Monday 22 June 2020

இலங்கை யாருக்கு சொந்தம்? உண்மையில் நடந்தது என்ன?

                                                     
                                                                 
                                                            

தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற வகையில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு. அதேவேளை அவை இலங்கையின் தமிழரின் வரலாற்றை அறிய அதிகம் உதவவில்லை என்ற மனக்குறையுமுண்டு. இதனால் பாளி இலக்கியங்களைக் அடிப்படை மூலாதாரமாகக் கொண்டு எழுந்த பிற்கால வரலாற்று நூல்களில் தமிழரின் பண்டைய கால வரலாறு ஒப்பீட்டளவில் மிகத் தொய்ந்த நிலையிலே உள்ளது. பௌத்த சமயத்தை முதன்மைப்படுத்தும் நோக்கில் எழுந்த இப்பாளி நூல்களில் சில வரலாற்று உண்மைகளோடு பல கட்டுக்கதைகள், ஐதீகங்கள், பக்கச்சார்பு போன்ற குறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் தொல்லியல் ஆய்வு வளர்ந்த நிலையிலும் இலங்கையின் பண்டையகால வரலாற்றை அறிய அவற்றையே ஒரு முக்கிய மூலாதாரமாகக் பயன்படுத்த தவறுவதில்லை. அவற்றைக் கூட சிங்கள மக்களுக்கு சார்பானதாகப் பார்க்கப்படும் அளவிற்கு தமிழருக்குச் சார்பானதாகப் பார்ப்பதில்லை.

ஆம், கிமு3ஆம் நூற்றாண்டில் விஜயன் தலைமையில் 700 பேர் வடஇந்தியாவிலிருந்து இலங்கையில் குடியேறியதாகப் பாளி நூல்கள் (மகாவம்சம்) குறிப்பிடுகின்றன. இதனை சிங்கள மக்களின் புலப்பெயர்வுக்குரிய முக்கிய சான்றாகக் காட்டப்படும் அதே வேளை அதே பாளி இலக்கியமான மகாவம்சம் இவ்வாறு குடியேறியவர்களுக்காக 700 மணப்பெண்களும் 18 தொழில் தெரிந்த 1000 குடும்பங்களும் தமிழ்நாட்டிலிருந்து( பாண்டியநாடு) வந்து குடியேறியதைக் ஏன் தமிழர் புலப்பெயர்வு நடந்ததற்குரிய சான்றாக எடுத்துக் கொள்வதில்லை.

1546இல் அட்சி செய்த புவனேகபாகு மன்னன் தன் கையெழுத்தை தமிழில் எழுதியுள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்றோமா?.  விஜயன் இலங்கை வருகையின் பின்னரே பௌத்தமதம் சிங்களவர்களும் கொண்டுவரப்பட்டனர். அதற்கு முன்னரே இலங்கையை இராவணன், குவேனி, சங்கிலிபாண்டியன் போன்ற தமிழ் மன்னர்கள் தான் ஆட்சிசெய்தார்கள் என்று அறிந்திருக்கின்றோமா? இவை எல்லாம் பாடப்புத்தகங்களிலும் வரலாற்று நூல்களிலும் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்துள்ளன. வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றவனே விஜயன். இவன் தான் முதல் சிங்கள அரசை நிறுவியவன் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அதற்கு முன்னரே தமிழர்கள் தான் இலங்கையை ஆட்சி செய்தார்கள் என்பதை தன்னையும் அறியாமல் மகாவம்ச அசிரியர் சில இடங்களில் குறிப்பிட்டுவிடுகின்றார். மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரே இயக்கர் நாக அரசு காணப்பட்டதாகவும் இயக்கர் நாகர்களை என்பவர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் வாழ்ந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு அவர்கள் அமானுஷ்யர்கள் என்று தவறாகக் குறிப்பிடுகின்றது. அதன் மூலம் நாம் அறியலாம் மகாவம்ச ஆசிரியர் சிங்கள இனத்தையும் அரசையும் முதன்மைப்படுத்தும் நோக்கோடு இலங்கை மூத்தகுடி தமிழர்களை எவ்வாறு கேவலமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு அழகாக சித்தரித்து விட்டார்.

விஜயன் வந்த போது இலங்கையில் குவேனி நூல் நூற்றுக்கொண்டிந்த வரலாறு எமக்கு அனேகமாக தெரிந்திருக்கும். இந்த குவேனி என்ற சொல் கவினி என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு. கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள்.  இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கின்றது மகாவம்சம். 
                                                      

1956இல் “விஜயனின் வருகை” என்ற சிறப்பு தபால் தலை ஒன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும் கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து “ விஜயன் வந்த போதே குவேனி என்ற தமிழ்பெண் இருந்திருக்கிறாள்” என்று கூறினால் இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே இந்த தபால் தலையை வாபஸ் பெற வேண்டும் என்று கூறவே அத்தபால் தலை வாபஸ் பெறப்பட்டது.. ஆனால் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவிவிட்டது

பிரித்தானியரால் இலங்கை 1815இல் கைப்பற்றப்பட்டபொது மன்னன் விக்கிரமராஜசிங்கன் :விக்கிரமராச சிங்கன் என்கிற கண்ணுசாமி” என்று தமிழில் கையெழுத்த இட்டார். கண்டி அமைச்சர்களாக இருந்த சிங்களவர்களும் தமிழில் கையெழுத்திட்டார்கள். சிங்களவர் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்து இட்டதால் அப்பொழுது கண்டியில் தமிழ்தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது என்பது புலனாகின்றது. கண்டி மன்னன் எழதிக் கொடுத்த சாசனம் இன்றும் இலங்கை ஆவணக்காப்பகத்தில் இருக்கிறது.

ஏன் மகாவம்சம் குறிப்பிடும் வரலாற்று சம்பவங்களான கி.மு2அம் நூற்றாண்டைச் சேர்ந்த சேனன், குத்திகன் எல்லாளன் ஆட்சியும் அன்று கிறிஸ்தவ சகாப்பதத்திற்கு முன்பு இப்பிராந்தியத்தில் தமிழ்மொழி பேசியோர் வாழ்ந்ததை உறுதிபடுத்துகின்றன.

சமகால பாளி இலக்கியங்களிலும் சோழர் பாண்டியர் பற்றிய செய்திகளோடு இலங்கையில் ஆட்சி செய்த  பழையமாறன், பிழையமாறன் போன்ற தமிழ் மன்னர்கள் பற்றியும் கூறுகின்றன. இத்தமிழ் மன்னர்களை அன்னியர், ஆக்கிரமிப்பாளர்கள், சோழநாட்டவர்கள் என அவர்களின் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டு கூறும் பாளிநூல்கள் ஏனைய மன்னர்களை இந்நாட்டக்குரியவர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வரலாற்று சாதனைகளை விபரமாகக் குறிப்பிடுகின்றது. பாளி நூல்கள் தரும் இவ்வரலாற்றுச் செய்திகளை ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பாளி இலக்கியங்கள் தரும் இந்நாட்டு மன்னர்களை சிங்கள இனத்தவராகவும் தமிழ் மன்னர்களை அவ்வவ் காலக்கட்டங்களில் தமிழகத்திலிருந்து வர்த்தகராக, படையெடுப்பாளராக அவ்வவ்போது வந்து போன சோழ, பாண்டிய வம்சத்தவர்கள் அல்லது நாட்டினைச் சேர்ந்த ஆட்சியை கைப்பற்றிய அந்நியர்கள்  எனக்கூறுவது ஏன்? சிங்கள மன்னர்களை இந்நாட்டுக்குரியவர்களாக காட்டுவதே நோக்கமாகும். ஆனால் பெருங்கற்காலக் குறியீடுகளிடையே காணப்படும் ஒற்றுமைகளை நோக்கும் போது இவர்களை அப்பண்பாட்டுடன் இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறிய தமிழராகக் கூறுவதே பொருத்தமாக உள்ளது ஆனால் இதனை பாடப்புத்தகங்களிலும் வரலாற்று நூல்களிலும் இவ்வுண்மை மறைக்கப்படுகின்றது.

வடஇலங்கையில் கி.பி7ஆம் நூற்றாண்டிலே தமிழ் அரசு ஒன்று உருவாகிவிட்டது. என்பதை 10ஆம் நூற்றாண்டில் கதிரைமலையும் சிங்கைநகரும் பல வரலாற்று சான்றுகளைத் தருகின்றன. இலங்கையில் எழுதப்பட்ட பாளி இலக்கியங்களில் ஒருசார்புத்தன்மை கொண்ட வரலாற்றுப் புனைவினால் பௌத்தம் சாராத பல செய்திகள் மறைக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் விட்டன. இதனால் தமிழ் அரசு பற்றிய செய்திகள் தெளிவற்;று இருந்தன. எனினும் அண்மைக்கால தொல்லியல் சான்றுகள் இந்த இருண்ட பகுதியைப் பற்றி ஓரளவு வெளிச்சம் தந்துள்ளன.

கல்வெட்டுக்களில் வரும் சொற்செறிவு ஒரு மொழியைத் தீர்மானிக்க உதவுமா? என்ற கேள்வி மொழியியல் கல்வெட்டு அறிஞர்களிடையே இருப்பினும் அவை அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மொழியினை இனங்காண உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழ் கல்வெட்டு மொழியாக மட்டுமன்றி வளமான சங்க இலக்கியத்தை முதலில் படைத்த மொழியாகவும் உள்ளது.  அப்போது இலங்கைத் தமிழர்கள் புலவர்களாகவும் வணிகர்களாகவும் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததாகவும் சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி தமிழக பிராமிக் கல்வெட்டுக்களும் உறுதிபடுத்துகின்றன. சமகாலத்தில் தமிழகத்தை அடுத்து தமிழரோடு தொடர்புடைய ஒரு நாடாக இலங்கை இருந்ததை இலங்கை பாளி நூல்களும் பிராமிக் கல்வெட்டுக்களும் கூறுகின்றன. இச்சான்றுகளை பண்டுதொட்டு இலங்கை மண்ணோடு தமிழருக்குள்ள உரிமையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். அதை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றாக பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன.

அந்தவகையில் இலங்கையின் வரலாற்றை ஆரம்பத்தில் ஆய்வு செய்த பரணவிதான போன்ற வரலாற்று ஆய்வாளர்களினால் உண்மை மறைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்காலத்தில் பேராசிரியர் பத்மநாதனும், பரமு புஸ்பரட்ணம் போன்ற ஆய்வாளர்களினால் உண்மை தமிழர் வரலாறு சிறிதளவாயினும் வெளிவந்தமை மகழ்ச்சிக்குரியதே.

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக நீண்ட காலம் 44ஆண்டு ஆட்சி செய்த எல்லாளன் என்ற தமிழ் மன்னன் தமிழ்நாட்டிலிருந்து வந்த படையெழுப்பாளன் எனப் பாளி நூல்கள் கூறுவதை உண்மையான சான்றாக ஏற்றுக் கொண்டால், ஏன் அதே பாளி நூல்கள் குறிப்பிடும் எல்லாளனுக்கு பின் தமிழர்கள் படையெடுப்பின்றி கி.மு1ஆம் நூற்றாண்டில் ஆட்சியாளர்களாக வந்ததை இந்நாட்டுக்குரிய தமிழ்மன்னர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தமிழரின் உண்மையான பூர்வீக வரலாறு இலங்கையிலும் தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளால் தெளிவு பெறவேண்டியுள்ளது.  இதில் இலங்கை தமிழருக்குரிய சான்றுகள் காணக்கூடிய இடங்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற குறைபாடு நியாயமானதாக இருப்பினும் கிடைத்த சான்றுகள் கூட முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

இலங்கையின் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந்தவர்களுள் பேராசிரியர் பரணவிதானவுக்கும் பெரும் பங்கு உண்டு. பல மொழிகளில் அவருக்கு இருந்த புலமை காரணமாக அவர் பிராகிருதம் , சிங்களம், தமிழ் போன்ற பல மொழிக்கல்வெட்டுக்களையும் ஆராய்ந்துள்ளார். ஆயினும் ஆரம்பகாலங்களில் வரலாற்றுச் சான்றுகளை நிதானமாக பயன்படுத்திய அளவுக்கு அவர் பிற்காலத்தில் பயன்படுத்தவில்லை. அத்துடன் கல்வெட்டுகளுக்குரிய பிராகிருத மொழியை சிங்கள மொழியின் பழைய வடிவம் எனவும், இவை காணப்படும் இடங்களில் எல்லாம் சிங்கள மக்களே வாழ்ந்தனர் என்றும் நியாயப்படுத்தினார். இதன்மூலம் இலங்கை முழுவதிலும் முன்பொரு காலத்தில் சிங்கள மக்களே வாழ்ந்தனர் என்ற கருத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

பண்டைய காலத்தில் இலங்கை தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக கி.பி 1885ஆண்டு புரோடி என்பவரால் தோணிக்கல் என்ற கல்வெட்டும், கி.பி1880 அளவில் ஆங்கிலேயரது நிர்வாகத்தில் உயர்பதவி வகித்த பாக்கர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வவுனியா பெரியபுளியங்குளம் உன்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டும் பண்டைய காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றெனக் கூறினர். ஆனால் இவர்கள் கருத்தை பிற்காலத்தில் கோல்சிமித், முல்லர், பெல், பரணவிதான போன்றோர்கள் மறுத்தனர். 

                                                             
இலங்கையில் அம்பாறையில் குடுவில் என்ற இடத்தில் கிடைத்த 2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த தீச என்ற தமிழன் பற்றிக் கூறுகின்றது. அனுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று தமிழர்கள் ஒன்றுகூடி வணிகம் தொடர்பான ஆலோசனை நடாத்த மண்டபம் ஒன்றை அமைத்ததாகவும் அவ்வணிக குழுவில் திசஹ என்ற தமிழனும் ஈடுபட்டதாகவும் கூறுகிறது. கி.பி 2ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சிபரிந்த இளநாகனிpன் பட்டத்தசியாக இருந்த தமிழ்தேவியின் புதல்வன் பிற்காலத்தில் தீஸ என்ற பெயருடன் அனுராதபரத்தில் 7 வருடம் 8 மாதம் ஆட்சி புரிந்ததாக பாளிநூல்கள் கூறுகின்றன. இச்சான்றுகள் இலங்கை தமிழர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களாகும்.

பேராசிரியர் கலாநதி பு.புஸ்பரட்ணம் அவர்கள் இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்குரிய சான்றுகளை நிறுவியுள்ளார். வடக்கு தமிழர்கள் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் தமிழர்களே இலங்கையின் பூர்வகுடி மக்கள் என்பது தொடர்பி;ல் வரலாற்றினை அறிந்துக்கொள்ள வேண்டும். 

அத்துடன் இலங்கையின் பல பாகங்களிலும் இந்து ஆலயங்கள் (கதிர்காமம், சிவனொளிபாதமலை, சிலாபம் முன்னெச்சரம், திருக்கேதீஸ்வரம், திருகோணேஸ்வரம்) இன்றும் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் அவதானிக்கும் போது இலங்கையில் தமிழர்களே பூர்வகுடிகள், இலங்கை தமிழர்களுக்கே சொந்தம் என்பதுடன் வந்தேறு குடிகள் சிங்களவர்கள் என்ற உண்மை வெளிப்படுகின்றது. இலங்கை தமிழர்களுக்கே சொந்தம் என்பதை எடுத்துக்காட்ட பல ஆதாரங்களை முன்வைக்கலாம். ஆனால் கட்டுரை நீண்டுக்கொண்டெ செல்வதால் இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.




No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...