Sunday 28 June 2020

வன்னியின் தொன்மைகள் வெளிக்கொணரப்படாதது ஏன்?

                                           


                            எல்லை வடக்கில் எழில்வாழ் பரவகடல்
                            பல்லோர் புகழருவி தெற்கெல்லை – நல்லதிரு
                            கோணலை கீழ்பால் கேதீச்சரம் மேற்கில்
                            மானத் திகழ் வன்னி நாடு.


எனும் பழம் பாடலில் வன்னி நாட்டின் எல்லைகள் தெளிவாகப் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்னி என்பது காட்டைக் குறிக்கும் சொல் என்றும் வனம் என்றும் காட்டில் வாழ்பவர்கள் வன்னியர் என்றும் சிலர் மேலோட்டமாகப் பொருள் கொள்ளுவார். வன்னி என்றால் நெருப்பு என்று பொருள் கொண்டு வன்னியர் அக்கினி குலத்தவர் என்றும் கூறுவர்.

ஒரு சமூகம் தமது நிகழ்கால இருப்பின் நியாயங்களை நிறுவதற்கும் எதிர்;கால இருப்புக்களின் வழிமுறைகளை வகுத்துக்கொள்வதற்கும் தனது கடந்தகால வரலாற்று அம்சங்களை கண்டுகொள்வது அவசியமாகும். இந்தவகையில் வினாவுக்குச் செல்லும் முன்னர் வன்னியினை பற்றி சிறிது அறிமுகம் செய்து கொள்ளுவோம்.

வன்னி நாடு, வன்னியர்கள் பற்றி ஒர் சில குறிப்புக்களே எமக்கு கிடைத்துள்ளன. இவையும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் பதிவுகளில் இருந்தே பெறப்படுகின்றன. இவைகளை உறுதிபடுத்தக்கூடிய சாசனச்சான்றுகள் மிகச்சிலவே உள்ளன. ஈழத்தமிழர்களது வரலாறு பூரணமடைய வேண்டுமானால் வன்னியின் வரலாறு பூரணமாக ஆராயப்படல் வேண்டும். இது வரலாற்றறிஞர்களின் கடமையாகும்.

வன்னி எனக்குறிப்பிடுவது வவுனியா , முல்லைதீவு, கிளிநொச்சி , மன்னார், பரந்தன் ஆகிய பிரதேசங்களைக் குறிக்கின்றன. வன்னியர்கள் இலங்கையில் குடியேறிய காலம் கி.மு50ஆம் ஆண்டு வரையிலேன வையாபாடல் வாயிலாகக் கொள்ளக் கிடக்கின்றது. வையாபாடல் ஆய்வுரையில் திரு.க.செ.நடராஜா அவர், மதுராபுரியில் இருந்து 60 வன்னியர் மாருதப்பிரவையின் மகன் சிங்க மன்னன் (வாலசிங்கன், வரராச சிங்கன்) காலத்தில் அவன் மணவினை சம்மந்தமாக இலங்கைக்கு வந்தார்கள். முதல் வந்த அவ்அறுபது வன்னியருள் ஓர் வன்னியன் கண்டி நகரில் திஸ (DISAVA) ஆக இருந்தான். இவனே சிங்கள மக்களுள் வன்னிய குலம் வளர்வதற்கு காரணமாயிருந்தான்” என்று குறிப்பிடுகின்றார்.

வன்னிக்கு வெளியேயும் வன்னியசிங்கம், வன்னியகுலம், வன்னியகுலசிங்கம் முதலான பெயர்களும் சிங்கள மக்களிடத்து வன்னியாராய்ச்சி முதலான பெயர்களும் காணப்படுவது வன்னியர்களின் பெருமைக்கு இன்றும் சான்றாக விளங்குகின்றது.

உலகின் இறுதித்தனித்தமிழ் இராச்சியம் வன்னி இராச்சியம் என்பதை கற்சிலை மடு என்ற இடத்தில் பண்டாரவன்னியனைத் வொன்றிபேக் என்ற பிரித்தானிய தளபதி தோற்கடித்தாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் நிரூபிக்கின்றது. அந்தவகையில் வன்னிராச்சியம் அடங்காபற்று என்ற பெயரிலே அழைக்கப்பட்டு வந்தது. சுதந்திரத் தனித்தமிழ் இராச்சியமான அடங்காப்பற்றை ஆட்சிசெய்த மன்னர்களுக்குள்ளே கயிலாய வன்னியன், பண்டாரவன்னியன் ஆகியோர் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கினார்.                                                                                                                                                                                                                                                                  
வன்னியில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் மிகுந்த நாகரிகத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் தமிழர்கள் என்று பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

பனங்காமம் என்னும் இடமே வன்னியின் பிரதான தலைநகராக இருந்தது. வன்னியின் பிரதான நகரங்களில் ஒன்றாக வவுனிக்குளம் இருந்தது. சிவனுக்கும் விஸ்ணுவுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பல கட்டிடங்கள் இவ்விடம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.லூயிஸ் அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார். இந்துசமய புராதன ஆலயங்களும் வன்னிக் குடியிருப்பூக்கள் அதிகம் இருந்த பகுதிகளாக இராசேந்திரன் குளம், மகாகச்சக்கொடி, சின்னபூவரசங்குளம் ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ரூபன்மடு, ஓமந்தை, தண்ணிமுறிப்பு, புதுமுறிப்பு, பண்டாரகுளம் என்பனவும் கலப்பில்லாத வன்னி பெரும் நகர்கள். வன்னியில் அமைந்துள்ள கும்பகர்ணன் மலையில் சில தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வவுனியாவில் நூற்றுக்கணக்கான செப்பு நாணயங்கள் 2014ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல கைவிடப்பட்ட குளங்களும் கால்வாய்களும் உள்ளன. அவற்றில் தமிழ் சொல்லின் பழமையை உணர்த்தும் குறிஞ்சாக்குளத்தேக்கம், பேராறு என்பன அவற்றில் முக்கியத்துவமானது.

சரித்திர ஆசிரியர் திரு. லூயிஸ் அபிப்பிராயத்தின்படி வன்னியில் ஆதிக்கால குடியிருப்புக்களில் ஒன்றாக வவுனியா மகாகச்சக்கொடி இருந்தது. வவுனியா அன்று பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. வன்னியின் இடப்பெயர்கள் மடு , கேணி, ஓடைவில், குளம் என்ற பெயர்களுடன் முடிவடைவது இதன் தனித்தமிழ் தன்மையைக் குறிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1888ஆம் ஆண்டில் வெள்ளி இலட்சிணைகள் கண்டெடுக்கப்பட்டன. (சூரியன், மரம், எருது, ஆர்ச் வடிவில் அமைந்த உருவங்கள்) இவற்றினை ஆராயந்த வணக்கத்திற்குரிய பிதாகௌாஸ் இப்பொருட்கள் சிந்துவெளியில் மொகஞ்சதாரோ ஹெரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஒத்ததாக இருந்ததாக குறிப்பிடுகின்றார்.

வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இப்பிரதேசம் நாகரிகம் வாய்ந்த மக்கட் கூட்டத்தினரின் குடியிருப்புக்களாக விளங்கியுள்ளன என்பதற்கு 1985ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி குஞ்சுப்பரந்தனில் கண்டு அகழ்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி சான்றாகியது. வன்னிநாட்டில் முதன்முதல் கண்டறியப்பட்ட தாழி இதுவே. திராவிட நாகரிகம் இங்கெல்லாம் பரவிநிலை கொண்டிருந்தது என்பதற்கு முறையான ஆதாரமாக இத்தாழி அமைகின்றது.

இவ்வாறு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் வரலாற்றில் வட இலங்கையில் பரந்த விரிந்திருக்கும் வன்னிப் பிரதேசத்தின் வரலாறு முக்கிய இடத்தை வகிக்கின்றது. “வன்னி பிரதேசம் மிகப்பழைமையான வரலாறுள்ள பிரதேசம், கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இங்கு சிற்றரசுகள் தோன்றியிருந்தன. அனுராதபுரம், பொலன்னறுவை அரசுகளின் எழுச்சியினால் இச்சிற்றரசுகள் வீழ்ச்சியடைந்தன. மீண்டும் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வன்னிச்சிற்றரசுகள் தோற்றம் பெற்றன” என கலாநிதி கா. இந்திரபாலா குறிப்பிடுகின்றார். இனி வினாவிற்குச் செல்வோம்.

பரந்த அளவில் பலரும் ஈடுபடமுடியாத துறையாக விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஈடுபட்டிருப்பது தொல்லியல் துறையில் உள்ள கடினத்தையும் சிரமத்தையும் புலப்படுத்துகின்றது. இது ஒரு நுட்பமான ஆய்வுக்கலை, வரலாற்று உண்மைகளை துருவித்துருவி தேடி ஆய்வுசெய்வதற்கு நுண்புலமும் நீடித்த பொறுமையும் தேவை. உண்மைகளை உள்ளவாறு கண்டுகொள்ள பக்கஞ்சாரா நடுநிலைமையும் வேண்டும். ஆனால் நமது நாட்டைப் பொறுத்த அளவில் பல மட்டங்களிலும் ஊடுருவியுள்ள இனவாதம் தொல்லியல் ஆய்வையும் விட்டுவைக்கவில்லை. கடந்தகாலங்களில் இத்துறையில் குறுகிய இனவாத நோக்கோடு ஈடுபட்ட சிலர் உண்மைகளைத் திரித்தும் மாற்றியும் மறுத்தும் வந்துள்ளமை துரதிட வசமானது. அண்மைக்கால ஆய்வுகள் அவற்றை இனங்காட்டுவதோடு நிராகரித்தும் வருகின்றன. வன்னிபிரதேசம் தொல்லியல் துறையில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களாக காணப்படுகிறது. இவ்வன்னி பிரதேசம் பற்றி ஆங்கிலேயர் வெளியிட்ட நூல்களில் தான் ஓரளவு இதன் பழைமையைக் கூறுகின்றன. இவற்றுள் 

  • லூயிஸ் 1895இல் வன்னி பற்றி எழுதிய நூலும் (LEWIS J.P. 1895)
  •  போக் என்பவர் எழுதிய 1888இல் மன்னார் பற்றி எழுதிய நூலும் குறிப்பிடத்தக்கவை.
அத்துடன் நம்மவர் மத்தியில் அருகிக் காணப்படும் வரலாற்றுப் பாரம்பரிய உணர்வும் இத்தகைய தொல்லியல் சான்றுகள் அருகிக் காணப்படுவதற்கான காரணிகளில் பிரதானமானவை என்பதை மறுப்பதிற்கில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் வன்னியைப் பொறுத்தவரை தமிழர்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களது வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பழம் பெருமைகளை தேட வேண்டிய சூழ்நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

வன்னியின் வரலாறுகள் இன்னமும் புரியாத புதிராகவே இருப்பினும் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் பல தொல்லியல் சின்னங்கள் எமக்கு வன்னியின் தொன்மையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இதனை முறையாக எவரும் ஆராயப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். வன்னி எவ்வளவு பழமைவாய்ந்தது, அதன் ஆரம்பம் என்ன? என்பது தொடர்பில் எவரும் விடை தேட முன்வரவில்லை.

ஆனால் வன்னி தொடர்பாக சில நூல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. அடங்காப்பற்று வன்னி வரலாறு, வன்னியர், பண்டாரவன்னியன் வரலாறு போன்ற நூல்கள் வெளிவந்திருப்பினும் வன்னியின் தொன்மை தொடர்பில் எவ்வித நூல்களும் வெளிவரவில்லை. ஈழத்தை ஆராய்ந்து நூல்களை வெளியிட்ட வரலாற்று ஆராய்வாளர்கள் வன்னியின் தொன்மையை ஆராயாமல் விட்டதும், வன்னயினைப் பற்றி அறிய முற்படாததம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் வன்னியின் வரலாறு அதன் தொன்மை போன்றவற்றினை ஆராய முயற்சி செய்திருந்தால் வன்னியின் தொன்மையினை அறிந்துக்கொள்ளலாம் அல்லவா?

ஆங்கிலேயர் இலங்கை வந்தபோது யாழ்ப்பாணம், கண்டி, கோட்டை ஆகிய மூன்று இராச்சியங்கள் காணப்பட்டதுடன் கொழும்பு , திருகோணமலை துறைமுகங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றினை கைப்பற்றுவதற்கு ஆர்வம் காட்டி வெற்றியும் பெற்றனர். இதனால் இப்பிரதேசங்கள் இன்றும் பிரசித்துப் பெற்றவையாக இருக்கின்றன. ஆனால் வன்னியைக் கைப்பற்ற வேண்டும் என்பதோ பண்டாரவன்னியனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதோ அவர்களின் இலக்காக இருக்கவில்லை. ஆனால் வன்னி என்ற சுயஇராச்சியம் இலங்கையில் இருப்பதை ஆங்கிலேயர் விரும்பவில்லை. எனவேதான் வன்னியை கைப்பற்ற முனைந்தனர். இதனால் வன்னியின் சில பகுதிகள் யாரும் அறியாததாய் விளங்கியது.

அதுமட்டுமல்ல 1796 – 1948 வரையான ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னியின் தொன்மைகளை ஆங்கிலேயர் அழித்திருக்கலாம் அல்லது வன்னிமக்கள் அதனை பேணி காக்காமல் விட்டிருக்கலாம். எவ்வாறுதான் இருந்தாலும் வன்னியின் தொன்மைக்கு சான்றுகளாய் இருக்கும் கோயில்கள், சுடுமண்கிணறுகள், கல்வெட்டுக்கள் போன்றன வன்னியின் தொன்மையைக் எடுத்தியம்பவே செய்கின்றன.

1948ஆம் ஆண்டுவரை காணப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னியின் தொன்மை தொடர்பான ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் எதவும் நடைபெறவில்லை. அதற்குப்பின் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்னயின் தொன்மையை ஆராயந்தால் தமிழர்கள் பற்றிய வரலாறு ஆதாரங்களுடன் நிரூபிக்கபட்டு விடும் என்ற அச்சத்தினால் அவற்றை மூடிமறைத்திருக்கலாம். அதனைவிட இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு யுத்தத்த்pனால் மேலும் வன்னியின் தொன்மைகளை பறைசாற்றும் கட்டிடங்கள், கல்வெட்டுக்கள், தொல்லியல் இடங்கள் பல அழிவுற்றிருக்கலாம்.

பாளி இலக்கியங்கள் கலிங்கமாகனுடைய படைகள் கோட்டைகள் இருந்த இடங்களாக கூறுவனவற்றுள் பெரும்பாலானவை வன்னிபிராந்தியத்துள் உள்ளடங்குகின்றன. இவ்விடங்களையே பி;ன்னர் சாவகனும் தனது பாதுகாப்பான இடங்களாக பயன்படுத்தியுள்ளான். இலங்கை வரலாற்றாய்வில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத பிராந்தியங்களில் இதுவும் ஒன்று. இதற்கு இவற்றின் பெரும்பகுதி காடுகளாகவும் மக்கள் நடமாற்றமற்ற பகுதிகளாகவும் இருந்துவந்தமை ஒரு காரணமாகும்.

13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் வடஇலங்கையில் தமிழரசு ஒன்று தோன்றியதெனக் கூறிய பேராசிரியர் இந்திரபாலா பிற்காலத்தில் வன்னிப்பிராந்தியத்தில் உள்ள முத்தையன்கட்டு, மல்லாவி போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட அழிபாடுகளைப் பார்த்து அவை பழைய இராசதானியின் சிதைவுகளா? அல்லது சோழர்காலத் தலைநகரங்களில் ஒன்றா? என்ற கேள்வியை எழுப்பினார். இக்கூற்றுக்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்றுப் பழமையை வன்னியிலும் ஆராயப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

இலங்கையில் 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வரலாற்று பாடநூல்களில் வன்னியினையும் வன்னியின் தமிழரசுகளைப் பற்றியும் பண்டாரவன்னியன், கயிலாய வன்னியன் போன்ற மன்னர்களின் வரலாறுகள் இணைக்கப்பட்டபோதிலும் தற்போதைய வரலாற்று பாடநூல்களில் வன்னி பற்றிய வரலாறு நீக்கப்பட்டிருப்பது ஏன்? இதனாலேயே தற்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வன்னி என்ற ஓர் இராச்சியம் இருந்தது பற்றியும் அங்கு வீரத்தமிழர்கள் ஆட்சி செய்தமை மற்றும் அதன் தொன்மை பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.

வன்னியின் தொன்மைகள் மறைக்கப்பட காரணம் என்ன? இதற்கு பாரபட்சமற்ற நேர்மையான திரிவுபடுத்தப்படாத தொல்லியல் ஆய்வுகள் தேவை.  அகழ்வாய்வுகளின் பெறுபேறுகள் பாரபட்சமற்ற முறையில் அணுகப்படல் வேண்டும். நடுநிலை நின்று இவற்றை ஆராய வேண்டும். இது சாத்தியமாகுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



சுரேஸ்குமார் சஞ்சுதா
வவுனியா

1 comment:

  1. சஞ்சுதா உங்களது கட்டுரை வாசித்தேன். நன்றாக உள்ளது. இதுபோன்று பொதுவான ஆய்வுகளுடன் நுண்ணிய பார்வை கொண்ட சிறப்பாய்வுகளும் ஒவ்வோர் விடயம் தொடர்பிலும் ஆராயப்படுதல் அவசியமாகும். இதற்கான முயற்சிகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டுமென விரும்புகின்றோம்.

    ReplyDelete

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...