Sunday 21 June 2020

வீரபாண்டியன் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் மட்டுமல்ல ஒரு கோழை

     

வீரபாண்டியன் கட்டபொம்மன் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரத்தமிழனும் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” என்ற வீர முழக்கமும் ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம், மிடுக்கான வீரம், வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி ஆள நினைத்த வெள்ளையருக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலமாக வர்ணிக்கப்படுகிறார் வீரபாண்டியன் கட்டபொம்மன். ஆஹா ஒரு கள்வனை கொள்ளைக்காரனை எவ்வாறு எல்லாம் வர்ணித்திருக்கிறார்கள். ஆம் உண்மையில் அவன் ஒரு கொள்ளைக்காரனே! உண்மையில் சிவாஜி கணேசனால் நடித்து வெளியிடப்பட்ட வீரபாண்டியன் கட்டபொம்மன் எனும் திரைப்படத்தின் பின்பே வீரபாண்டியன் கட்டபொம்மன் எனும் பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற வீர வசனங்களே கட்டபொம்மனை இன்று வரை ஓர் வீரனாகக் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

வீரத்தின் விளைநிலமாக விளிக்கப்படும் வீரபாண்டியன் பொம்மு வம்சாவளியில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் ஜனவரி மூன்றாம் திகதி 1760 ஆம் ஆண்டில் பிறந்தார் என்கிறது காவியம்.

நம்மில் பலபேர் வீரபாண்டியன் கட்டபொம்மன் தமிழர் என்றும் சுதந்திரப்போராட்ட வீரர் என்றும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் திராவிடர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் என்று எமக்கு தெரியுமா?

கட்டபொம்மன் புகழ்பாடுகின்ற “கலியுகப் பெருங்காவியம்” எனும் கவிதை நூல் மாபெரும் அபத்தக் களஞ்சியமாகும். மேலும் கர்ண பரம்பரை கதைகளை சில நாடோடிப் பாட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு வீரபாண்டியம் என்ற கவிதைநூல் கவிராஜ் பண்டித ஜெகவீரபாண்டியனார் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் எனும் உரைநடை சு}லையும் இவர் இயற்றியுள்ளார். இவ்உரைநடைநூலை ஆதாரமாகக் கொண்டு பலபேர் பல நூல்களை கட்டபொம்மன் பற்றிய பிற அராய்ச்சிகள் எதுவுமின்றி எழுதியுள்ளனர்.

கலியுகப் பெருங்காவியம் 4000 பாடல் கொண்ட புனை சுருட்டும் புராணத்தை நமச்சிவாய கவிராயர் எனப்படும் பஞ்சாட்சரக்கவிராயர் எழுதியுள்ளார். இவர் கொள்ளைக்காரன் கட்டபொம்மனின் கத்தி முனையில் பயந்து அக்காவியத்தை உளரிக் கொட்டிருக்கலாம்.

மறைந்த தமிழ்வாணன் எனும் ஆசிரியர் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற புத்தகத்தை எழுதி வெளியிடுவதற்கு முன் கட்டபொம்மன் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது அவர் ஒரு பேராசிரியரிடம் தன் ஆராய்ச்சியை எடுத்துக்கூறியுள்ளார். அதற்கு அந்த பேராசிரியர் கட்டபொம்மன் தெலுங்கன் தான். அதில் ஐயமில்லை. உன் ஆராய்ச்சி கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று சொல்லுகிறது. அதை உண்மையென்று வைத்து கொள்வொம். கட்டபொம்மனைக் கொள்ளைக்காரன் என்று சொல்ல இந்த நேரத்தில் எவருக்குத் துணிவிருக்கின்றது. கட்டபொம்மனை வீரபாண்டியனாக்கிய பின்பு  அவனைக் கொள்ளைக்காரனாக்குவது தேவையற்றது. பல ஆண்டுகள் பாடுபட்டு நிலைநிறுத்திய ஒரு வீரனின் புகழை ஏன் பாழ்படுத்த வேண்டும் என்றார். என தமிழ்வாணன் தன்நூலில் குறிப்பிட்டிருந்தது நோக்கத்தக்கது. இப்பேராசிரியரைப் போன்றவர்களாலே உண்மை வரலாறு மழுங்கடிக்கப்படுகிறது என்பது எனது கருத்தாகும்.

உண்மையில் இக்கட்டுரை எழுதப்படுவதற்கு முன்னர் நானும் வீரபாண்டியன் கட்டபொம்மன் வீரத்தமிழன், வெள்ளையரை எதிர்த்த முதல் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கின்றேன். தமிழ்வாணனின் “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” எனும் புத்தகத்தை வாசித்ததன் பின்பே உண்மையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் என்பவன் யார் என்பதை புரிந்துக்கொண்டேன்.

கட்டபொம்மு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் 47வது பாளையக்காரனாக ஆட்சி செய்தான் என காவியங்கள் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் ஆரம்பத்தில் பாளையங்களில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே காணப்படவில்லை. பாளையங்கள் நாயக்கர் ஆட்சியில் சிறிது சிறிதாக பெருகின. அவை பற்றி பல ஏட்டுச்சுவடிகளில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று கூட பாஞ்சாலங்குறிச்சி என்ற ஒரு பெயரே காணப்படவி;ல்லை. குறிப்பாக பாளையங்களின் தோற்றத்தினை ஆராய்வதன் மூலம் உண்மை புலப்படும். பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டிய நாடு 52 பிரிவுகளாகப் பரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவுகளுக்கு கூற்றங்கள் என்று பெயர். பழங்காலத்து கூறறங்களின் அமைப்பு முறையை பின்பற்றியே பாளையங்கள் எனும் குறுநிலப்பகுதி அமைக்கப்பட்டது. அப்படி உருவான மறவர் தமிழ் பாளையங்கள் பின்வருமாறு:
1.    இராமநாதபுரம்
2.    புதுகோட்டை
3.    சொக்கம்பட்டியென்ற வடகரை
4.    ஏழாயிரம் பண்ணை
5.    நெற்கட்டுஞ் செல்வம்
6.    வீரகேரளம் புதூர் என்ற ஊற்றுமலை
7.    சிவகிரி
8.    சேத்தூர்
9.    சிங்கம்பட்டி
10.   தலைவன் கோட்டை
11.   கொல்லன் கொண்டான்
12.   அழகாபுரி
13.   ஊர்க்காடு
14.   சுரண்டை
15.   கடம்பூர்
16.   மணியாச்சி
இந்தப்பாளையங்களின் ஆட்சிபொறுப்பு ஆங்காங்கு பரம்பரையாக குறுநில மன்னர்கள் போல் வாழ்ந்து வந்த மறவர் தலைவர்களிடம் காணப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தின் பலபகுதிகளில் குறிப்பாக தென்பாண்டிநாட்டின் கீழைப்பகுதி முழுவதிலும் பழங்குடிமக்களாகிய தமிழர்கள் அருகிப்போய் நாயுடுக்கள், நாயக்கர்கள், வன்னியர்கள் முதலிய ஆந்திர இனத்தவர்கள் பெருகி நிறைந்திருந்தனர. இவ்வாறு ஆந்திரர்கள் மிகுந்திருந்த பகுதிகளையும் தனித்தனிப் பாளையங்களாகப் பிரித்து; அவைகளின் ஆட்சிப்பொறுப்பையும் ஆந்திர தலைர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் மறவர பாளையங்களைச் சுற்றி தெலுங்கு பாளையங்கள் தென்பாண்டிச் சீமை, கோவை, சேலம் ,திருச்சி மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை வருமாறு:
1.    எட்டயபுரம்
2.    மேவ்மாந்தை
3.    காடல்குடி
4.    ஆற்றங்கரை
5.    நாகலாபுரம்
6.    குளத்தூர்
7.    கோல்வார்ப்பட்டி
8.    மாவாலி
9.    கொல்லன்பட்டி
10.  அம்மைநாயக்கனூர்
11.   நிலக்கோட்டை
12.   போடிநாயக்கனூர்
13.   கோம்பை
14.   தேவாரம்
15.   கண்டமநாக்கனூர்
16.   தொட்டப்பநாயக்கனூர்
17.   காமயநாயக்கனூர்
18.   மாதவ நாயக்கனூர
19.   தும்பிச்சி நாயக்கனூர
20.   ஏழுமலை
21.   கவுண்டன் கொட்டை
22.   கன்னிவாடி
23.   விரூபாட்சி
24.   ஆய்க்குடி
25.   எமகேலாபுரம்
26.   ஒன்பதூர்
27.   கூழப்ப நாயக்கனூர்
28.   இரகக்க நாயக்கனூர்
29.   சத்திரப்பட்டி
30.   மாத்தூர்
31.   மருங்காபுரி
32.   செங்குறிச்சி
33.   கடவூர் என்ற பிள்ளர விழுங்கி
34.   இராமகிரி
35.   இடையக்கோட்டை
36.   தோகைமலை
37.   வீரமலை
38.   வெள்ளியகுன்றம்
39.   சிறுபாலை
40.   பள்ளியப்ப நாயக்கனூர்
41.   மாம்பாறை
42.   எரியோடு
43.   சொக்கம்பட்டி
44.   மாறனூற்று
45.   தவசிமேசி
46.   அம்பாத்துறை
47.   தேவதானப்பட்டி
48.   தொட்டியன் கோட்டை
49.   அம்பலத்தாறு
50.   மறவநாடு
51.   பழனி
இவற்றோடு வடகரை என்ற பாளையமும் காணப்பட்டது. இந்தப்பட்டியல்களில் எல்லாம் அவதானிக்கும் போது 72 பாளையங்களே காணப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சியின் பெயரே காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. ஏனெனில் அப்படி ஒரு பாளையமே இருக்கவில்லை. என்பதே உண்மையாகும். பாண்டியர்களின் கூற்றங்களிலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் காணப்படவில்லை இவ்வாறு இருக்க கெட்டிபொம்முவின் 47வது பரம்பரை 600ஆண்டு ஆட்சி என கட்டபொம்மனை பற்றி கதை கட்டி திரிவது வேடிக்கைக்குரியதே. பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையமே உருவாகாதிருக்கும் போது எவ்வாறு அவர் பாஞ்சாலங்குறிச்சியின் 47வது பாளையக்காரராக அரியணை ஏற்று 9ஆண்டுகள் 8மாதம் 4நாட்கள் அரசுப் பொறுப்பிலிருக்க முடியும்.

மேலும் அக்காலத்தில் காமநாயக்கன் பட்டியலில் போர்த்துக்கேய பாதிரிகளின் முயற்சியினால் கிறிஸ்த்துவ ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. அதில் குருவாக அமர்ந்த லூயி டி நெல்லோ என்பவர் டி நொ எல்லி என்பவருக்கு 1686இல் சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவர் அப்பகுதியில் வாழ்ந்த பாளையக்காரர்களைப் பற்றிய விவரங்களை அக்கடிதத்தில் எழுதியுள்ளார். அவற்றில் எட்டயபுரத்தைப் பற்றியும் இன்னும் பல கம்பள பாளையஙகளைப் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால் பாஞ்சாலங்குறிச்சியைப் பற்றி எதுவும் எழுதப்படவில்லை.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காட்ர கட்டபிரமையா என்ற ஓர் அடைப்பங்காரனால் தொடக்கி வைக்கப்பட்டது தான் கெட்டிபொம்முவின் பரம்பரை. அதே நூற்றாண்டின் ஆரம்பத்திலே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதியாக இருந்து வந்தார்கள் என்று கட்டபொம்மன் ஆதரவாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இது சரித்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கற்பனை கட்டுக்கதை.

கட்டபொம்முவின் மூதாதையர்கள் தமிழகத்தற்கு வந்ததை பற்றி ஓர் கட்டுக்கதை காணப்படுகின்றது. பல்லாரி நாட்டில் வாடிக்கொட்டை என்னும் ஊரில் பால்ராஜா என்பவன் அரசனாகக் காணப்;பட்டான். அக்காலத்தில் இருந்த தக்கண முஸ்லீம் அரசன் பாலராஜாவின் பெண் மீதுமோகம் கொண்டு மணம் செய்த கொள்ள தூது விட்டான். ஆனால் பால்ராஜாவிற்கு பெண் கொடுக்கவும் சம்மதம் இல்லை. தடுக்கவும் தைரியமில்லாததால் இரவோடு இரவாக பால்ராஜ் தன் குடும்பத்துடன் தன்னாடு விட்டு தென்னாட வந்ததாகவும் இவ்வழிவந்தவர்களே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதியாகி 47 தலைமுறைகள் அரசாண்டனர். என்கிற கட்டுக்கதைக்கு எவ்விதமான சரித்திரச்சான்றும் இல்லை.

உண்மையில் கட்டபொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கம்பளத்தார் வகுப்பில் பல பிரிவினர் உண்டு. அதில் தோலகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் கெட்டிபொம்முவின் பரம்பரையினர். அத்துடன் கட்டபொம்முவிற்கும் பாண்டியருக்கும் எந்தவித சம்மதமும் இல்லை. இதனை கட்டபொம்முவின் பரம்பரையின் தோற்றத்தின் மூலம் அறிந்துக்கொள்ளமுடியும்.

இந்தவகையில் கட்டபொம்முவின் மூதாதையர்கள் ஊர்ஊராக ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்த நாடோடிகள் தான். நிலையாக ஓரிடத்தில் தங்கிப் பழக்கமில்லாத இவர்களை அரியணையில் அமர்ந்தாண்ட அரச பரம்பரையினர் என்று கூறுவது வரலாறு தெரியாத மக்களை ஏமாற்றுவதற்கான ஓர் வித்தையாகும்.

கட்டபொம்மன் பரம்பரையில் முதல்வன் “காட்ரகட்டபிரமையா” இவன் எட்டயபுரம் பாளையக்காரனான எட்டப்பன் நாயக்கனிடம் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அடைப்பங்காரனாக வேலைபார்த்து வந்தான். இந்த எட்டயபுரம் பாளையக்காரனான எட்டப்பன் நாயக்கனுக்கு பக்கத்து ஊரான செக்காரப்பட்டி எனும் வளம்கொழித்த பகுதியை தன் பாளையத்தோடு சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டான். இந்தசமயத்தில் தென்பாண்டி நாட்டில் பஞ்ச பாண்டியர்களின் வழித்தோன்றலான இளம் பஞ்சவழுதிப் பாண்டியர் என்போர் தென்பாண்டி நாட்டில் வந்தார்கள்.

எட்டப்பனின் திட்டத்தை அறிந்து கொண்ட காட்ரகட்டபிரமையா சூழ்ச்சி மூலம் செக்காரம்பட்டியை கைப்பற்ற எண்ணினான். இதற்காக காட்ரகட்டபிரமையா இளம்பஞ்சவழுதிப் பாண்டியர்களையும் எட்டப்பனையும் மோதவிட்டு அதன் மூலம் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வஞ்சனை செய்தான். அவன் நினைத்ததுபடியே இளம்பஞ்சவழுதிப் பாண்டியர்கள் எட்டப்பனை தோற்கடித்தனர். அப்போதுதான் எட்டப்பனுக்கு தன் அடைப்பங்காரனான காட்ரகட்டபிரமையா புரிந்த துரோகச் செயல் தெளிவாகப் புரிந்தது

அவனை எப்படியாவது பழிவாங்க எண்ணிய எட்டப்பன் அவன்காலத்தில் அது முடியவில்லை. இருந்தாலும் அந்த வஞ்சினம் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்தது. அதுவே அந்த எட்டப்பன் வழித்தோன்றலாகப் பல தலைமுறைகளுக்குப் பின் வந்த வேறோரு எட்டப்பன் என்பவன் காட்ரகட்டபிரமையாவின் மரபில் வந்த கொள்ளைக்காரன் கெட்டி பொம்மவை வெள்ளைக்காரனிடம் காட்டிக் கொடுக்க வைத்தது.

காட்ரகட்டபிரமையாவின் மகன் கட்டபிரமையா. இவன் தந்தையை விட ஏமாற்றுக்காரனாகவும் கொள்ளைக்காரனாகவும் காணப்பட்டான். எதிரிகளோடு நேருக்கு நேர் நின்று போரிடாமல் அவர்களை மறைந்திருந்து தாக்குவதில் கெட்டிக்காரன். இதனால் அவன் வகுப்பைச் சேர்ந்த கம்பளத்தார் அவனைக் கெட்டி பொம்மு என்று அழைத்தனர். அதுவே பரம்பரை பட்டமாகக் வந்து விட்டது. இந்த கெட்டிபொம்மு என்ற பெயர் தான் தமிழில் கட்டபொம்மன் என்று மருவியது. அதுமட்டுமன்றி தனது பெயருக்கு பின் உள்ள பாண்டியன் எனும் பட்டப்பெயரை தனக்கு தானே சூட்டிக்கொண்டவனும் அவன்தான். அதுமட்டுமல்லாமல் இளம்பஞ்சவழுதிப் பாண்டியர்கள் வீரமரணம் எய்தி வீழ்ந்த இடத்தை  கட்டபிரமையா பல வீடுகளைக் கட்டினான். தன் உற்றார் உறவினர் மறறும் தன் இனத்தவரான கம்பளத்தினரையும் அங்கு குடியேற்றி அந்த இடத்துக்கு பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரை வைத்தான். அத்துடன் அதன் தலைநகராக ஜெகவீர பாண்டியபுரம் எனப் பெயர் இட்டான். இதனூடாகவே பாஞ்சாலங்குறிச்சி தோற்றம் பெற்றது. அதற்கு முன்பு பாஞ்சாலங்குறிச்சி எனும் பாளையம் காணப்படவில்லை.

வஞ்சகத்தால் பெற்று வஞ்சகத்தால் உருவாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் கட்டபிரமையா  என்ற கெட்டிபொம்மு நாயக்கன் பாளையக்காரன் எனும் அந்தஸ்தைப் பெற்ற ஆண்டு கி.பி1709 என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. அதாவது 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே அதுவும் முடிவடைந்து விட்டது.

1709இல் பட்டமேற்ற கட்டபிரமையா 1736வரை ஆட்சி புரிந்தான். இவன் தன் பெயரை ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தான். இவன் தன் இனத்தாரை எல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு பெரும் படையை நிறுவி அப்படையின் துணைக்;கொண்டு பக்கத்து பாளையங்களில் எல்லாம் புகுந்து கொள்ளையடிக்கத்தொடங்கினான். அக்காலத்தில் தென்பாண்டி நாட்டில் உள்ள தெலுங்கு பாளையங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி நின்றது எட்டயபுர பாளையம். எனவே குறுக்குபுத்தி மூலம் யோசித்த இவன் எல்லா தெலுங்குப் பாளையங்களிலும் உள்ள கம்பளத்து மக்களும்  ஜக்கம்மா எனும் தேவதையை தங்கள் குல தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். அந்த ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் பெரிய கோவிலை நிறுவி தானே அதற்கு தலைமை பூசகராகவும் ஆக்கிக் கொண்டான். இந்த ஜக்கம்மா கோவில் தான் அவனையும் அவனது பரம்பரையும் தூக்கி விட்டது. ஜக்கம்மா தேவியின் மகிமை எங்கும் பரவத் தொடங்கியது. அம்மையை வழிபடுவதற்கு தெலுங்கு பாளையங்களில் உள்ள மக்கள் எல்லோரும் திரண்டு வந்தார்கள். கம்பளத்தினரும் மற்றையோரும் பூசாரி பிரமையாவின் காலில் விழுந்து வணங்கினார்கள். இதனால் கம்பள பாளையங்களில் தலைமை பதவி நாளடைவில் பாஞ்சாலங்குறிச்சிக்கு மாறி விட்டது.

இவனுக்கு பிறகு இவன் மகன் பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மன் என்பவன் பாஞ்சாலங்குறிச்சியில் கி.பி 1736-1760 வரை பாளையங்காரன் ஆயினான். இவனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன் மகன் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன். அதாவது இவனது பாட்டனாகிய கட்டபிரமையா வைத்துக் கொண்ட புனைப்பெயரையே இவன் இயற்பெயராக சூடினான். இவன் 1760- 1790 வரை பாளையக்காரனாயிருந்து வந்தான்.

இவனுடைய மகன்தான் வீரபாண்டியன் கட்டபொம்மன். இவன் பதவிகாலம் 1760 – 1790 வரை. இவனோடு கட்டபொம்மன் பரம்பரையே முடிந்துவிட்டது. பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் இல்லாமற் போய்விட்டது. அந்தவகையில் கட்டபொம்முவின் பரம்பரையினர் பின்வருமாறு:
1.    காட்ரகட்ட பிரமையா – குல முதல்வன்
2.    கட்டபிரமையா (முதலாம் ஜெகவீரப்பாண்டிய கட்டபொம்மன்)- 1709 - 1736
3.    பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் - 1736 – 1760
4.    இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் - 1760 – 1790
5.    வீரபாண்டிய கட்டபொம்மன் - 1790 – 1799


முதலாம் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் காலத்தில் மதுரையை கைப்பற்றி ஆட்சிசெய்த சந்தாசாகிப் சகோதரன் சாகிப் சாகிபு (சாதிக்கான்) தென்பாண்டி நாட்டில் கப்பம் திரட்டி வருவதற்காக சென்றிருந்தான்.  ஆர்க்காட்டு நவாபின் பிரதிநிதியிடமிருந்;து ஒருவன் கப்பம் வசூலிக்க வந்திருக்கின்றான் என அறிந்ததும் அப்பகுதியில் உள்ள பாளையக்காரர்கள் கப்பம் தர மறுத்தனர். ஆனால் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான முதலாம் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் தன் படைபலம் கொண்டு ஏனைய பாளையக்காரர்களிடம் இருந்து கப்பம் வசூலித்து சாதிக்கானுக்கு வழங்குகின்றான். அந்த உதவிக்காக முதலாம் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மனுக்கு இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு மீதியை இரண்டு தவணைகளில் அனுப்புமாறு கூறியதோடு விலை உயர்ந்த மணிமாலையையும் அணிவித்தான். அத்துடன் அவனுக்கு தென்னாட்டின் சின்ன நவாபு என்ற கௌரவப்பட்டத்தையும் அளித்தான். அந்தவகையில் சந்தாசாகிப்பின் தம்பியாகிய சாதிக்கானிடம் இத்தகைய பட்டங்களையும் பதவிகளையும் பெற்ற முதலாம் ஜெகவீரபாண்டியன் நாட்டினை காட்டிக்கொடுத்தவனாக காணப்படுகின்றான். இதன்பின் 1736ஆம் ஆண்டு காலமானான். இத்தகைய வஞ்சனையும் கொள்ளைக்கார காட்டிக்கொடுத்த பரம்ரையை தான் இதுவரையும் நாம் போற்றிப் புகழ்ந்து வருகின்றோம். இத்தகைய பரம்பரையில் வந்த வீரபாண்டிய கட்டபொம்மனை வீரத்தமிழன் என்றும் வெள்ளையனை எதிர்த்தவன் என்றும் புகழ்பாடுவதும் வேடிக்கை செயலே.


வீரபாண்டியன் கட்டபொம்மன் காலத்தில் தான் ஆங்கிலெயர்கள் முதன்முதலாகப் படையெடுத்தார்கள் என்றும் அவனே முதல் முழக்கம் செய்தவன் என்றும் திராவிடர்கள் வகுத்த கட்டுக்கதை. உண்மை அதுவல்ல. வீரபாண்டியனது பாட்டனாகிய பொல்லாப் பாண்டியனது காலத்திலே ஆங்கிலேயர்கள் படையெடுத்து விட்டார்கள். அப்போது அவனை எதிர்த்து முதல் முழக்கம் செய்தவன் பொல்லாப் பாண்டியன் அல்ல. புலித்தேவன் வரலாறு கூறும் இந்த உண்மையை.


1790 பிப்ரவரி 2ஆம் நாளன்று இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் இவ்வுலக வாழ்வை நீத்தான். அப்போது ஆங்கிலக்கம்பனி “ஆங்கில ஆட்சி ஒரு விசுவாசமுள்ள ஊழியரை இழந்து நிற்கிறது” என்று அனுதாபச் செய்தியை வெளியிட்டது. இதற்குப் பின்னும் வீரபாண்டியன் கட்டபொம்மனை பற்றி ஒரு சாரார் அவன் விடுதலை வீரன் மற்றும் அவனது பரம்பரையயைப் பற்றி புகழ்ந்த கொண்டுதான் இருக்கிறார்கள்.


வீரபாண்டியன் கட்டபொம்மன் பிறந்தது 1760. அவன் பட்டத்துக்கு வந்தது 1790. இறந்தது 1999. மொத்தம் 39 ஆண்டுதான் கட்டபொம்மன் இந்த உலகத்தில் இருந்திருக்கின்றான். அதில் 9 1/2 ஆண்டுகளே பாளையக்காரனாகப் பதவி வகித்திருக்கின்றான். இந்த மிகக் குறுகிய 9 ஆண்டு சரித்திரம் தான் இன்று உண்மையைச் சுருக்கி பொய்மையைப் பெருக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தகையில் நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் அதனை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வம்சத்தைச் சேர்ந்தவனே வீரபாண்டியன் கட்டபொம்மன் எனப்படும் கட்டபொம்மு.


இவன் பக்கத்துப்பாளையங்களில் புகுந்து கொள்ளையடிப்பதிலும் அதனை எதிர்த்த பாமர மக்களை படுகொலை செய்வதிலும் ஈடுபட்டவனே தமிழர்கள் போற்றும் வீரபாண்டியன் கட்டபொம்மன் இவன் தன் தந்தையால் கைப்பற்றப்பட்ட அருங்குளம், அப்பலாபுரம் ஆகியவற்றைத் தவிர எட்டயபுரத்தைச் சேர்ந்த வேறு பல கிராமங்களையும் அவன் ஆக்கிரமிக்கத் தொடங்கினான். இவனது கொடுமையை எல்லாம் அக்கிராமவாசிகள் திருநெல்வெலியில் இருந்த கலக்டர் டோரினிடம் முறையிட்டதாக ஒரு கும்மிப்பாடலை வடித்துள்ளார் அக்காலத்திய நாடோடிப் புலவர் ஒருவர். அப்பாடலின் முதல்வரியை மாத்திரம் எடுத்துக்காட்டுகின்றேன்.
        எட்டயாபுரத்தானோட தகராறு
         “…………………………..
        கட்டபொம்மேந்திரன் துட்ட நடத்தையைக் காட்டி விபரமாய்ச் சொல்லுவாராம்



பல கொடூரமான கொலைகளையும் கொள்ளைகளையும் மேற்கொண்டவனாகவே கட்டபொம்மன் காணப்படுகின்றான். இதற்கு உதாரணமாக சேத்தூர் படுகொலையைக் குறிப்பிடலாம். அதாவது சிவகிரியில் அப்போது பாளையக்காரராக இருந்தவர் வயதில் மூதியவர். அவருக்கு ஒரு மகன் மற்றும் மாப்பிள்ளை வன்னியன் என்ற மருமகன்  ஒருவனும் இருந்தனர். அவர்களோடு பாளையத்தில் உத்தியோகம் பார்த்து வந்த சக்கரலிங்கம் பிள்ளை என்ற ஒருவனும் இருந்தான்.


அந்தவகையில் சூழ்ச்சியினை மேற்கொண்டு சிவகிரி வயோதிபரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவன் மகனுக்கு ஆட்சியைப் பெற்றுக் கொடுக்கவும் அதன் மூலம் பெரும் தொகை லட்சத்தையும் பெற்றுக் கொள்ள எண்ணிய கட்டபொம்மன் வயோதிபர் மகனுடனும் மாப்பிள்ளை வன்னியம் மற்றும் சக்கரலிங்கம்பிள்ளையுடனும் சேர்ந்து திட்டம் தீட்டினான்.

எவ்வாறோ திட்டத்தை அறிந்துக்கொண்ட சிவகிரி வயோதிபர் சிவகிரியை விட்டு கிளம்பி தன் நண்பரான சேத்தூர் பாளையக்காரனிடம் சென்று தஞ்சமடைந்தார். இவ்வாறு தனது தந்தை ஓடிப்போய்விடவே மகன் சிவகிரி பாளையத்தில் பாளையக்காரனாக பட்டம் பெற்றதுடன் மாப்பிள்ளை வன்னியனுக்கு மந்திரிபதவியையும் சக்கரலிங்கம் பிள்ளைக்கு பிரதானி பதவியையும் வழங்கப்பட்டது. அத்துடன் திருப்;தி அடையவில்லை. சிவகிரி வயோதிபரினால் மகனுக்கு ஆபத்து வரும் என்று கூறினான் கட்டபொம்மன் . அதற்காக சேத்தூர் பாளையத்திற்கு சூழ்ச்சி கடிதம் எழுதி அனுப்பினான்.

“சிவகிரி பெரியவருக்கும் அவர் மகனுக்கும் நேர்ந்துள்ள பகைமையைக் கண்டு அவன் மனம்         வருந்துவதாயும் அவ்விருவரையும் மீண்டும் ஒற்றுமைப்படுத்தி வைக்க தான் ஆசைப்பட்டதாகவும் தான் இருவருக்கும் பொதுவான நண்பனே தவிர எந்தக் கட்சியிலும் சேர்ந்தவர் அல்ல என அக்கடிதத்தில் எடுத்துக் கூறினார்.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மை என நம்பிய சேத்தூர் பாளையக்காரரும் சிவகிரி முதியவரும் சமாதானப் பேச்சுக்காக கட்டபொம்மனையும் தன் மகன் மாப்பிள்ளை வன்னியன், சக்கரலிங்கம் ஆகியோரைக் சேத்தூர் பாளையத்துக்கு வரவழைத்தார். கட்டபொம்மன் திட்டப்படி சமாதானப் பேச்சுக்கள் முடிந்துவிட்டதால் சேத்தூர் பாளையக்காரர்கள் மகிழ்ச்சியியை வெளிப்படுத்தும் வகையில் பெரிய விருந்து வைத்தார். விருந்தில் மதுவும் பரிமாற்றப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி; கொண்ட கட்டபொம்முவின் ஆட்கள் சேத்தூர்காரனால் தரப்பட்ட மதுவில் இரகசியமாக மயக்கமருந்து கலந்து மயக்கமுற செய்ததன் பின்னர் சேத்தூர் பாளையக்காரனை தன் வாளால் வெட்டியது மட்டுமல்லாமல் அவன் மனைவி மக்களை ஈவிரக்கமில்லாமல் அற்பக் காசுக்காக கொலை செய்தான் கட்டபொம்மன். பின்னர் சிவகிரி வயோதிபரை கடத்தி சிவகிரி சிறையில் விலங்கிட்டு வைத்தான்.

சிறையில் இருந்தவாறே இவர்களை அடக்குவதற்கு கம்பனியாருக்கு இரகசியமாக ஓர் ஓலையை எழுதி ஒர் நம்பகமான ஆள் மூலம் திருநெல்வேலி கலக்டருக்கு அனுப்பி வைத்தான். அதன்படி கலக்டர் டோரின் கர்னல் மாக்ஸ்பெல்லை சேத்தூருக்கு அனுப்பினான். இதனைக் கேள்வியுற்ற கட்டபொம்மன் தன் நண்பன் சக்கரலிங்கம் பிள்ளைளையும் தனக்கு கைநிறைய லஞ்சம் கொடுத்த சிவகிரி வயோதிபர் மகனையம் நட்டாற்றில் விட்டுவிட்டு தன் படைகளோடு பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓடி போய்விட்டான். நயவஞ்சகத்திற்கும் கோழைத்தனத்திற்கும் பேர் போன பரம்பரையைச் சேர்ந்தவனையே நம்மில் சிலர் வீரத்தமிழன் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

கட்டபொம்மன் தன்னைக் கைவிட்டு ஓடியதும் சிவகிரிச்சின்னவனும் தன் தலை தப்பினால் போதும் என்று சிவகிரியை விட்டு ஓடிப்போனான். இவ்வாறு எல்லோரும் ஓட்டமெடுத்துவிட்டபடியால் கர்னல் மார்க்ஸ்வெல்லும் அவனது கம்பனி படைகளும் எவ்வித எதிர்ப்பும் இன்றி சிவகிரிக்குள் புகுந்து சிறையில் இருந்த பெரியவரை விடுதலை செய்து மீண்டும் சிவகிரி பாளையக்காரராகப் பதவியலமர்த்தினான்.  எனினும் இக்கொலை குற்றத்திலிருந்து அப்போதைக்கு தப்பித்துக் கொண்டான் கட்டபொம்மன்.

இதன்பின்பு அக்காலத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய கொள்ளைக்கூட்டத்தினர் பலரை கட்டபொம்மன் தன் படையிலே சேர்த்துக்கொண்டான். அவர்களது துணையோடு சென்று எட்டயபுரத்துக்கு சொந்தமான பல கிராமங்களிலும் மற்றும் ஆழ்வார்திருநகர், ஸ்ரீவைகுண்டம் போன்ற இடங்களிலும் அவன் புகுந்து சூறையாடினான். அங்குள்ள கோயில்களைக் கூட அவன்விட்டு வைக்கவில்லை. பெண்களையும் குழந்தைகளையும் கூட துன்புறுத்தி அவர்கள் அணிந்திருந்த சிறு சிறு நகைகளைக் கூட அவன் பறித்துக் கொண்டான். தாய்மார்கள் காலில் போட்டிருந்த மிஞ்சி என்கிற சிறிய வெள்ளி வளையங்களையும் அவன் விட்டு வைப்பதில்லை. பாஞ்சாலங்குறிச்சியான் மிஞ்சியையும் விடமாட்டான் என்பது அக்காலத்தில் வழங்கி வந்த பழமொழியாகும்.

அவன் கொள்ளைக்கு செல்லும் போது கம்பனி படைகளோ அல்லது பிற பெரிய பாளையங்களின் படைகளோ எதிர்ப்படுமாயின் அவன் அவர்களை எதிர்க்க துணியமாட்டான். நேரே பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓடிவந்து விடுவான். நிராயுத பாணிகளான குடியாவர்களிடத்திலும் பெண்களிடத்திலும் தான் அவன் வீர தீர சூர பராக்கிரமங்களைக் காட்டுவது வழக்கம். அந்தக் கோழையைத் தானே நாம் இன்னும் பாரத தேசத்தின் முதல் முழக்க வீரன் என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒப்பிலக்கணம் எனும் உயரிய நூலை இயற்றிய பெரியார் கால்டுவெல் பாதிரியார் திருநெல்வேலிச் சீமையில் வாழ்ந்தவராவார். அவர் திருநெல்வெலியின் வரலாறு என்ற ஓர் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அந்நூலில் கட்டபொம்மன் பற்றி குறிப்பிடுவதாவது, “அந்த பாளையக்காரன் தமது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் இருந்து ஆயுதமேந்திய துணைவர்களுடன் புறப்பட்டுச் சென்று, சர்க்கார் கிராமங்களிலும் பிற பாளையக்காரர்களின் கிராமங்களிலும் புகுந்து தாக்கி, தம் கண்ணில்பட்டவற்றையெல்லாம் கொள்ளையடிப்பான். பல சமயங்களில் முக்க்pயமான கிராமத்து தலைவர்களைத் தூக்கிக் கொண்டு போய்விடுவான்.”

ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்பனி பட்டாளத்தில் தலைவனாக இருந்த காப்டன் டைட்டன் என்பவர் எழுதிய கடிதத்தில் “ஒருமுறை கண்டிப்பான உத்தரவும் மற்றோர் முறை தலையிடாக் கொள்கையும் கம்பனி அரசு கடைபிடித்து வருகிறது. இக்கொள்கையால் சுற்று வட்டார மக்கள் கம்பனி மீது வைத்துள்ள நம்பிக்கையும் நன்மதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. பாளையக்காரர்களால் நவாபுக்கும் பின்பு கம்பனிக்கும் வரிவசூல் முறையில் பல வசதிகள் இருந்திருக்கலாம். ஆனால் இன்று பாளையக்காரர்கள் ஒருவர் பகுதியில் மற்றொருவர் புகுந்து கொள்ளையிடுவதையும் நிராயுதபாணியான பொதுமக்களை கொடுமை செய்வதையும் படுகொலை புரிவதையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குறிப்பாக பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் செய்து வரும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. கம்பனியின் கட்டளை என் கைகளைக் கட்டி போட்டிருக்கிறது. இப்பகுதிமக்கள் ஆள்பவர் யார் என்பதை பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதை விட யார் நீதியுடனும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் ஆட்சி செலுத்தக் கூடியவர்கள் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். வலிமை பெற்றவர்களின் கொடுமைகளிலிருந்து இந்தப் பரிதாபகரமான குடிமக்களைக் காக்கும் பணியில் கம்பனி கவனம் செலுத்தினால் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் நாம் நிச்சயமாகப் பெறமுடியும். இதனால் கம்பனிக்கே பெரும் பலன் ஏற்படும். இக்கடிதம் ஓரளவு அன்று தென்னகத்தில் நிலவிவந்த அவலநிலையை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. கம்பனியின் நலனில் அக்கறை கொண்ட ஒர் ராணுவ தளபதி தன் மேலதிகாரிகளுக்கு எழுதியுள்ள அந்தரங்கமான அரசியல். இதில் குறிப்பிடப்பட்டுள்ள எதையும் கட்டபொம்மன் மீதுள்ள பகைமையினால் வெள்ளைக்காரன் வேண்டுமென்றே எழுதிவைத்த பொய்யுரையென்று புறக்கணித்துவிட முடியாது.

வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்த குறிப்புக்கள் ஒரு புறமிருக்க அக்காலத்துத் தமிழ் கவிஞர்கள் தந்துள்ள சில கருத்துக்களில் கட்டபொம்மன் பற்றி அறியலாம். கட்டபொம்மன் கும்மியென்ற நூல் ஒன்று இருக்கிறது. அந்நூலில்
வேட்டைக்குப் போறதும் கோட்டைக்கு வாராதும்,
விஸ்தாரமாய் விளையாடுவதும்,
நாட்டிகமாய்ச் சேவல் கட்டுவதும், துரை
தன்னரசாய்ச சீமையாளுவதும்,
கம்பனிக்கே கிஸ்தி கட்டாமல் வெகு
கூட்டங் குவிதலாய்தான் கூடி
செம்பாதி ராத்திரி வேளையிலே தினம்
தீவட்டிக் கொள்ளையடிப்பதும்,
வில்லும் கையுமாய்த் திரிவதும், வரி
வேங்கைப் புலிபோல் வருவதும்,
தொல்லுலகில் கட்டபொம்மு துரைசெய்தி
சொல்லமுடியாது மெல்லியரே!!!


இந்தக் கும்பி பாடலை பாடிய புலவர் கட்டபொம்மன் பகைவரல்ல. அதற்கு மாறாக அவனை பாராட்டி புகழ்ந்து பாடப்பட்ட கும்மி இது. எனினும் கவி, தன்னையும் அறியாமல் அவனுடைய உண்மைக் குணாதிசயங்களை சிற்சில இடங்களில் வெளிப்படுத்திவிடுகிறார் என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. கட்டபொம்மன் கொள்ளையடித்து வாழ்ந்ததும் மக்களைக் கொடுமைப்படுத்தியதும் யாராலும் மறுக்க முடியாத சரித்திர நிகழ்ச்சிகள்.

கட்டபொம்மனைப் பாராட்டியெழுதியுள்ள சரித்திர ஆசிரியர்களில் உருவரான திரு.தி.நா. சுப்ரமணியம் அவர்கள் தம்முடைய கட்டபொம்மு என்ற நூலிலே அவனுடைய கொடிய இயல்புகளைப் பற்றி கொஞ்சம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

1797.மார்ச். 10 போஷ்இஷ் கலெக்டராக W.C.ஜாக்சன் என்பவன் நியமிக்கப்பட்டான். ஆட்சிக்கு வந்த கலெக்டர் W.C.ஜாக்சன் பலமுறை வரிப்பணத்தை செலுத்தும்படி பலமுறை எச்சரிக்கை கடிதம் அனுப்பினான். ஆனால் கட்டபொம்மன் எந்த பதிலும் அனுப்பவில்லை. இதனால் சீற்றம் கொண்ட கலெக்டர் ஜாக்சன் இனியும் அவன் வழக்கம் போல கீழ்ப்படியாமல் இருந்துவிட்டால் அவனைப் பாளையக்காரன் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துவிட்டு வேறொருவனை அப்பதவியில் நியமிக்க திட்டமிட்டான். அதன்பிறகு 1798 ஆகஸ்ட் 18 ஆம் நாளன்று ஜாக்சன் துரை கட்டபொம்மனுக்கு ஓர் உத்தரவு அனுப்பினான். செப்டம்பர் 05ஆம் திகதிக்குள் கட்டபொம்மன் இராமநாதபுரம் வந்து கலெக்டரின் கச்சேரியில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவன் அழிவு நிச்சயம். இது சென்னனையில் உள்ள மேலிடத்தின் உத்தரவு என்று எழுதப்பட்டிருந்தது.

தன்னுடைய பாளையத்தைப் பறிமுதல் செய்து ஜாக்சன் அதை வேறு யாருக்காவது கொடுத்துவிடக்கூடும் என்ற பெரும் பீதி கட்டபொம்மனுக்கு ஏற்பட்டதால் அதை தவிர்ப்பதற்காகவே கலெக்டர் ஜாக்சனைக் காண போவதற்குரிய ஏற்பாடுகளை அவன் செய்தான். அவன் வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாகக இருந்திருந்தால் கட்டபொம்மன் கலெக்டரைக் காணப்போயிருக்க தேவையில்லை. கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்திருக்கலாம். அவன் ஆங்கில கம்பனியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்று சொல்லவும் இல்லை. மாறாக வரி செலுத்துவதற்கு தவணைகள் தான் கேட்டிருக்கிறான்.

ஆனால் கட்டபொம்மன் கலெக்டர் ஜாக்சனை சந்தித்த நிகழ்வை திராவிடர்கள,; கம்பனியின் வரி வசூலிக்கும் கலெக்டரான ஜாக்சன் என்பான் ஒரு வாரத்திற்குள் தனது இருப்பிடம் வந்து தன்னைக் கண்டு பேசவேண்டுமென இரு தூதுவர்கள் மூலம் கட்டபொம்மனுக்கு செய்தி அனுப்பினதாகவும். செய்திப்படி நடக்க வீரபாண்டியனுக்கு மனமில்லை. அத்துடன் சுற்றிலுமுள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் ஆங்கிலேயருக்கு அடிமையாகி விட்டதால் கலெக்டரைப் பார்ப்பதன் மூலம் பகைமையைக் குறைக்கலாம் என நம்பினதாகவும் 1798 ஆகஸ்டு 24 தளபதிகள் முன் செல்ல தம்பிமார் புடைசூழக் கலெக்டரைக் காண திருநெல்வேலி சென்றான் வீரபாண்டியன் எனவும் கூறுகின்றனர்.

செப்டம்பர் 05ஆம் திகதி தான் வீரபாண்டியன் கட்டபொம்மனை இராமநாதபுரம் வந்து பார்க்கும் படி ஜாக்சன் உத்தரவு போட்டிருந்தான். ஆனால் அதற்கு முன்பே கலக்டரைக் சந்திக்க வேண்டும் என துடிப்புற்றதோடு தனியே சென்றால் தனக்கு ஆபத்து நேரமென்று பயத்தினாலே தன்னுடைய படைவீரர்கள் 4000 பேரைத் துணைக்கு அழைத்துச் சென்றான். அதனைப் பற்றி அக்காலத்தில் வாழ்ந்த சிலரது குறிப்புக்களில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த இராமநாதபுரம் பேட்டியை அவனது வீரத்திற்கும் தீரத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக திரித்த கூறு முற்படுகின்றார்கள். கலெக்டரை காணப்பதற்காக அவர் செல்லும் இடம் எல்லாம் பின்தொடர்ந்து சென்று ஒருவாறு  இராமநாதபுரத்தில் கலெக்டரை சந்தித்து வரிப்பணத்தைக் கொடுக்கவும் சம்மதித்தான் இதுவே உண்மை. ஆனால்  திராவிடர்கள் கலெக்டர் ஜாக்சன் கிஸ்திப்பணத்தைக் கேட்டதும் “வானம் பொழிகின்றது, பூமி விளைகின்றது மன்னவன் கணக்கு ஏது கிஸ்தி? என்று வீர வசனங்களை கட்டபொம்மன் முழக்கமிட்டதாக திரித்துக் கூறி வரலாறு தெரியாத மக்களை ஏமாற்றுகின்றார்கள். இவ்வாறே சிவாஜி நடித்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்திலும் காட்டிருப்பார்கள். இவ்வாறு உண்மையைத் திரித்துக்கூறி பொய்மையை பெருக்கிக்காட்டி கோழையை வீரனாகவும் பணிந்து போனவனைக் வணங்காமுடியனாகவும் போலிச் சித்திரங்கள் தீட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர். சென்னை ஆவணக்காப்பகத்தில் இன்றும் ஜாக்சன் - கட்டபொம்மன் உரையாடல் உள்ளதாக கட்டபொம்மன் கொள்ளைக்காரன் எனும் நூல் ஆசிரியர் தமிழ்வாணன் குறிப்பிடுகின்றார். .

இச்சந்திப்பு முடியும் தருவாயில் கம்பனியின் மேலிடத்தில் உத்தரவு வரும்வரை இராமநாதபுரத்திலே தங்கியிருக்கும்படி ஜாக்சன் கட்டபொம்மனிடம் கூறவே தன்னை இராமநாதபுரத்திலே கைதியாக சிறை வைக்க சூழ்ச்சி செய்வதாக எண்ணிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்கு தப்பி ஓடினான். பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த பின்பும் தனது குலத்தாெழிலான கொள்ளையினை இராமநாதபுரத்திலும் சுற்றுப்புறத்திலும் புகுந்து மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டான். எனினும் திருச்சி சம்பவத்தின் பின்னர் கட்டபொம்மன் பிழையற்றவன் என்று கம்பனி கூறியபின்னர் கட்டபொம்மன் கம்பனியின் விசுவாசமுள்ள பாளையக்காரரனாக அங்கீகரிக்கப்பட்டான்.

ஜாக்சன் துறைக்குப்பின்னர் தென்பாண்டிநாட்டில் கலெக்டர் லூஷிங்டன் என்பவன் நியமனம் செய்யப்பட்டான். இதன் பின்னரும் கட்டபொம்மன் மீது பல புகார்கள் வந்தவண்ணமிருந்தன. இந்நிலையில் இராமநாதபுரம் பாளையக்காரான முத்துராமலிங்க சேதுபதி கம்பனியின் ஆட்சியை எதிர்த்து ஒரு புரட்சிக்கான ஆயுதங்களை அவர் இரகசியமாக சேகரித்தனர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கட்டபொம்மன் டச்சுக்காரரிடம் தான் வாங்கி சேர்த்து வைத்திருந்த ஆயுதங்களை கொள்ளை இலாபத்திற்கு சேதுபதிக்கு விற்றான். எனினும் புரட்சி முழு அளவில் தொடங்கப்படுவதற்கு முன்னரே சேதுபதியை கம்பனியார் நாடுகடத்தினர். கம்பனியார் நடத்திய விசாரணையில் சேதுபதிக்கு கட்டபொம்மன் ஆயுதங்களை விற்ற செய்தி வெளியாயிற்று. இதன்பின் மேஜராக பானர்மேன் பதவிக்கு வந்தான். அவனுக்கு கம்பனி முழு அதிகாரத்தைப் பிரயோகிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. கட்டபொம்மவின் மீது இருந்த புகார்களினால் கோபமுற்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை தாக்கினான். எனினும் கட்டபொம்மு ஓர் 50 வீரர்களுடன் தன்கோட்டையை விட்டு வெளியேறினான். கட்டபொம்மன் தப்பியோடிய மறுநாளே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ச்சி அடைந்து விட்டது. கட்டபொம்மனின் மனைவி மற்றும் குடும்பபெண்கள் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டனர். கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் கூறுவது போல் கட்டபொம்மன் தன்கோட்டையை விட்டு ஓடியது ஆங்கிலேயரை மீண்டும் எதிர்த்துக் போராடுவதற்கு அல்ல.

தப்பிஓடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் இருந்து கைது செய்யப்பட்டு 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதி கயத்தாறுக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடாத்தப்பட்டது. உடனே பானர்மென் ஊருக்கு பக்கத்தில் அமைந்திருந்த ஒரு பழைய கோட்டையின் சமீபத்தில் ஒரு பெருவழியின் ஓரத்தில் நின்ற கட்டை புளியமரத்தில் தூக்குமேடை அமைக்கப்பட்டது. தூக்கு மேடையை அடைந்ததும் கட்டபொம்மன் தான் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு ஓடிப்போயிருக்காமல் அங்கேயே இறுதிவரை நின்று சண்டையிட்டு மடிந்திருந்தால் எவ்வளவோ பெருமையாக இருந்திருக்குமோ என்று வாய்விட்டுக் கூறி வருந்தினான்.

கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றிங்களைக் மறுக்கவும் இல்லை. உயிர்பிச்சைக்கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு எனது தாய்மண்ணைக் காப்பதற்காக வெள்ளைத்தோல்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன் என முழங்கியதாக கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் பரப்பி விட்ட கட்டுக்கதையே.

தமிழ்மண்ணின் பழங்குடி மகனாகிய புலித்தேவன் போன்றவர்கள் தம் சொந்த இலாபம் எதையும் கருதாது வெள்ளையர்களை எதிர்த்து விடுதலைப்போர் புரிந்து மாற்றான் குருதியையும் தம் குருதியையும் இந்த மண்ணில் ஆறாகிப் பெருகி மடிந்து வீழ்ந்த வீரகாவியத்தையும் நாம் அறிந்திருப்போம். அதே சமயத்தில் வந்தவர்களுக்கு எல்லாம் மண்டியிட்டு சொந்த நாட்டு மக்களுக்கு துரோகம் பல இழைத்து கொள்ளையையும் கொலையையும் குலத்தொழிலாக கொண்டு இறுதியில் தன்னுடைய தீச்செயல்களால் கம்பனியின் பகைமையைத் தேடிக் கொண்டு தான் அவர்களுக்கு பணிந்த போக விரும்பியும் அவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் போக தன்னுடைய தீவினைகளே திரண்டு வந்து தூக்கு கயிறாகி உயிர்நீத்தவனே கட்டபொம்மன். இப்படிப்பட்ட ஒரு கோழையையே சரித்திரம் இன்றும் வெள்ளையனை எதிர்த்த முதல் தமிழர், மாவீரன் என போற்றிக் கொண்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் இதிலிருந்து யாரை போற்ற வேண்டும் என சிந்தித்துக் கொள்ளுவோம்.

சுரேஸ்குமார் சஞ்சுதா


4 comments:

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...