 ஆம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தின்படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இதற்கு கைமாறாக ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுதலை செய்வதென்றும் உப்புச்சட்டங்களை திரும்பபெறுவது என்றும் ஒப்புக்கொண்டது.பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க இந்த ஒப்பந்தம் வகைசெய்யவில்லை. என்றும் போராட்டத்தின் போது நடந்த போரில் இராணுவ அத்துமீறல்கள் பற்றி எதுவும் கூறாததால் ஒப்பந்தம் பற்றி மக்களிடையேயும் தலைவர்களிடமும் எதிர்ப்பு இருந்தது.

இரண்டாம் வட்டமேசை மாநாடு இலண்டனில் 1931 இல் நடைபெற்றது. காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் படி காந்தியடிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சினை போன்றவற்றிக்கு எந்ததீர்வும் இந்த மாநாட்டில் எட்டப்படவில்லை. எனவே காந்தியடிகள் பெருத்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார். காந்திஜி நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. இதனால் சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது. 

இர்வீன் பிரபுவுக்கு பின்பு வைரஸ்ராயாக வந்த வெல்லிங்டன் பிரபு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை கைவிட்டார். அடக்குமுறையை கையாண்டார். வரிகொடாக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நேரு, ஷெர்வானி, போன்றோரும் வங்காளத்தில் சுபாஸ்சந்திரபோசும் அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இவை யாவும் காந்தி லண்டனில் இருந்தபோது நடைபெற்றவையாகும். காந்தி இந்தியா திரும்பியவுடன் வைஸ்ராவை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஆகையால் காந்தி மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தை 1932அம் ஆண்ட ஜனவரி 3ம் நாள் துவங்கினார். காந்தி ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

1932 இல் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இங்கிலாந்து பிரதமர் “இராம்சே-மெக்டொனால்டு” வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டார். 

இந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தை தாழ்த்தப்பட்ட இனமக்களின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் வரவேற்றார். காந்தி இதனை ஏற்க மறுத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் துவங்கினார்.  மேற்கொண்டார். 1932 ஆம் ஆண்டு அம்பேத்காருடன் ஏற்பட்ட பூனா உடன்படிக்கைக்குப்பின் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.  இவ்வுடன்படிக்கையின் படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித்தொகுதி ஒதுக்கீடு கைவிடப்பட்டது. சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அதிக அளவு எண்ணிக்கையில் இடங்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களை தனியாக பிரிக்கும் ஆங்கிலேயரின் சூழ்ச்சி தோல்வியடைந்தது.

1932 ஆம் ஆண்டு நவபர் 17 முதல் டிசம்பர் 24 வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் அதில் கலந்துகொள்ளவில்லை. மூன்று வட்டமேசை மாநாடு பற்றிய வெள்ளை அறிக்கையை 1933 மார்ச் மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இதன் அடிப்படையிலேயே 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கசட்டம் இயற்றப்பட்டது. காந்தி 1934 மே 20ஆம் நாள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்திவிட்டர்ர.

1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்நாள் இரண்டாம் உலகப்போர் மூண்டது. இந்திய வைஸ்ராய் லின்லித் பிரபு இந்திய தலைவர்களை கலந்து ஆலோசனை செய்யாமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினார். இந்த வெள்ளை அறிக்கையில் திருப்தியடையாமல் காங்கிரஸ் ஆட்சிசெய்த அனைத்து மாநிலங்களிலும் பதவி விலகியது. மேலும் போர் நடவடிக்கைகளை எதிர்த்தது. காங்கிரஸ் அரசு பதவி விலகிய தினத்தினை முஸ்லீம் லிக் விடிவு நாள் ஆக கொண்டாடியது.

லின்லித்கோ பிரபு 1940 ஆம் ஆண்டு 8ஆம் நாள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுவே ஆகஸ்டுகொடை எனப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் தியாகிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் சட்டமறியல் இயக்கத்தில் ஈடுபட அனுமதிக்கப்பெற்றனர். இதுவே “தனிநபர் சத்தியாகிரகம்” எனப்பட்டது. 

1940ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தை காந்தி தொடங்கிவைத்தார். முதல் தனிநபர் சத்தியாகிரகியாக வினோபாவிற்கும் அவரை தொடர்ந்து ஜவஹரலால் நேரு, வல்லபாய் பட்டேலுக்கும் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். 

இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் இங்கிலாந்திற்கு எதிராக ஈடுபட்டது. இங்கிலாந்து போரில் வெற்றி பெற, இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே காங்கிரசின் ஒத்துழைப்பைப் பெறவும் இந்திய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், 1942 ஆம் ஆண்டு சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. இக்குழு “கிரிப்ஸ் தூதுக்குழு” என்று அழைக்கப்பட்டது. இக்குழு இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு உதவிகரமாய் இந்தியா இருக்கவேண்டும் என அறிவித்தது. போருக்குப் பின்னர் இந்தியர்களுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் எனவும், இந்திய அரசியல் அமைப்பினை வரைவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை எனக் குறிப்பிட்டார். எனவே கிரிப்ஸ் தூதுக்குழு தோல்வியடைந்தது. 

கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி, காந்தியடிகளின் போக்கில் மாற்றங்களை கொண்ட வந்தது. அதுவரை அவர் பின்பற்றி வந்த அகிம்சை வழிகள் எத்தகைய பலனையும் அளிக்கவில்லை. என்பதை உணர்ந்தார். எனவே அவர் ஆங்கிலேயர் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவேண்டுமெனக் கோரினார். 

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வெற்றி மேல் வெற்றிகளை குவித்துக்கொண்டே சென்றது. எனவே ஆங்கிலேயர்கள் இனி இந்தியாவில் இருந்தால் ஜப்பான் இந்தியா மீது படையெடுக்கக் கூடும் என காங்கிரஸ் தலைவவர்கள் உணர்ந்தனர். 

இதனால் 1942 ஆம் ஆண்டு 8ஆம் நாள் காங்கிரஸின் செயற்குழு, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. மும்பையில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் காந்தியடிகள் ஆற்றிய மறக்க முடியாத சொற்பொழிவைத் தொடர்ந்து அத்தீர்மானம் நிறைவேறியது. இதன்படி ஆங்கில அரசுக்கு எதிராக “ஆகஸ்ட் புரட்சி’’ என அழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை காந்தி தொடக்கி வைத்தார். 1942. ஆகஸ்ட் 08 பம்பாய் மாநாட்டின் போது பேசிய காந்தி “செய் அல்லது செத்து மடி” என்று வீரம் செறிந்த முழக்கத்தை எழுப்பினார். இவ்முழக்கம் நாட்டின் சுதந்திர வேள்வினை கொழுந்து விட்டு எறிந்தது. இவ்விடுதலை போராட்டம் பொதுமக்கள் போராட்டமாக மாற்றும் வல்லமையை தந்தது இவ்வெள்ளையனே வெளியேறு இயக்கம.

 முழுச்சுதந்திரம் தவிர வேறு எதனாலும் நான் திருப்தி அடையமாட்டேன். நாம் அதற்காக வாழ்வோம் அல்லது வீழ்வோம். இந்தியாவை விடுதலை பெறச்செய்வோம். அல்லது அதற்காக செத்து மடிவோம் என்றார். உண்மையில் அவரது பேச்சு மிகப்பெரிய அளவிலான ஆயுதமற்ற புரட்சிக்கு எழுச்சி குரலாக அமைந்தது. காந்திஜியின் மனஉறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. அதற்கு அடுத்தநாளே காந்திஜி, நேருஜி. அபுல் கலாம் ஆசாத் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் நாடெங்கும் வன்முறைகள் வெடித்தன. 

இரண்டாம் உலகபோர் 1945 ஆம் ஆண்டு முடிவடைந்தது. போருக்குப் பின் இங்கிலாந்தில் தொழிற்கட்சி வெற்றி பெற்று “கிளமண்ட் அட்லி” தலைமையில் ஆட்சி அமைத்தது. தொழிற்கட்சியின் தலைவர் அட்லி இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். அவர் இங்கிலாந்தின் பிரதமரானார். அவர் காங்கிரஸின் மீது ஆங்கில அரசு விதித்திருந்த தடை உத்தரவுகளையும் விலக்கினார். அட்லி இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க ஒர் குழுவை அமைத்தார். அக்குழு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க பரிந்துரைத்தது. இதன்படி காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்திய சுதந்திர பிரகடனம் அரங்கேறியது. ஆனால் இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.

காந்தியடிகள் இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர். இந்திய விடுதலை போராட்டத்திற்கு அச்சாணியாக திகழ்ந்தவர். காந்தியின் தலைமையில் விடுதலை உணர்வுடைய நாட்டுமக்கள் இந்தியாவின் விடுதலைக்காக போராடினர். இந்திய விடுதலை போராட்டத்தினர் காந்திஜின் அகிம்சை நெறியைப் பின்பற்றி விடுதலை வேள்வி நடத்தினர். போரில் உயிர்பலி ஏற்படுவது இயல்பு. போரில் ஆயுதங்களை பயன்படுத்துவது போர் தர்மம். ஆனால் ஆயுதப்போரைக்காந்தி வெறுத்தார். சத்திய நெறியில் அகிம்சை அடிப்படையில் போரிடுவதை விரும்பியவர் காந்தி. ஆங்கிலேயர்கள் தாங்களாகவே இந்தியாவை விட்டுவெளியேற காந்தியின் அகிம்சை போரே காரணமாகும்.

அடிமை விலங்கு பூட்டியவர் ஆங்கிலேயர். அவர்களிடமிருந்து விடுதலை அடையக் காந்தியின் அறநெறியே காரணமாயிருந்தது. காந்தி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைபப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடாத்தினர்.

சத்தியசோதனை என்கிற தன்னுடைய சுயசரிதத்தை 1923ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார். உலக அளவில் வெளியான சுயசரிதைகளுள் காந்தியின் சத்தியசோதனைக்கு முதன்மையான இடம் உண்டு. மொழிவாரி மாகாண பிரிவினைக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை உருவாக்கியவர் காந்தி.

அகிம்சை எனும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மாகாந்தி அவர்கள் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே புதுடில்லியில் “நாதுராம் கொட்சே” என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஆயுள் முழுக்க அகிம்சையை போதித்த காந்தி சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலுக்கு இரையானார். இந்தியாவுக்குச் சுதந்திரத்துக்காக 32 ஆண்டுகள் போராடிய காந்தி இந்திய சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் சோகம் நிறைந்தவை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாமனிதர்களும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் சென்ற அரசியல் தலைவர்களும் சமூகத்தின் ஒப்பற்ற மேம்பாட்டிற்காக சாதனை புரிந்தவர்களும் கொடியவர்களின் கொலை வெறிக்கு ஆளாகி உயிர்த்துறந்தனர். அந்தவகையில் காந்தி எனும் மாபெரும் அகிம்சை சக்தியும் உயிர்துறந்தது. அகிம்சையை கற்றுத் தந்து அதனால் சுதந்திரமும் பெற்று  தந்த அண்ணல் வாழ்ந்த புண்ணிய பூமியில் வஞ்சகனது முதல் குண்டுக்கு அண்ணலே பலியானார். 

தென்னாபிரிக்காவில் எந்த ரயில் நிலையத்தில் காந்தி தூக்கி எறியப்பட்டாரோ அங்கு காந்திக்கு  தற்போதும் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடாத்தி விடுதலைக்கு காரணமாக இருந்ததால் இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் திகதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தி. ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்ப சத்தியாக்கிரகம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்தி நடத்தி துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளைக்காரர்களை திகை;க்கச் செய்தவர். பாரத நாட்டிற்காகவே தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலகசரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும். “என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி” என்பது தான் காந்தி மக்களுக்குச் சொன்ன அதி உன்னதமான தத்துவம்.




1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...