Sunday 28 June 2020

வன்னியின் தொன்மைகள் வெளிக்கொணரப்படாதது ஏன்?

                                           


                            எல்லை வடக்கில் எழில்வாழ் பரவகடல்
                            பல்லோர் புகழருவி தெற்கெல்லை – நல்லதிரு
                            கோணலை கீழ்பால் கேதீச்சரம் மேற்கில்
                            மானத் திகழ் வன்னி நாடு.


எனும் பழம் பாடலில் வன்னி நாட்டின் எல்லைகள் தெளிவாகப் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்னி என்பது காட்டைக் குறிக்கும் சொல் என்றும் வனம் என்றும் காட்டில் வாழ்பவர்கள் வன்னியர் என்றும் சிலர் மேலோட்டமாகப் பொருள் கொள்ளுவார். வன்னி என்றால் நெருப்பு என்று பொருள் கொண்டு வன்னியர் அக்கினி குலத்தவர் என்றும் கூறுவர்.

ஒரு சமூகம் தமது நிகழ்கால இருப்பின் நியாயங்களை நிறுவதற்கும் எதிர்;கால இருப்புக்களின் வழிமுறைகளை வகுத்துக்கொள்வதற்கும் தனது கடந்தகால வரலாற்று அம்சங்களை கண்டுகொள்வது அவசியமாகும். இந்தவகையில் வினாவுக்குச் செல்லும் முன்னர் வன்னியினை பற்றி சிறிது அறிமுகம் செய்து கொள்ளுவோம்.

வன்னி நாடு, வன்னியர்கள் பற்றி ஒர் சில குறிப்புக்களே எமக்கு கிடைத்துள்ளன. இவையும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் பதிவுகளில் இருந்தே பெறப்படுகின்றன. இவைகளை உறுதிபடுத்தக்கூடிய சாசனச்சான்றுகள் மிகச்சிலவே உள்ளன. ஈழத்தமிழர்களது வரலாறு பூரணமடைய வேண்டுமானால் வன்னியின் வரலாறு பூரணமாக ஆராயப்படல் வேண்டும். இது வரலாற்றறிஞர்களின் கடமையாகும்.

வன்னி எனக்குறிப்பிடுவது வவுனியா , முல்லைதீவு, கிளிநொச்சி , மன்னார், பரந்தன் ஆகிய பிரதேசங்களைக் குறிக்கின்றன. வன்னியர்கள் இலங்கையில் குடியேறிய காலம் கி.மு50ஆம் ஆண்டு வரையிலேன வையாபாடல் வாயிலாகக் கொள்ளக் கிடக்கின்றது. வையாபாடல் ஆய்வுரையில் திரு.க.செ.நடராஜா அவர், மதுராபுரியில் இருந்து 60 வன்னியர் மாருதப்பிரவையின் மகன் சிங்க மன்னன் (வாலசிங்கன், வரராச சிங்கன்) காலத்தில் அவன் மணவினை சம்மந்தமாக இலங்கைக்கு வந்தார்கள். முதல் வந்த அவ்அறுபது வன்னியருள் ஓர் வன்னியன் கண்டி நகரில் திஸ (DISAVA) ஆக இருந்தான். இவனே சிங்கள மக்களுள் வன்னிய குலம் வளர்வதற்கு காரணமாயிருந்தான்” என்று குறிப்பிடுகின்றார்.

வன்னிக்கு வெளியேயும் வன்னியசிங்கம், வன்னியகுலம், வன்னியகுலசிங்கம் முதலான பெயர்களும் சிங்கள மக்களிடத்து வன்னியாராய்ச்சி முதலான பெயர்களும் காணப்படுவது வன்னியர்களின் பெருமைக்கு இன்றும் சான்றாக விளங்குகின்றது.

உலகின் இறுதித்தனித்தமிழ் இராச்சியம் வன்னி இராச்சியம் என்பதை கற்சிலை மடு என்ற இடத்தில் பண்டாரவன்னியனைத் வொன்றிபேக் என்ற பிரித்தானிய தளபதி தோற்கடித்தாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் நிரூபிக்கின்றது. அந்தவகையில் வன்னிராச்சியம் அடங்காபற்று என்ற பெயரிலே அழைக்கப்பட்டு வந்தது. சுதந்திரத் தனித்தமிழ் இராச்சியமான அடங்காப்பற்றை ஆட்சிசெய்த மன்னர்களுக்குள்ளே கயிலாய வன்னியன், பண்டாரவன்னியன் ஆகியோர் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கினார்.                                                                                                                                                                                                                                                                  
வன்னியில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் மிகுந்த நாகரிகத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் தமிழர்கள் என்று பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

பனங்காமம் என்னும் இடமே வன்னியின் பிரதான தலைநகராக இருந்தது. வன்னியின் பிரதான நகரங்களில் ஒன்றாக வவுனிக்குளம் இருந்தது. சிவனுக்கும் விஸ்ணுவுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பல கட்டிடங்கள் இவ்விடம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.லூயிஸ் அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார். இந்துசமய புராதன ஆலயங்களும் வன்னிக் குடியிருப்பூக்கள் அதிகம் இருந்த பகுதிகளாக இராசேந்திரன் குளம், மகாகச்சக்கொடி, சின்னபூவரசங்குளம் ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ரூபன்மடு, ஓமந்தை, தண்ணிமுறிப்பு, புதுமுறிப்பு, பண்டாரகுளம் என்பனவும் கலப்பில்லாத வன்னி பெரும் நகர்கள். வன்னியில் அமைந்துள்ள கும்பகர்ணன் மலையில் சில தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வவுனியாவில் நூற்றுக்கணக்கான செப்பு நாணயங்கள் 2014ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல கைவிடப்பட்ட குளங்களும் கால்வாய்களும் உள்ளன. அவற்றில் தமிழ் சொல்லின் பழமையை உணர்த்தும் குறிஞ்சாக்குளத்தேக்கம், பேராறு என்பன அவற்றில் முக்கியத்துவமானது.

சரித்திர ஆசிரியர் திரு. லூயிஸ் அபிப்பிராயத்தின்படி வன்னியில் ஆதிக்கால குடியிருப்புக்களில் ஒன்றாக வவுனியா மகாகச்சக்கொடி இருந்தது. வவுனியா அன்று பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. வன்னியின் இடப்பெயர்கள் மடு , கேணி, ஓடைவில், குளம் என்ற பெயர்களுடன் முடிவடைவது இதன் தனித்தமிழ் தன்மையைக் குறிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1888ஆம் ஆண்டில் வெள்ளி இலட்சிணைகள் கண்டெடுக்கப்பட்டன. (சூரியன், மரம், எருது, ஆர்ச் வடிவில் அமைந்த உருவங்கள்) இவற்றினை ஆராயந்த வணக்கத்திற்குரிய பிதாகௌாஸ் இப்பொருட்கள் சிந்துவெளியில் மொகஞ்சதாரோ ஹெரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஒத்ததாக இருந்ததாக குறிப்பிடுகின்றார்.

வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இப்பிரதேசம் நாகரிகம் வாய்ந்த மக்கட் கூட்டத்தினரின் குடியிருப்புக்களாக விளங்கியுள்ளன என்பதற்கு 1985ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி குஞ்சுப்பரந்தனில் கண்டு அகழ்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி சான்றாகியது. வன்னிநாட்டில் முதன்முதல் கண்டறியப்பட்ட தாழி இதுவே. திராவிட நாகரிகம் இங்கெல்லாம் பரவிநிலை கொண்டிருந்தது என்பதற்கு முறையான ஆதாரமாக இத்தாழி அமைகின்றது.

இவ்வாறு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் வரலாற்றில் வட இலங்கையில் பரந்த விரிந்திருக்கும் வன்னிப் பிரதேசத்தின் வரலாறு முக்கிய இடத்தை வகிக்கின்றது. “வன்னி பிரதேசம் மிகப்பழைமையான வரலாறுள்ள பிரதேசம், கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இங்கு சிற்றரசுகள் தோன்றியிருந்தன. அனுராதபுரம், பொலன்னறுவை அரசுகளின் எழுச்சியினால் இச்சிற்றரசுகள் வீழ்ச்சியடைந்தன. மீண்டும் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வன்னிச்சிற்றரசுகள் தோற்றம் பெற்றன” என கலாநிதி கா. இந்திரபாலா குறிப்பிடுகின்றார். இனி வினாவிற்குச் செல்வோம்.

பரந்த அளவில் பலரும் ஈடுபடமுடியாத துறையாக விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஈடுபட்டிருப்பது தொல்லியல் துறையில் உள்ள கடினத்தையும் சிரமத்தையும் புலப்படுத்துகின்றது. இது ஒரு நுட்பமான ஆய்வுக்கலை, வரலாற்று உண்மைகளை துருவித்துருவி தேடி ஆய்வுசெய்வதற்கு நுண்புலமும் நீடித்த பொறுமையும் தேவை. உண்மைகளை உள்ளவாறு கண்டுகொள்ள பக்கஞ்சாரா நடுநிலைமையும் வேண்டும். ஆனால் நமது நாட்டைப் பொறுத்த அளவில் பல மட்டங்களிலும் ஊடுருவியுள்ள இனவாதம் தொல்லியல் ஆய்வையும் விட்டுவைக்கவில்லை. கடந்தகாலங்களில் இத்துறையில் குறுகிய இனவாத நோக்கோடு ஈடுபட்ட சிலர் உண்மைகளைத் திரித்தும் மாற்றியும் மறுத்தும் வந்துள்ளமை துரதிட வசமானது. அண்மைக்கால ஆய்வுகள் அவற்றை இனங்காட்டுவதோடு நிராகரித்தும் வருகின்றன. வன்னிபிரதேசம் தொல்லியல் துறையில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களாக காணப்படுகிறது. இவ்வன்னி பிரதேசம் பற்றி ஆங்கிலேயர் வெளியிட்ட நூல்களில் தான் ஓரளவு இதன் பழைமையைக் கூறுகின்றன. இவற்றுள் 

  • லூயிஸ் 1895இல் வன்னி பற்றி எழுதிய நூலும் (LEWIS J.P. 1895)
  •  போக் என்பவர் எழுதிய 1888இல் மன்னார் பற்றி எழுதிய நூலும் குறிப்பிடத்தக்கவை.
அத்துடன் நம்மவர் மத்தியில் அருகிக் காணப்படும் வரலாற்றுப் பாரம்பரிய உணர்வும் இத்தகைய தொல்லியல் சான்றுகள் அருகிக் காணப்படுவதற்கான காரணிகளில் பிரதானமானவை என்பதை மறுப்பதிற்கில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் வன்னியைப் பொறுத்தவரை தமிழர்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களது வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பழம் பெருமைகளை தேட வேண்டிய சூழ்நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

வன்னியின் வரலாறுகள் இன்னமும் புரியாத புதிராகவே இருப்பினும் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் பல தொல்லியல் சின்னங்கள் எமக்கு வன்னியின் தொன்மையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இதனை முறையாக எவரும் ஆராயப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். வன்னி எவ்வளவு பழமைவாய்ந்தது, அதன் ஆரம்பம் என்ன? என்பது தொடர்பில் எவரும் விடை தேட முன்வரவில்லை.

ஆனால் வன்னி தொடர்பாக சில நூல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. அடங்காப்பற்று வன்னி வரலாறு, வன்னியர், பண்டாரவன்னியன் வரலாறு போன்ற நூல்கள் வெளிவந்திருப்பினும் வன்னியின் தொன்மை தொடர்பில் எவ்வித நூல்களும் வெளிவரவில்லை. ஈழத்தை ஆராய்ந்து நூல்களை வெளியிட்ட வரலாற்று ஆராய்வாளர்கள் வன்னியின் தொன்மையை ஆராயாமல் விட்டதும், வன்னயினைப் பற்றி அறிய முற்படாததம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் வன்னியின் வரலாறு அதன் தொன்மை போன்றவற்றினை ஆராய முயற்சி செய்திருந்தால் வன்னியின் தொன்மையினை அறிந்துக்கொள்ளலாம் அல்லவா?

ஆங்கிலேயர் இலங்கை வந்தபோது யாழ்ப்பாணம், கண்டி, கோட்டை ஆகிய மூன்று இராச்சியங்கள் காணப்பட்டதுடன் கொழும்பு , திருகோணமலை துறைமுகங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றினை கைப்பற்றுவதற்கு ஆர்வம் காட்டி வெற்றியும் பெற்றனர். இதனால் இப்பிரதேசங்கள் இன்றும் பிரசித்துப் பெற்றவையாக இருக்கின்றன. ஆனால் வன்னியைக் கைப்பற்ற வேண்டும் என்பதோ பண்டாரவன்னியனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதோ அவர்களின் இலக்காக இருக்கவில்லை. ஆனால் வன்னி என்ற சுயஇராச்சியம் இலங்கையில் இருப்பதை ஆங்கிலேயர் விரும்பவில்லை. எனவேதான் வன்னியை கைப்பற்ற முனைந்தனர். இதனால் வன்னியின் சில பகுதிகள் யாரும் அறியாததாய் விளங்கியது.

அதுமட்டுமல்ல 1796 – 1948 வரையான ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னியின் தொன்மைகளை ஆங்கிலேயர் அழித்திருக்கலாம் அல்லது வன்னிமக்கள் அதனை பேணி காக்காமல் விட்டிருக்கலாம். எவ்வாறுதான் இருந்தாலும் வன்னியின் தொன்மைக்கு சான்றுகளாய் இருக்கும் கோயில்கள், சுடுமண்கிணறுகள், கல்வெட்டுக்கள் போன்றன வன்னியின் தொன்மையைக் எடுத்தியம்பவே செய்கின்றன.

1948ஆம் ஆண்டுவரை காணப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னியின் தொன்மை தொடர்பான ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் எதவும் நடைபெறவில்லை. அதற்குப்பின் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்னயின் தொன்மையை ஆராயந்தால் தமிழர்கள் பற்றிய வரலாறு ஆதாரங்களுடன் நிரூபிக்கபட்டு விடும் என்ற அச்சத்தினால் அவற்றை மூடிமறைத்திருக்கலாம். அதனைவிட இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு யுத்தத்த்pனால் மேலும் வன்னியின் தொன்மைகளை பறைசாற்றும் கட்டிடங்கள், கல்வெட்டுக்கள், தொல்லியல் இடங்கள் பல அழிவுற்றிருக்கலாம்.

பாளி இலக்கியங்கள் கலிங்கமாகனுடைய படைகள் கோட்டைகள் இருந்த இடங்களாக கூறுவனவற்றுள் பெரும்பாலானவை வன்னிபிராந்தியத்துள் உள்ளடங்குகின்றன. இவ்விடங்களையே பி;ன்னர் சாவகனும் தனது பாதுகாப்பான இடங்களாக பயன்படுத்தியுள்ளான். இலங்கை வரலாற்றாய்வில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத பிராந்தியங்களில் இதுவும் ஒன்று. இதற்கு இவற்றின் பெரும்பகுதி காடுகளாகவும் மக்கள் நடமாற்றமற்ற பகுதிகளாகவும் இருந்துவந்தமை ஒரு காரணமாகும்.

13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் வடஇலங்கையில் தமிழரசு ஒன்று தோன்றியதெனக் கூறிய பேராசிரியர் இந்திரபாலா பிற்காலத்தில் வன்னிப்பிராந்தியத்தில் உள்ள முத்தையன்கட்டு, மல்லாவி போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட அழிபாடுகளைப் பார்த்து அவை பழைய இராசதானியின் சிதைவுகளா? அல்லது சோழர்காலத் தலைநகரங்களில் ஒன்றா? என்ற கேள்வியை எழுப்பினார். இக்கூற்றுக்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்றுப் பழமையை வன்னியிலும் ஆராயப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

இலங்கையில் 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வரலாற்று பாடநூல்களில் வன்னியினையும் வன்னியின் தமிழரசுகளைப் பற்றியும் பண்டாரவன்னியன், கயிலாய வன்னியன் போன்ற மன்னர்களின் வரலாறுகள் இணைக்கப்பட்டபோதிலும் தற்போதைய வரலாற்று பாடநூல்களில் வன்னி பற்றிய வரலாறு நீக்கப்பட்டிருப்பது ஏன்? இதனாலேயே தற்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வன்னி என்ற ஓர் இராச்சியம் இருந்தது பற்றியும் அங்கு வீரத்தமிழர்கள் ஆட்சி செய்தமை மற்றும் அதன் தொன்மை பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.

வன்னியின் தொன்மைகள் மறைக்கப்பட காரணம் என்ன? இதற்கு பாரபட்சமற்ற நேர்மையான திரிவுபடுத்தப்படாத தொல்லியல் ஆய்வுகள் தேவை.  அகழ்வாய்வுகளின் பெறுபேறுகள் பாரபட்சமற்ற முறையில் அணுகப்படல் வேண்டும். நடுநிலை நின்று இவற்றை ஆராய வேண்டும். இது சாத்தியமாகுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



சுரேஸ்குமார் சஞ்சுதா
வவுனியா

Monday 22 June 2020

இலங்கை - ஜப்பான் பரஸ்பர நல்லுறவு

                
சர்வதேச உறவுகள் என்பது குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது அரசாங்கம் சர்வதேச ரீதியில் இதர நாடுகளுடன் தொடர்புகளைப்  பேணிக்கொள்வதாகும். அந்த வகையில் இச்சர்வதேச தொடர்பானது வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலே அணுகப்படல்வேண்டும். இவ்சர்வதேச தொடர்பானது எல்லா நாடுகளிலும் ஒரே விதமாக தீர்மானிக்கப்படுவதாக அமையாது. அந்நாட்டின் சூழ்நிலைகளுக்கேற்ப சர்வதேச தொடர்பானது பலப்படுத்தப்படும்.

  மரபுரீதீயான காலங்களில் சர்வதேச தொடர்பானது தனித்துவமான பண்புகள் பேணப்பட்டு வந்தன. அதன் பின்பு இச்சர்வதேச தொடர்பானது குறித்த சில விடயங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதுடன் ஆளும் உயர்குழர்மைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் மாத்திரமே கையாளப்பட்டு வந்தது. இரத்த மற்றும் திருமணத் தொடர்புகளின் மூலம் ஓர் அரசிலுள்ள ஆளும் உயர்குழாமினர் மற்றைய ஆளும் உயர்குழாமினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். அவர்களது சமூகம் மற்றும் அரசியல் நோக்குகள் ஒத்தனவாகவே காணப்பட்டன.

மேலும் ஐனநாயகத்தின் அபிவிருத்தி அல்லது எழுச்சி பொதுமக்களை சர்வதேச தொடர்புகளின் மிகுந்த ஆர்வம் கொள்ளச் செய்தது. சர்வதேச போக்குவரத்து மற்றும் தொடர்பாடலில் ஏற்பட்ட புரட்சி உலகின் ஏனைய பாகங்களில் நிகழும் அபிவிருத்தி தொடர்பாக மக்கள் அறிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பொருளாதார சமூக கல்வி மற்றும் கலாசார விவகாரங்களில் அரசுகளுடையான பரஸ்பர தங்கியிருப்புக்கள் அதிகரிக்கத்தொடங்கின.

 பெரும்பாலான நாடுகள் ஸ்திரமான சர்வதேச முறைமை ஒன்று இருந்தால் மாத்திரமே ஏனைய நாடுகளுடன் அமைதிபூர்வமான உறவினைக் கட்டி வளர்க்க முடியும் என நம்புகின்றன. சர்வதேச முறைமையையும் அதனுள் காணப்படும் பல்வேறுப்பட்ட உரிமைகளையும் சிறப்பு சலுகைகளையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதே அநேக நாடுகளின் முக்கிய பணியாகவுள்ளன. அத்துடன் போர்ப்பிரகடனம், சமாதானத்தீர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடல். உதவி வழங்கல் அல்லது பெற்றுக்கொள்ளுதல், அரசொன்றை அங்கீகரித்தல். இராஐதந்திர உறவுகளை நிறுவுதல். மற்றும் சமரச முயற்சிகள் போன்ற வெளிநாட்டுத் சர்வதேச தொடர்புகள் வெளிநாட்டுக்கொள்கைகளுக்கமையவே தீர்மானிக்கப்படும். இலங்கை நாட்டின் சர்தேச தொடர்புகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் உள்வாரியான காரணிகளாக தேசிய பாதுகாப்பு, தேசிய நலன், மக்கள் தொகை, இனங்களின் சேர்க்கை, நிலப்பரப்பு. அரசாங்கம் அல்லது அரசாங்கத்தின் கொள்கை, பொருளாதார வல்லமை, அரசியல் நிறுவனங்கள். தேசிய கௌரவம், அரசியல் கலாசாரம், மரபுகள். இராணுவம். தேசிய இயல்பு. உள்நாட்டு சூழ்நிலை என்பன அடங்கும்.  வெளிவாரியான காரணிகளில் சர்வதேச வர்த்தகம், சர்வதேச அரசியல், சர்வதேச- பிராந்திய நிறுவனங்கள். உலக ஒருங்கிணைப்பு, சர்வதேச சூழ்நிலை என்பன அடங்கும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக்கட்சி ஐனநாயக அரசு முறையையும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையாகக் கொண்டது. வெளிவிவகாரத்திலும் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிப்பதாக உரிமை கொண்டாடினாலும் பெருமளவுக்கு நடைமறையில் முதலாளித்துவ உலகத்துக்குச் சார்பானதொரு போக்கையே கைக்கொண்டு வந்துள்ளது. இதே போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐனநாயக அரசு முறையையும் சோசலிய பொருளாதார முறையையும் கொள்கையாகக் கொண்டது. இக்கட்சி தன்னை ஒரு தேசியவாதக்கட்சியாக கட்சியாகக் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் இன்று இக்கட்சி கலப்பு பொருளாதார முறையையே பெரிதும் விரும்புவதாகக் தெரிகிறது. குறிப்பாக இவ்விரு பிரதான கட்சிகளில் ஆட்சியமைக்கும் ஏதோவொரு கட்சி அதன் கொள்கையினை அடியொற்றியே தனது வெளிநாட்டுக் கொள்கையையும் தீர்மானித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் 1955 வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பர்மா (மியன்மார்), பெல்ஐியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், பின்லாந்து, ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா,இத்தாலி, ஐப்பான், மலாயா, நெதர்லாந்து, நோர்வே, பாகிஸ்தான், போர்த்துக்கல். சுவீடன், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய 21 நாடுகளுடன் இராஐதந்திர உறவுகளைக்; கொண்டிருந்தது. எனினும் 9 நாடுகளில் மாத்திரமே தூதரங்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனாநாயக்க அவர்களினால் ஜப்பானிய சமாதான உடன்படிக்கை மீது இறுதி உரை நிகழ்த்தப்பட்டது. அவர் 1952 பெப்ரவரி 29ஆம் திகதி அன்று பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
   “நாம் இந்த சமாதான உடன்படிக்கையின் ஒரு தரப்பினராக இருப்பதில் எம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். இதுவே ஜப்பான் தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கான முதலாவது வாய்ப்பாகும். நாம் கோபத்தை வளர்த்துக் கொண்டு ஜப்பானிய மக்களை கீழ் நிலையில் வைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்யலாகாது.”

இந்த உரை நிகழ்த்தி 22 நாட்களுக்குப் பின் அவர் இறந்துவிட்டார். அவரது இறப்பிற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர்  இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே இராஜதந்திரத்தொடர்புகளை நிறுவியதன் மூலம் அவருடைய கொள்கைகளைப் பூர்த்தி செய்துள்ளது.

அந்தவகையில் இலங்கை நிறைவேற்று அதிகாரமுடைய முதல் ஐனாதிபதியான ஐே.ஆர்.ஜெயவர்த்தனாவினுடைய காலத்திலே ஐப்பானுடன் தொடர்பு பலமுடையதாக்கப்பட்டது. 

 இரண்டாம் உலகயுத்தில் ஐேர்மன், இத்தாலி. ஐப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏனைய மேற்கத்தேய நாடுகளுக்கும் இடையில் கடும்போர் நிகழ்ந்து வந்தது. இந்தப்போரில் கிழக்காசிய நாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக ஐப்பான் கைப்பற்றி வந்தது. பல நாடுகளின் மீது போர் தொடர்ந்தும் இருந்தது. 1941 இல் அமெரிக்காவையும் தாக்கியது. ஐரோப்பாவில் ஐேர்மனை வீழ்த்துவதில் ரஷ்யா பெரும்பங்கு வகித்தது. அது போல ஐப்பானில் 1945 ஓகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமரிக்கா அணுகுண்டை போட்டு பாரிய மனிதப்பேரழிவை நடத்தியதுடன் மட்டுமன்றி அந்த நாட்டை பெரும் சேதத்துக்கு உள்ளாக்கி சரணடைய வைத்தது. அத்தோடு இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.

ஜப்பான் இராணுவம் கலைக்கப்பட்டது. ஜப்பானை குற்றம் சாட்டி அமெரிக்காவின் நிரந்தர இராணுவத்தளம் அமைக்கப்பட்டது. ஆசியாவிலே உள்ள அமரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத்தளம் ஒக்கினோவில் தான் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாகக் நிறுத்தத்தை கொணர்வதற்காக 08.09.1951 அன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் 48 நாடுகள் சமாதான மாநாடொன்றை கூட்டினர். மாநாடு மண்டபத்துக்கு வெளியில் 51 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஐப்பானின் கொடி மட்டும் அங்கு காணப்படவில்லை. ஆனால் ஜப்பானை வரவழைத்திருந்தனர். அங்கு உரையாற்றிய அமெரிக்கா ஐனாதிபதி ட்ரூமன் “ஜப்பான் இதற்கு மேல் ஒரு இராணுவ அரசுமல்ல இரகசிய சமூகமும் அல்ல. அது புனருத்தாபனம் செய்யப்பட்ட நாடு. யுத்த உரிமையை கைவிட்டிருக்கிற அந்த நாட்டுக்கு பாதுகாப்பளிக்கும் கடமை ஐ.நாவுக்கு உண்டு என்றார். அந்த மாநாட்டின் இரண்டாவது நாள் அனைத்து நாடுகளும் கையெழுத்திடுவதற்கான சமாதான ஒப்பந்தம் தயாராகியிருந்தது. ரஸ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் ஐப்பானின் மீது மேலும் தடைகளை போடவேண்டும் என்று உரையாற்றினர்.

ஏற்கனவே ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சர்ல் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஐப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில் ஐே.ஆரின் உரை இழப்பீடு குறித்த அந்தத் தீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமாகியது.

அந்த மாநாட்டில் இரண்டாம் உலகயுத்ததில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஐப்பான் வழங்க வேண்டும் என்கின்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். இலங்கை பிரதிநிதியாக கலந்து கொண்ட அன்றைய நிதி அமைச்சர் ஐே.ஆர் ஜெயவர்த்தன அந்தத் தீர்மானம் மனிதாபிமானமற்றது என்று நீண்ட உரையை ஆற்றினர். அந்தப்பேச்சு மிகவும் பிரசித்தமானது. பல வல்லரசு நாடுகள் ஐப்பானிடம் நட்ட ஈட்டை அறவிடுவதற்கான கோரிக்கையை உறுதியாக அந்த மாநாட்டில் முன்வைத்தபோது வறிய நாடான இலங்கையின் பிரதிநிதி தமக்கு எந்த நட்ட ஈடும் வேண்டாம் என்றார். அது ஐப்பானின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றார். அதிஷ்டவசமாக எங்கள் நாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை. ஆனால் விமானத் தாக்குதல்களினால் சேதங்களை உருவாக்கியிருந்தது. என்றார்.

 “நஹி வேறேன வேறானி” அதாவது “அன்பாலன்றி வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” என்கிற புத்தரின் தம்மபதத்திலிருந்து மேற்கோள் காட்டி ஆற்றிய உரை அது. இந்த உரையும் ஐப்பானுக்கு ஆதரவான பிரேரணையும் முடிந்ததும் பல நாட்டுத்தலைவர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தனர். இத்தனைக்கும் இரண்டாம் உலகப்போரில் ஐப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில்  இலங்கையும் ஒன்றாகும். ஐப்பானிய விமானங்களால் கொழும்புத் துறைமுகம், இரத்மலான விமானத்தளம்(05.04.1942) , திருகோணமலை துறைமுகம் (09.04.1942)ஆகியன தாக்கப்பட்டிருந்தன. ஜப்பானை தண்டிக்கவேண்டும். நட்டஈட்டை சுமத்த வேண்டும். என்று இருந்த தலைவர்கள் அந்த உரையின் பின்னர் உருகினர். ஒரு வசதி குறைந்த நாடொன்றே தமக்கு எதுவும் வேண்டாம். நலிந்த நாட்டை மேலும் கஸ்டத்தில் தள்ளாதீர்கள். என்று கூறியதைக்கேட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது முடிவை கைவிட்டன.

அந்த பிரேரணை மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் கொரியா. சீனா, ரஸ்யா, கனடா போன்ற நாடுகள் ஐப்பானை மூன்றாக பிளவுபடுத்தி தனித்தனியாக ஆண்டிருக்கும் ஐப்பான் என்று இன்று இருக்கிற நாடே வரைப்படத்தில் இருந்து காணமால் போயிருக்கும் என்று கூறுவார்கள்.

ஜப்பான் மீண்டு எழுவதற்;கு கைகொடுத்த  ஐே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியான வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள் இந்தசம்பவத்தை அவர்கள் மறு சுதந்திரம் (Re-independence) என்பர். மிகக் குறுகிய காலத்தில் ஐப்பான் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்து வந்ததும் அந்த வரலாற்று பூர்வமான நன்றிக்காக பல உதவிகளைச் செய்திருப்பதுடன் இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஐப்பான் திகழ்கிறது. சமாதன பேச்சுவார்த்தை காலத்தில் ஐப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமேற்றியிருந்தது.

உலகளாவிய மட்டத்தில் ஐே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் தீவிர பிரச்சாரத்தை நிகழ்த்தியது. 1979 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஐப்பானில் நிகழ்ந்த ஜப்பானிய பொருளாதார ஒழுங்கமைப்பு மாநாட்டில் ஐே.ஆர்.ஜெயவர்த்தன குறிப்பிடும் போது “நாம் புதிய பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளோம். இறக்குமதி தொடல்பாக முன்னைய அரசாங்கம் கடைபிடித்த கொள்கைகளை தளர்த்தியுள்ளோம். அந்நடவடிக்கை மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு தேவையான தரமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக உள்ளதோடு வெளிநாட்டு முதலீடுகளையும் தனியார் முதலீடுகளையும் ஆதரிப்பதற்கு வாய்ப்பாக இருக்கிறது”. என்றார். இதனை அடுத்து இலங்கைக்கான நிதியுதவி ஜப்பானால் அதிகமாக கிடைத்தது. ஐே.ஆர்.ஜெயவர்த்தனாவின் காலத்தில் ஜப்பான் மிகப்பெரிய நிதி ஈட்டத்திற்கான நாடாக காணப்பட்டது.

1978 -1986 வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றுக் கொண்ட நிதி ஈட்டங்களின் விபரம். ($ Mill)
நாடு                                 மொத்தம்                  கடன்                     நன்கொடை
ஜப்பான்                                51.6                           32.6                             19.0
       (ஆதாரம்: மத்திய வங்கி அறிக்கை 1978-1986)

 1995களுக்கு முன்னர் இலங்கையின் பாரிய இறக்குமதிப் பங்களிப்பு வழங்கிய நாடாக ஜப்பான் காணப்பட்டது. ஜப்பானை பொறுத்தவரை சர்வதேச அரங்கில் தனது பொருளாதார வல்லமையின் காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவிகளை செய்துள்ளது.

ஜப்பானின் தாராள குணத்தை பறைசாற்றும் வகையில் பல அரசாங்க நிறுவனங்களும் (ரூபவாஹினி, ஜயவர்தனபுர வைத்தியசாலை) அபிவிருத்தி திட்டங்களும் காணப்படுகின்றன. புதிய தலைநகராகிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் ஜப்பானிய அரசாங்கத்தினால் 1001 படுக்கைகளைக் கொண்ட மருத்துவசாலையை நன்கொடையாக வழங்கியது.

இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே பொருளாதாரத் தொடர்புகளை உருவாக்குவதில் தொடக்ககட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய அரசாங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவர் சர்வதேச வியாபாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சராகவிருந்த திரு. சினாத்ரா அபே அவர்களாவார்
 சர்வதேச விவகாரங்களில் ஜப்பான் முன்னரிலும் விட தீவிரமாக பங்குபற்றும் பொருட்டில் அதன் ஒரு பகுதியாக இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஜப்பானின் புதிய ஈடுபாடாகும். இவ்வகையில் ஜப்பானின் நோக்கங்கள் ஒரு வகையில் இலங்கை இன மோதல் தரப்பினரின் நலன்களுக்கு எதிரானது அல்ல என்பது மகிழ்ச்சிக்குரியதே. இலங்கை இன மோதல் தீர்விலும் குறிப்பாக சமாதானத்தை கட்டியெழுப்புவதிலும் ஜப்பானின் பங்களிப்பு மிக அவசியமானதாகும்.

நோர்வேயினால் தலைமை தாங்கப்பட்டு வழிநடத்திச் செல்லப்பட்ட சர்வதேச மத்தியஸ்த செயற்பாட்டில் ஜப்பான் பிரதான பங்காளி நாடாக இருந்துள்ளது. ஜப்பான் நீண்டகாலமாக இலங்கையுடன் நட்புறவினைக் கொண்டிருந்தாலும் நோர்வே தலைமையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைசாத்திடப்படும் வரை இலங்கையின் இனமோதலில் ஜப்பான் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கவில்லை. கெடுபிடி யுத்த அரசியல் விளைவுகளால் ஜப்பான் இலங்கையின் இனமோதலில் அக்கறை காட்டிருக்கவில்லை. கெடுபிடி யுத்தம் முடிவடைந்து இருதுருவ அரசியல் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பான் இலங்கையின் இனமோதலில் அதிக கவனம்; செலுத்தியது எனலாம்.

ஜப்பான் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை இலங்கையும் தமிழீழ விடுதலைப்புலிகளும் வரவேற்றிருந்தனர். 2002ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15ஆம் திகதி இலங்கையின் சமாதான செயற்பாட்டில் ஜப்பான் அதிகாரபூர்வமாக கலந்த கொள்வதாக அறிவித்ததுடன் இலங்கையின் மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, சமாதானக் கட்டமைப்பு என்பவற்றிற்காக ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக யசூசி அகாசி ( yasushi Akashi ) நியமிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 25 ஆம் திகதி ஒஸ்லோவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இலங்கையின் சமாதானச் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கான ஜப்பானின் நோக்கங்களை யசூசி அகாசி தெளிவாகக் கூறியிருந்தார்.

1.    கம்போடியா, ஆப்கானிஸ்தான், கிழக்குத் தீமோர் போன்ற நாடுகளில் மோதலுக்குப் பின்னரான மீள்கட்டுமானம், புனர்வாழ்வு போன்றவற்றில் ஈடுபட்ட அனுபவம் கடந்த பத்து வருடங்களாக ஜப்பானுக்குள்ளது. தற்போது ஜப்பான் தனது ஆதரவினையும் அர்ப்பணிப்பிணையும் வலுப்படுத்தி இலங்கையின் சமாதானச் செயற்பாட்டிற்கு  வழங்கத் தீர்மானித்துள்ளது.

2. மீள்கட்டுமானம், புனர்வாழ்வு வடிவில் வரும் சமாதானத்திலான இலாபப் பங்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளுக்குச் சமமாக பங்கிடப்பட வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இடையில் உணர்வுபூர்வமான சமதானச் சமநிலை பகிரப்படுதல் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

3. இலங்கைக்கு நிதி உதவி வழங்கி வரும் வெளிநாடு என்ற வகையில் தூய நன்நோக்கத்தோடு இலங்கையின் சமூக, பொருளாதார, அபிவிருத்திக்கு ஜப்பான் பங்களிப்புச் செய்ய விரும்புகின்றது

4. மோதலில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும் உறுதியான சமாதானத்தினை அடையவேண்டும் என ஜப்பான் கேட்டுக்கொள்கின்றதுடன் நன்நோக்கத்தோடு வடக்கு,கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டுமானப் பணிகளுக்கான ஆதரவினை ஜப்பான் வழங்கும்.

5. மனிதாபிமானம் மற்றும் புனர்வாழ்விற்கான உபகுழு அங்கத்தவராக இருந்து தொடர்ந்து பங்களிப்புச் செய்ய ஜப்பான் தயாராக இருக்கிறது.

2003ஆம் ஆண்டு ஆனி மாதம் டோக்கியோவில் இலங்கையை மீளப்பெறுதல் (Regain  Sri Lanka ) என்னும் தொனிப்பொருளில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு கூட்டப்பட்டிருந்தது. டோக்கியோ மகாநாட்டுப்பிரகடனத்தின் பிரதான நோக்கம் இலங்கையின் மீள்கட்டமைப்பு, அபிவிருத்திகளுக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து பலமான அர்ப்பணிப்பினைப் பெறுவதாகும். மேலும் சமாதான செயற்பாட்டின் மூலம் முன்னேற்றங்களைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகளைத் தூண்டுவதுமாகும். இம்மாநாட்டில் 50 நாடுகளும் 20 சர்வதேச நிறுவனங்களும் பங்குபற்றிருந்தன. இலங்கையின் மீள்கட்டமைப்பு, அபிவிருத்திக்கான சர்வதேச உதவிகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் அபிவிருத்தி, மீள் கட்டமைப்புக்கு சர்வதேச சமூகம் அர்ப்பணிப்புள்ள ஆதரவினை வழங்கும் எனவும் இம் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டும். என்பதில் உறுதியாக இருந்ததுடன் சமாதான செயற்பாட்டில் முக்கியமான கட்டத்தினையடைய இது உதவும் எனவும் எதிர்பார்த்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நிதியினை வழங்குதல் என்பது மாத்திரம் போதுமானதல்ல எனக்கூறி இம்மாநாட்டை நிராகரித்திருந்தது.

 யசூசி அகாசி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டதுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளின் சில விடயங்கள் தொடர்பாக புது டெல்லியுடனும் கலந்துரையாடினார். இலங்கைக்கு அவர் விஜயம் மேற்கொண்ட காலத்தில் அரசாங்க மட்ட உயர் அதிகாரிகள் பல்வேறுப்பட்ட அரசியல் தலைவர்கள் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பல தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடாத்தி வேறுபட்ட கருத்துக்களை கேட்டறிந்து சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவால்கள் அவற்றை எதிர்கொள்ள உருவாக்க வேண்டிய வியூகங்கள் என்பவற்றை உணர்ந்துக் கொண்டார். 2007ஆம் ஆண்டு ஜப்பானிய பிரதமர் இலங்கையின் சமாதானம் தொடர்பாக பின்வருமாறு கூறியிருந்தார்.

“இலங்கையில் சமாதானம் அடையப்பட வேண்டியது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்துவதற்கு அவசியமானதாகும். படை பலத்தினை பயன்படுத்தி தீர்வினை அடையாமல் அரசியல் மனைப்புகளினால் தீர்வு அடையப்படல் வேண்டும். பலமான ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு ஒன்றை உருவாக்குவது அவசியமானதாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கிடையில் அரசியல் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வுத் திட்டம் ஒன்றை விரைவாக உருவாக்க வேண்டும்.”

2008ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்த அரசாங்கம் விலகிக் கொண்ட போது அதற்கு கவலை தெரிவித்துக் கொண்ட ஜப்பானிய அரசாங்கம் யுத்தத்த்pனால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புத் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தியது. உள்ளக இடப்பெயர்வினை எதிர்கொண்ட மக்களுக்;கு ஏற்பட்ட மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜப்பான் அதிக கவனம் செலுத்தியது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்த்pனால் மரணமடைந்த அனைவருக்கும் தனது அனுதாபத்தினை தெரிவித்துக் கொண்டதோடு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் தயாராக இருப்பதாக அறிவித்துக் கொண்டது. மேலும் இலங்கையின் தேசிய இணக்கப்பாட்டிற்கு ஜப்பான் தனது ஆதரவினைத் தொடர்ந்து வழங்கி வரும் எனவும் அறிவித்தது.

சமாதான காலத்தில் நோர்வே வழங்கிய நிதியுதவிகள் போலவே ஐப்பானும் சமாதானத்துக்காக நிதியுதவிகள் கோடிக்கணக்கில் வழங்கியது. யுத்தத்தின் பின் மீள்குடியேற்றத்திற்கும் பின்னர் கண்ணிவெடி அகற்றும் பணிக்காக 03 பில்லியன் நிதியையும் கொடுத்து உதவியது. 1953 இல் தான் இலங்கையில் ஐப்பான் தூதரகத்தை நிறுவியது. ஐே.ஆர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஏராளமான நிதியுதவிகளையும் கடனுதவிகளையும் வழங்கியது.

மேல்கொத்மலை மின்னுற்பத்திதிட்டம், கொழும்பு துறைமுக விரிவாக்கல் திட்டம், மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் ஒரு பகுதி, கட்டுநாயக்க விமானநிலைய அபிவிருத்தி . டெலிகொம் திட்டம். இரயில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பாலங்கள் அமைப்பது என்று ஒரு தொகை அபிவிருத்திப் பணிகள் ஐப்பானின் உதவியால் இலங்கை பலனடைந்திருந்தது.

இலங்கையின் அடிப்படை உட்கட்டமைப்பை சார்ந்த திட்டங்கள், பேராதனை, ஐெயவர்த்தனபுர ஆஸ்பத்திரிகள் வைத்திய பரிசோதனை நிலையங்கள் என்பன மட்டுமல்ல இலங்கையின் ரூபவாஹினி நிறுவனத்தையும் ஐப்பான் அமைத்துக்கொடுத்தது. சுணாமி அழிவின் போது  இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 50 சதவீதத்தை ஐப்பான் தான் வழங்கியிருந்தது. 2013 அம் ஆண்டு இலங்கை –யப்பானிய ராஐதந்திர உறவின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி அன்றைய ஐனாதிபதி மகிந்தராஐபக்ஷ யப்பான் சென்றிருந்தவேளை இலங்கையின் அபிவிருத்திக்காக 57.08 பில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கியது. ஐெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததும் இந்த தார்மீக உணர்வில் தான் ஆனால் அந்த ஆதரவில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்ததும் வாக்களிப்பில் கலந்துக்கொள்வதைத் தவிர்த்தது.

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையே இடம்பெற்றுள்ளன. முதலீடு மற்றும் வர்த்தக ஒத்துழைத்தல் அபிவிருத்தி பணிகளில் ஒத்துழைத்தல், கடல் எல்லை பாதுகாப்பு என்பன போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையிலும் இந்து பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையினையும் சுபீட்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை உடனான உறவுகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. அத்துடன் இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் விசேட ஒத்துழைப்பை ஜப்பான் வழங்கியுள்ளது.

ஐனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் ஜப்பானுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஐயத்தின் போது ஜப்பானிடமிருந்து வெளிநாட்டு முதலீட்டை எதிர்பாரப்பதாக தெரிவித்திருந்தார். இந்த விஐயத்தின் போது மற்றுமொரு முக்கியத்துவம் யாதொனில் உலகவங்கி, ஐப்பான் ஆகிய இரு முக்கியத்துவமிக்க வகிபங்குதாரர்களுடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் காணப்பட்டமையே ஆகும். இக்காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சர் ஐப்பானுடன் மிகநெருக்கமான தொடர்பினை பேணினார். ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பொருளாதார ரீதியில் பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கும் பொருட்டு தனது பிரத்தியேக இராஐதந்திர அணுகமுறைகளுடன் ஐப்பானுக்கு விஐயம் செய்ததுடன் அந்நாட்டுத் தலைவரிடம் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டார். அத்துடன் அந்த அரசாங்கத்துடன் சினேகபூர்வமான உறவுகளை பலப்படுத்தியதுடன் வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளினூடாக பொருளாதார இலக்குகளை அடைய எத்தனித்தார். இலங்கை பிராந்திய ரீதியில் ஒத்துழைப்புக்களை கட்டியெழுப்ப முற்பட்ட தென்கிழக்காசிய நாடுகளில் ஐப்பானுடன் இலங்கை வரலாற்று ரீதியாக மிக நெருக்கமான தொடர்பினை மேற்கொண்டது. இத்தொடர்பினை மேற்கொள்ள ஐனாதிபதி குமாரதுங்காவும் வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமரும் அதிக கரிசனை காட்டினர்.

2002 ஆண்டு டிசம்பர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஆனாலும் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பொதுஜன முன்னணியைச் சேர்ந்த சந்திரிக்காவே பதவியில் இருந்தார். அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக சந்திரிக்கா வெளிவிவகார பொறுப்பையும் ஐ.தே.கட்சி அரசாங்கத்திடம் கையளித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் இலக்காக சமாதானமும் பொருளாதாரமும் அபிவிருத்தியுமே இருந்தன . அதற்காக ஜப்பானின் உதவியும் ஒத்தழைப்பும் தேவைப்பட்டன. புலிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும் அதேவேளை பொருளாதார அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கும் இவ்வுதவிகள் தேவைப்பட்டன. இதனால் இந்நாட்டுடன் அதிகமான உறவுகள் கட்டியெழுப்பப்பட்டன.

2016ஆம் ஆண்டு இலங்கையின் பொதுத்துறையின் திறன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஜப்பானின் சர்வதேச கூட்டாண்மை முகவர் அமைப்பு (JICA) நிறுவனம் உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் வினைத்திறன் வாய்ந்த பொதுத்துறையை உருவாக்குவது மற்றும் அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு திறன்விருத்தி செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கையின் பொருளாதார செயற்பாட்டில் வினைதிறன் வாய்ந்த பங்காளர் எனும் வகையில் ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை முகவர் அமைப்பு (JICA)) நாட்டின் பொதுத்துறைக்கு பெறுமதி வாய்ந்த பங்களிப்பை வழங்கும் முகமாக வளங்களை கட்டியெழுப்புதல் மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வந்தது.

மனிதவளங்கள்  அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக ஜப்பானிய மானிய உதவி என்பதன் மூலமாக ஜப்பானிய அரசாங்கத்தினால் நிதிஉதவி வழங்கப்பட்டு JICA இனால் நடைமுறைப்படுத்தப்படும்  இளம் திறமை வாய்ந்த மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு புகழ்பெற்ற ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர்வதற்காக வாய்ப்பை வழங்கியது. JDS திட்டத்தின் கீழ் 231 மில்லியன் யென் (சராசரியாக 318 மில்லியன் ரூபா) தொடர்ச்சியான நிதி உதவி வழங்கல் உடன்படிக்கையில் JICA வின் பிரதம பிரதிநிதி கியொஷி அமடா மற்றும் நிதி அமைச்சின் திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.இலங்கை அரசாங்கம் மற்றும் JICA இடையிலான இந்த உடன்படிக்கையின் மூலமாக உள்நாட்டு பொதுத்துறையில் மனித வளங்கள் திறன் அபிவிருத்தி மற்றும் நிறுவனசார் கட்டியெழுப்பல் செயற்பாடுகள் போன்றன மேம்படுத்தப்பட்டிருந்ததுடன் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பரஸ்பர இணைவுகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

  JDS இன் கீழ் JICA மற்றும் ஜப்பானிய தூதுவராலயம் ஆகியவற்றின் இணைகழகத்தின் மூலமாக இலங்கையின் அரச ஊழியர்களின் திறனையும் அறிவையும் விருத்தி செய்யும் நோக்கில் பொருத்தமான 15 அரசாங்க அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் இரு ஆண்டுகளுக்கு பொதுக்கொள்கை மற்றும் நிதியியல் பொருளாதாரம் உள்ளடங்கலாக பொருளாதாரம் வணிக முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றில் முதுமாணிப்பட்ட புலமைப்பரிசில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 2010 முதல் நிதிபங்களிப்புச் செய்து வருகின்றதுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக 2016ஆம்  90 இலங்கை அரச ஊழியர்கள் அனுகூலம் பெற்றுள்ளனர். அத்துடன் 2019 ஆம் ஆணடு பெப்ரவரி 26 ஆம் திகதி ஜப்பானிய தூதுவர் அதிமேன்மைதகு திரு.அகிரா சுகியாமா தனது வாசஸ்தலத்தில் வரவேற்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தார். இதில் திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி R.H.Sசமரதுங்க, சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு நாடு திரும்பிய JDS புலமைப்பரிசில் பங்காளர்களை வரவேற்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தூதுவர் சுகியாமா உரையாற்றுகையில் இவ் JDS பங்காளர்கள் ஜப்பானில் அவர்கள் கற்ற தலைமைத்துவ விடயங்களையும் அனுபவங்களையும் கொண்டு இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என ஜப்பானிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் ஜப்பான் இலங்கை நாடுகளிற்கு இடையேயான உறவை பலப்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்தவகையில் 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு ஜப்பான் நிதி மற்றும் தொழினுட்ப உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது. நாட்டுக்கு நிதி உதவிகளை வழங்கும் நன்கொடை நாடுகளில் முக்கிய ஒரு நாடாக ஜப்பான் அமைந்துள்ளது. ஜப்பான் மக்கள் சார்பாக JICA இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.


இலங்கை யப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ஜப்பான் சர்வதேச தொழில்நுட்பப் பயிற்சி ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் ஆதரவுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இத்திட்டத்தை ஊக்குவித்து வருகின்றது.  இத்திட்டத்தில் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் ஊடாக ஜப்பானுக்கு மேலதிக தொழிற்பயிற்சி பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசு ஒவ்வொரு வருடமும் ஆற்றல்மிக்க ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நிலை பயிற்சி சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

மாண்புமிகு சின்சோ அபெ அவர்களின் பாரியார் அகியே அபெ அவர்கள் இலங்கையின் முதற்பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ உடனிணைந்து “ஷைன் வீக்” (SHINE WEEK) நிகழ்ச்சியை 2014 செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பித்தார். ஜப்பான் செப்டம்பர் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை உலகளாவிய ரீதியில் சிறந்த பெண் தலைவர்களை அழைத்து “டோக்கியோ உலக பெண்கள் பேரவை” (WOW! TOKYO 2014)” என்ற தலையங்கத்தில் ஆய்வரங்கொன்றை நடாத்தியது. இச்சந்தர்ப்பத்திற்காக 2014 செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியை ஜப்பான் “ஒளிரும் கிழமைகள்” (SHINE WEEKS) என பெயரிடப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் பல்வேறு பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும்.

 ஒளிரும் கிழமைகளின் ஆரம்ப நிகழ்ச்சியாக “தேசத்தின் வெற்றியில் பெண்கள்” என்ற கண்காட்சியை நடாத்தியமைக்கு நான் நன்றியுடையவளாக இருக்கிறேன்” என்று மெடம் அகியே கூறினார். இலங்கையும் ஜப்பானும் பெண்கள் வலுவூட்டலை மேம்படுத்துவதில் ஒத்துழைத்துச் செயற்பட முடியும். இலங்கையிலும் ஜப்பானிலும் பெண்கள் மேலும் செயற்திறனுள்ள பாத்திரங்களை வகிக்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார். “தேசத்தின் வெற்றியில் பெண்கள்” நாடளாவிய ரீதியில் இலங்கை அரசாங்க உதவி பெற்ற பெண் முயற்சியாளர்களின் பல்வேறு உற்பத்திகளை காட்சிப்படுத்தியது. மேலும் இக்கண்காட்சி ஜப்பானிய அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் வறுமை ஒழிப்பிற்கான சிறு கடன் திட்டத்தினதும் “POVERTY ALLEVIATION MICROFINANCE PROJECT (PAMP II)” வேல்ட் விஷன் ஜப்பான், பார்சிக் (WORLD VISION AND PARCIC) ஆகிய 2 ஜப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஆதரவளிக்கப்படும் பெண் முயற்சியாளர்களினதும் பல்வேறு உற்பத்திகளையும் காட்சிப்படுத்தியது.

 இந்நிகழ்ச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே ஆகியோர்களுக்கிடையே அதே நாளில் கைச்சாத்திடப்பட்ட “கடல் சார் நாடுகளுக்கிடையே ஒரு புதிய பங்காண்மை (“A New Partnership Between Maritime Countries”) கூட்டறிக்கையில் உள்வாங்கப்பட்ட பெண்கள் வலுவூட்டலை மேம்படுத்துவதில் இரு நாட்டுத்தலைவர்களுக்கும் உள்ள பற்றுருதியை வெளிப்படுத்தியது.

 2016 ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்தான ஊர்தி, பொறி உதிரிப்பாகங்கள் மற்றும் பொறிகள் மற்றும் சாதனங்களினதும் இறக்குமதி மீது ஏற்பட்ட செலவீனம் அதிகமாக இருந்தபோதும் வாகன இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஐந்தாவது பெரிய இறக்குமதி மூலமான ஜப்பானிலிருந்தான இறக்குமதிகள் மீது ஏற்பட்ட செலவானது 31.6 சதவீதத்தால் குறைவடைந்தது. 2016ஆம் ஆண்டு அபிவிருத்திக் கொள்கைக்கடனாக ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து ஐ.அ டொலர்கள் 85 மில்லியனை நிகழ்ச்சிதிட்ட நிதியிடல் முறையில் இலங்கை பெற்றது. 2016இல் வெளிநாட்டுக்கடன்பாடுகளுடன் நிதியிடப்பட்ட பிரதான செயற்றிட்டங்கள் 67 ஆகும் . தேசிய வீதி வலையமைப்பிற்கான முக்கிய பாலக்கட்டுமான செயற்றிட்டத்திற்காக 15 மில்லியன் ஐ.அ டொலர்களும் பெரும்போக கொழும்பு ஊடுகடத்தல் மற்றும் பரப்பல் இழப்பீடு குறைத்தல் நிகழ்ச்சித்திட்டத்திற்காக 13 மில்லியன் ஐ.அ டொலர்களும் கோப் சென்றலே ரைபீசீன்-போறன்லீன் பாங்க் திட்டத்திற்காக 48 மில்லியன் ஐ.அ டொலர்களும் 463 கிராமிய பால கட்டுமான செயற்றிட்டத்திற்காக 48 மில்லியன் ஐ.அ டொலர்களும் நிதியிடப்பட்டன

 ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு கடந்த 1951 ஆம் ஆண்டு தொட்டு இருநாடுகளும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு பாதையில் தொடர்ந்தும் பயணித்தே வந்துள்ளன. இன்று வரை ஒரு ட்ரில்லியன் யென் கடனுதவி ( சுமார் 1.35 ட்ரில்லியன் ரூபா) அண்ணளவாக 200 பில்லியன் மானியங்கள் உதவி (270 பில்லியன் ரூபா) தொழினுட்ப ஒத்துழைப்புக்கு 80 பில்லியன் யென்னுக்கு மேற்பட்ட தொகை (108 பில்லியன்) மற்றும் 1000 க்கும் மேற்பட்ட ஜப்பான் வெளிநாட்டு ஒத்துழைப்பு தன்னார்வத்தொண்டர்கள் என நிதி மற்றும் ஆளணி உதவிகளை வழங்கியதன் மூலம் ஜப்பான் இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு மற்றும் மனிதவள அபிவிருத்திக்கென பங்களிப்புச் செய்துள்ளது.

ஜப்பானும் இலங்கையும் 100 பில்லியன் ஜப்பானிய யென்னுக்கும் (அண்ணளவாக 170 பில்லியன்) அதிகமான வருடாந்த இரதரப்பு வர்த்தகத்துடன் கூடிய முக்கியமான பொருளாதார மற்றும் வர்த்தகப் பங்காளிகளாக இருந்து வருவதுடன் 130க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் இலங்கையில் கால்பதித்துள்ளன.

 திருகோணமலையில் தனியார் சீமேந்து ஆலை ஒன்று இயங்கி வருகின்றது. மிட்சுமி சீமெந்து ஆலை. இதனை ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் இலங்கை நிறுவனம் ஒன்றும் இணைந்து நிறுவியுள்ளது.

அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டத்தாபனம் (M.K.C.S) ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக 1987 ஆம் ஆண்டு ஜப்பானிய ஒத்துழைப்பு  முகவர் (ஜைக்கா) ஊடாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடையாகும். அதன்பின்னர்  ஜைக்கா 1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் அ.ம.உ கூட்டுத்தாபனத்துக்குத் தேவையான ரூபா 10 மில்லியன் பெறுமதியான உதிரிப்பாகங்களளை இரண்டு தடவைகள் வழங்கியதன் மூலம் அதன் ஒத்துழைப்பை நல்கியது. மேலும் இலங்கையின் மருந்தாக்கற் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 4000 குளிகைகள் மற்றும் கூட்டுக் குளிகைகளாக அதன் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்துவதற்காக புதிய இயந்திரங்களைப் பொருத்துதல், உற்பத்தி வலயத்தைப் புதுப்பித்தல், களஞ்சியக் கட்டிடங்களை நிர்மாணித்தல் ஆகியவற்றுக்காக ஜைக்கா ஊடாக 1,244 ஜப்பானிய யென் பெறுமதியான கடனை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் சம்மதித்தது. இக்கருத்திட்டம் 2016ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

 இலங்கையில் அதிகரித்து வரும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்யும் நோக்கில் 2006.03.03 மேல் கொத்மலை நீர்மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மேல் கொத்மலை நீர்மின்திட்டம் என்பது 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாரிய மின்திட்டமாகும். நுவரெலியா நிர்வாக மாவட்டத்திற்கு சொந்தமான மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மஹாவலி கங்கையின் கிளை கங்கையான கொத்மலை ஓயாவிற்கு குறுக்காக 180 மீற்றர் உயர அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. சுற்றாடல் பாதிப்பை குறைக்கும் வகையில் 150 மெ.வொ திறனுடன் வருடாந்தம் 409 கிகாவோட் மணித்தியாலயம் மின்சாரசக்தியை மேல்கொத்மலை மின்நிலையத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டது. 2010. நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேல் கொத்மலை நீர்மின் நிலையம் திறந்தவைக்கப்பட்டது. இவ் அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் இரு கட்டங்களாக கடன் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி சலுகை அடிப்படையில் ஜப்பானின் சஹயோகிதா வங்கி; 37,817 மில்லியன் யென் கடன் நிதியாக வழங்கியது. இலங்கை அரசு இலங்கை ரூபாவில் 7936 மில்லியன் ரூபாவையும் ஜப்பான் யென்னாக 496 மில்லியன் மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்கு வழங்கியுள்ளது

2018 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட விரிவான பங்குடைமை பற்றிய கூட்டு பிரகடனத்தின் அடிப்படையில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை (ஐெய்கா) மற்றும்  இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட மானிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஜப்பானால் இலங்கைக்கு நன்கொடயாக இரண்டு கரையோர ரோந்து கப்பல்களான “SLCGS SAMUDRA RAKSHA” மற்றும் "SLCGS SAMARAKHA” என்பன வழங்கப்பட்டன. அந்த இரண்டு ரோந்து கப்பல்கள்  கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சட்ட அமுலாக்கம், தேடுதல் மற்றும் மீட்பு, அனர்த்த ஆபத்துக்களை தணித்தல், மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட இலங்கை கடலோர பாதுகாப்பின் திறனை அதிகரிக்கும்.

ஒவ்வொரு G-7 நாடும் சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகள் தீர்மானங்களின் பிரகாரம் மேம்பட்ட G-7 ஒருங்கிணைப்பின் ஊடாக பெண்கள் சமாதான பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உதவியளிப்பதற்கு பங்குதார நாடொன்றை தெரிவுசெய்கின்றது.  இந்த முன்னெடுப்பின் கீழ் இலங்கையின் பெண்கள்.சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஜப்பான் இலங்கையை பங்காண்மை நாடாக தெரிவுசெய்துள்ளது.  இந்த முன்னெடுப்பானது பாலின சமத்துவம் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் வலுவூட்டப்படல் மற்றும் அவர்களின் மனித உரிமைகளுக்கு மரியாதையளித்தல். என்பன நிலையான சமாதானத்திற்கும் அதனை அடைவதற்கும் அத்தியாவசியமாகும் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் மூலம் ஜப்பான் இலங்கைக்கு பெருமளவு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே ஆகிய இரு தரப்பு அரச தலைவர்களுக்குமிடையே சுகாதார சேவைகள் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மே 16 அம் திகதி கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. விமான நிலையத்தின் இரண்டாவது இறங்கு தளத்தை அமைக்கவும் ஜப்பான் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஜப்பானிய தூதுவராலயம் ஜப்பானிய ஒருமைப்பாட்டுச் சங்கம் மற்றும் இலங்கை ஜப்பானிய வர்த்தக மற்றும் தொழிற்றுறை சங்கம் ஆகியன இணைந்து மார்ச் மாதம் 2ஆம் திகதி 2019 அன்று கொழும்பு 7, சுதந்திர சதுக்க ஆர்கேட் (ARCADE) இல் ஜப்பானிய கலாச்சார கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விருது 1993ஆம் ஆண்டு ஜப்பான் - இலங்கை நட்புறவு கலாச்சார நிதியத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிதியம் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிற்கிடையேயான அந்தந்த கலை கலாச்சாரங்களின் பரஸ்பர புரிதலினை வசதிப்படுத்துவதன் ஊடாக நட்பை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது.

 தன்னியக்க வானிலை அவதானிப்பு நிலையங்களை ஆரம்பிக்கும் வரையும் வானிலை அவதானிப்பில் கையினால் இயங்கும் முறை தான் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் வெப்பநிலை, ஈரப்பதன், காற்று, கதிர்வீச்சு, மழைவிழ்ச்சி மற்றும் வளியமுக்கம் அகியவற்றை அளவிடும் 38 தன்னியக்க வானிலை நிலையங்கள் 38 இடங்;களில் நிறுவப்பட்டன. இந்த தூரத்தில் உள்ள இடங்களைத் தொடர்புபடுத்தும் தொடர்பாடல் முறைமை செய்மதி (VSAT) ஊடாக மேற்கொள்ளப்படுவதுடன் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லா இடங்களிலுமிருந்து வளிமண்டலவியல் தலைமை அலுவலகத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ரூபா  720 மில்லியன் பெறுமதியான இந்த முறைமை ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரின் ஊடாக வழங்கப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான நன்கொடையாகும்.
          
ஜப்பானிய அரசாங்கம் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. அதனடிப்படையில் 2019.06.18  அன்று ஜப்பானில் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் ஜப்பான் சார்பில் அந்நாட்டு தொழிலமைச்சரும் கைசாத்திட்டனர். இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் முதியோர் பராமரிப்பு, முகாமைத்துவ துறை, கட்டட சுத்திகரிப்பு துறை, இயந்திரவியல் துறை, கைத்தொழில் துறை, இயந்திர உதிரிப்பாகங்கள் துறை, மின்சாரம், நிர்மாணத்துறை, கப்பல் போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து பராமரிப்பு, விமான சேவை, உல்லாச ஹோட்டல் துறை, விவசாயம், மீன்பிடி, உணவு உற்பத்தி, உழவு கைத்தொழில் உள்ளிட்ட 14 துறைகளில் இலங்கையர் ஜப்பானில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள உள்ளனர்.  இந்த உடன்படிக்கையின் படி அடுத்தவரும் 10 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இதன்படி வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜப்பானின் இத்திட்டத்தில் இலங்கை 7வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஜப்பான் அளிக்கும் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களின் ஊடாக இந்த நாட்டின் சமூக, பொருளாதார துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படும். அது நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் பக்கதுணையாகவும் அமைந்தது.

 இலங்கை ஜப்பானிய சர்வதேச தொடர்பில் சில மாற்றங்களும் சில சவால்களும் தற்காலத்தில் எதிர்கொண்டுள்ளது எனலாம்.

 1995களுக்கு முன்னர் இலங்கையின் பாரிய இறக்குமதிப் பங்களிப்பு வழங்கிய நாடாக ஜப்பான் காணப்பட்டது. 2001 க்கு பின்னர் அதாவது இலங்கை - இந்திய தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு பின்னர் முற்றாக மாறிவிட்டது. (Post - FTA- Free Trade Agreement) இது தொடர்பாக ஐ.தே.மு அரசாங்கம் ஆகஸ்ட் 2003 ஓர் அறிக்கையினை வெளியிட்டது. இதில் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக ஒத்தழைப்பு நாடு என்றும் மிக உயர்வான விகிதாசாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நாடாக உள்ளதென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் ஓரங்கட்டப்பட்டது மட்டுமல்லாமல் இலங்கையின் சிறுகைத்தொழில் முயற்சிகள் முற்றாக கைவிடப்பட்டன.
 
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது இலங்கையின் பொருளாதாரமானது அந்நியச்செலாவணியால் அபிவிருத்தி அடைந்திருந்தது. அப்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களின் அளவு மூன்றரை வருடங்களுக்கு நாட்டின் செலவைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு போதுமாக இருந்தது. குறித்த நாட்களில் வெளிநாட்டுச்சொத்து வளங்கள் உயர்மட்டத்தில் காணப்பட்டதுடன் ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நிலையோடும் ஆசிய வலயத்தின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரமாகவும் காணப்பட்டது. எனினும் 1950 ¬¬- 1955க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமையச்செலவுகள் அதிகரித்ததுடன் நாட்டின் அந்நியச் செலாவணி குறைவடைந்திருந்தது.

அரச கடன் தொகை பற்றிய பல்வேறு கருத்துக்களை கடந்த காலப்பகுதியில் செவிமடுக்க கிடைத்தது. அண்மைக்காலமாக நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பின்னடைவுக்கு உட்பட்டிருப்பதன் மூலம் கடன் நாட்டின் அடிப்படைப் பிரச்சினையாக மாறியிருப்பது தெரிகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான முதலீட்டுத் தொகையை தேசிய ரீதியில் அடைந்துக்கொள்ள முடியாதிருப்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்த வரும் நாடுகள் முகம் கொடுக்கும் முக்கிய பொருளாதார பிரச்சினையாக உள்ளது. அந்தவகையில் இலங்கை வெளிநாடுகளில் இருந்து 55 பில்லியன் டொலர் அளவில் இலங்கை கடன் பெற்றுள்ளது. அதில் ஜப்பான் 12 சதவிகிதம் அளவில் இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்றது. இலங்கையில் அதிகரித்துவரும் கடன் சுமையானது பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

 சீனாவிடம் இலங்கை பெற்றுக் கொண்ட கடனை விட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக் கொண்ட கடன் தொகை அதிகம் என சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டாகும் போது இலங்கை தனது வெளிநாட்டு கடன்களில் 12 சதவீதத்தை ஜப்பானிடம் பெற்றுக்கொண்டிருப்பதாக அந்த செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து சீனாவை குறை கூறும் மேற்கத்தேய நாடுகள் ஜப்பான் தொடர்பில் வாய் திறப்பதில்லை என்றும் அந்த செய்தியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக புதுடில்லி இந்தியாவின் காய் நகர்த்தலுடன் ஜப்பான் திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை கையாளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்த சீன அரசினால் குத்தகைக்கு பெறப்பட்டள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சகல நாடுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இடசுனோரி ஒனோடெரா 2019 ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தியிருந்தார். இச்சந்திப்பின் போது ஜப்பான் அரசின் பல அழுத்தங்களுக்கு மைத்திரி - ரணில் அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

  2016 ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்தான ஊர்தி, பொறி உதிரிப்பாகங்கள் மற்றும் பொறிகள் மற்றும் சாதனங்களினதும் இறக்குமதி மீது ஏற்பட்ட செலவீனம் அதிகமாக இருந்தபோதும் வாகன இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஐந்தாவது பெரிய இறக்குமதி மூலமான ஜப்பானிலிருந்தான இறக்குமதிகள் மீது ஏற்பட்ட செலவானது 31.6 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது. ஜப்பானுடன் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் குறைவடைந்தமையினால் 2015 உடன் ஒப்பிடுகையில் 2016 இல் அவற்றுடனான வர்த்தகம் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்தது.

 அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை தம்வசப்படுத்தம் நோக்கில் இந்திய மத்திய அரசு ஜப்பான் அரசின் ஊடாக நகர்வை மேற்கொண்டு வருவதாக அவதானிகள் கூறுகின்றனர். கொழும்பு போட் சிற்றி , அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முக்கியமான அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட 75 சதவிPதமான கட்டுமானப்பணிகள் சீனாவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜப்பான் அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதிலும் சிக்கல் நிலைமைகளை மைத்திரி - ரணில் அரசாங்கம் எதிர்நோக்கியதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவித்திருந்தன.

 இலங்கையானது யுத்ததிற்கு முன்னர் பல நாடுகளின் உதவியைப் பெற்று யுத்தத்தை வெற்றிக் கொண்ட பொதிலும் யுத்த வெற்றிக்குப் பின்னர் தாம் வகுத்துக் கொண்ட சர்வதேச தொடர்பில் சீரின்மை காணப்பட்டமையினால் அலங்கை சர்வதேசத்தின் மத்தியில் தோல்வி கண்ட நாடாக காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை சீனசார்புக் கொள்கையை ஆதரிக்கின்ற நாடாகக் காணப்படுகின்றது. உள்நாட்ட மோதலானது 2009 ஆம் அண்டு முடிவுக்கு கொண்டவரப்பட்டதை அடுத்து இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கையை சீனா வகுப்பதாகக் கொண்டு ஜப்பானுடன் மேலேழுந்தவாரியான இராஜதந்திரப்போக்கை கடைபிடிக்க முற்பட்டனர்.

 அதேவேளை தமிழர்களின் 70 அண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க உதவியளித்த சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு பெற்றுக்கொண்டது போல் ஜப்பானும் தற்போது புவிசார் அரசியலுக்காக இலங்கை என்ற அரசு கட்டமைப்பையே தமது அடிமைத்தனத்திற்கு கொண்டு வர முயற்சிப்பதாக சிங்கள இடதுசாரிகளின் கருத்தாக அமைகின்றது. இதேவேளை இறுதிப்போருக்கு உதவியளித்த ஜப்பான் இன்று வரை நிரந்தர அரசியல் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் தமது புவிசார் நலன்களின் அடி;ப்படையில் தமிழர் தாயகக் கடற்பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபடுவது போல் இருக்கின்றது. எவ்வாறு எனிலும் இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜப்பான் முன்னோடியாக காணப்பட்டதை மறுக்க முடியாது.

சுரேஸ்குமார் சஞ்சுதா

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...